PUBLISHED ON : டிச 09, 2018

புகழ்பெற்ற, ஏவி.எம்., நிறுவனத்தை உருவாக்கி, பல வெற்றி படங்களை தயாரித்த, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகன்களுள் ஒருவரான, ஏவி.எம்.குமரன், தன் தந்தை பற்றியும், அவர் தயாரித்த திரைப்படங்கள் பற்றியும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
இந்திய திரையுலக வரலாற்றில், ஒரு சகாப்தமாக விளங்கியவர், என் அப்பா, ஏவி.மெய்யப்பன் செட்டியார். ஆவிச்சி செட்டியார் - லட்சுமி ஆச்சி தம்பதியின் மகனாக, ஜூலை, 28, 1907ல், காரைக்குடியில் பிறந்தார்.
தாத்தா ஆவிச்சி செட்டியாருக்கு, கண் பார்வை பாதிக்கப்பட்டதால், தொழிலில் உதவியாக இருந்து, 8ம் வகுப்புடன், பள்ளிப் படிப்பை தியாகம் செய்தார், என் அப்பா. ஆங்கில மொழி தெரியாத, அப்பா, அகராதியின் துணையுடன், தினமும், 'இந்து' நாளிதழில் வரும் தலையங்கத்தை படித்தே, ஆங்கில புலமையை வளர்த்துக் கொண்டார்.
முதன் முறையாக, 'ஏவி அண்ட் சன்ஸ்' என்ற பெயரில், கார் மற்றும் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனையகத்தை, காரைக்குடியில் துவக்கினார்.
அவை மட்டுமின்றி, கிராமப்புறங்களில் மிகவும் அரிதாக கிடைக்கும் பொருட்களான 'ஹார்லிக்ஸ், கிராமபோன் ரிக்கார்டு'கள், புகைப்பட சுருள்கள், சாக்லெட் மற்றும் மருந்துகளை சென்னையிலிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்தார். முதல் முறையாக,'டியூப் லைட்'டை, காரைக்குடியில் அறிமுகப்படுத்தியவரும் அவரே.
தொழிலை விரிவுபடுத்த, சென்னை, கோல்கட்டா மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செய்வார். கண்ணில் படும் அல்லது புதிதாக அறிமுகமாகும் எந்த ஒரு பொருளையும், தமிழக மக்களுக்கு உடனே கிடைக்குமாறு எடுத்து வந்து சேர்ப்பதில், அதீத ஆர்வம் உள்ளவராக இருந்தார்.
சென்னை, அன்றைய மவுண்ட் ரோடில், 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில், தென் மாநில விற்பனை உரிமையை பெற்று, 'கிராமபோன் ரிக்கார்டு'களின் விற்பனையை துவக்கினார்.
திரைப்படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட விரும்பினார்.மேற்கு வங்க மாநில தலைநகரான, கோல்கட்டாவில், 'நியூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோஸ்' என்று, ஒரு இடம் இருந்தது. அதில், படப்பிடிப்பு தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, 'செட்' அமைத்து, அல்லி அர்ஜுனா என்ற பெயரில், படம் தயாரித்து, இயக்கினார்.
படப்பிடிப்பு முடிந்தது. படமாக்கப்பட்ட காட்சிகளை, 'எடிட்டிங்' செய்வதற்கும், ஒளிப்பதிவான பிலிமையும், நடிகர்கள் பேசிய வசனங்கள் ஒலிப்பதிவான பிலிமையும், சமன் செய்தபோது, ஒன்றுக்கொன்று பொருந்தி வரவில்லை. அவருக்கு, 'எடிட்டிங்' தெரிந்திருந்ததால், 'மூவியாலா' கருவியில் இரண்டு பிலிம்களையும் இணைத்து, அல்லி அர்ஜுனா படத்தை, தமிழகத்தில், வெளியிட்டார். ஆனால், அப்படம் வெற்றி பெறவில்லை.
தரமான கேமரா, 'பிளே பேக்' கருவிகள் இல்லாமல், படம் சரியாக ஓடாததாலும், கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய பின், 'பிரகதி ஸ்டுடியோஸ்' என்ற பேனரில், 'பிரகதி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கினார்; நண்பர்கள் இருவரை பங்குதாரர்களாக சேர்த்து, படம் எடுக்க ஆரம்பித்தார். பங்குதாரர்கள் இருவரும், வேறு தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அப்பா மட்டுமே படத் தயாரிப்பில், முழுப் பொறுப்பையும் ஏற்றார்.
'பிரகதி பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில், ஏவி.எம்., இயக்கிய முதல் திரைப்படம், சபாபதி. பம்மல் கே.சம்பந்த முதலியார், கதை, வசனம் எழுத, ஆர்.சுதர்சனம் இசையமைத்தார். கதாநாயகன், டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்தினம், கே.சாரங்கபாணி, சி.டி.ராஜகாந்தம் மற்றும் ஆர்.பத்மா ஆகியோர் நடித்திருந்தனர். நல்ல படம் என்று பெயரெடுத்ததுடன், வெற்றி படமாகவும் அமைந்தது.
அடுத்து, அப்போது, பிரபலமாக இருந்த நாகர்கோவில், கே.மகாதேவன் கதாநாயகனாகவும், ஆர்.பத்மா கதாநாயகியாகவும், கே.சாரங்கபாணி மற்றும் கே.ஆர்.செல்வம் ஆகியோர் நடிக்க, ஆர்.சுதர்சனம் இசையில், சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில், என் மனைவி என்ற படத்தை தயாரித்தார், அப்பா. இப்படம், சுமாராக ஓடியது.
இதையடுத்து, ஸ்ரீவள்ளி என்ற படத்தை, 1945ல் இயக்கி, தயாரித்தார். தமிழகம் எங்கும், ஸ்ரீவள்ளி படம், பிரமாண்ட வெற்றி கண்டது.
அப்போது, இரண்டாம் உலகப் போரின் கடுமை, இந்தியாவையும் வெகுவாக பாதித்தது. பிரிட்டீஷ் அரசு, பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, மின்சாரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு. வீடுகளுக்கு மட்டுமே ஓரளவு மின்சாரம் வழங்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு மேல் எங்குமே மின்சாரம் இல்லை என்ற நிலைமையாயிற்று. இதனால், சினிமா தயாரிப்பு முதல், எல்லா தொழில்களும் பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில், 'பிரகதி பிக்சர்ஸ்'சில் பங்குதாரர்களாக இருந்த நண்பர்கள், படக் கம்பெனியின் லாப கணக்கை தெரிவித்து, அதை தங்களுக்கு பிரித்து கொடுக்குமாறு, அப்பாவை நெருக்கினர். பங்குதாரர்களின் பங்கை, அவரவர்களிடம் ஒப்படைத்து, காரைக்குடிக்கு பயணமானார்.
— தொடரும்.
- ஏவி.எம்.குமரன்

