
உஷார்... உஷார்...
கணினியில், முகநுால் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தோழியின் புகைப்படம் வந்தது. முன்பே என் நட்பில், முகநுாலில் இருக்கிறாள் என்பதால், போன் செய்து, 'புது முகநுால், ஐ.டி., ஏதாவது இருக்கிறதா...' என்று கேட்டேன். 'இல்லை...' என்றாள். நான் பார்த்த, அவளது புகைப்படம் உள்ள பக்கத்தை, அவளுக்கு அனுப்பினேன்.
அவளது புகைப்படம் மட்டுமின்றி, உறவு பெண்கள் பலரின் படங்களும், அந்த முகநுாலில் இருந்தன. அதிலும், சில படங்கள், படு கவர்ச்சியாக இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.
சிறிது யோசனைக்கு பின், ஆறு மாதங்களுக்கு முன், அவளுடைய மச்சினன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் என தெரிந்தவுடன், கணவரின் கவனத்திற்கு எடுத்து சென்றாள்.
மச்சினன் திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க வந்த, 'ஸ்டுடியோ'விற்கு சென்று, கேமராமேனை விசாரித்தார், அவளது கணவர். அந்த கடையில் வேலை செய்த பையன், திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில், பல கோணங்களில் எடுத்த பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை, முகநுாலில் பதிவு செய்த விஷயம் தெரிய வந்தது.
அதன்பின், அவன் பதிவிட்டிருந்த முகநுால் பக்கங்களை நீக்கி, அந்த பையனை கண்டித்ததோடு, வேலையை விட்டும் நீக்கினார்; புகைப்பட கலைஞர்கள் சங்கத்தில், நடந்ததை சொல்லி, 'இனி, யாரும் அவனை பணியில் சேர்க்க வேண்டாம்...' என்ற கோரிக்கையும் வைத்தார், 'ஸ்டுடியோ' நிர்வாகி.
'செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்காமல், இதுபோன்றோர் இருக்கின்றனரே... இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லையே... எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், எங்கிருந்தாவது புது புது பூதம் கிளம்புகிறதே...' என, வருந்தினாள், தோழி.
— நா.பத்மாவதி, ஜோலார்பேட்டை.
பேரனின் பாசம்!
சமீபத்தில், என் தோழியின் மகன் காணாமல் போய் கிடைத்த செய்தி அறிந்து, விசாரிக்க சென்றேன்.
தோழியின் மகன், ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்; 10 வயது, ஒரே பையன். சில நாட்களுக்கு முன், என் தோழிக்கும், அவள் மாமியாருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தோழியின் நெருக்கடி தாங்காமல், விதவை தாயை, முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார், அவள் கணவர்.
பாட்டியை வீட்டிற்கு அழைத்து வர, பலமுறை பெற்றோரிடம் கேட்டும், பலனில்லாமல் போகவே, அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த பேரன், மனம் நொந்து போயுள்ளான். இதனால், பள்ளி விட்டவுடன், முதியோர் இல்லத்திலிருந்த பாட்டியை பார்க்க சென்றுள்ளான்.
முதியோர் இல்லத்திலிருந்து, தகவல் வந்து, மகனை அழைத்து வர சென்றனர். அப்போது, 'பாட்டி இல்லாமல், நான் வீட்டுக்கு வரமாட்டேன்...' என, அடம்பிடிக்க, செய்வதறியாது தவித்த தோழியும், அவள் கணவரும், பாட்டியையும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
கருவிலே சுமந்து, இமை போல் காத்து, உதிரத்தை பாலாக்கி உருவாக்கிய தாயை, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது முறையல்ல என்பதையும், பாட்டி மீது வைத்துள்ள பாசத்தில், ஒரு பங்கு கூட, தன் மீது மகனுக்கு இல்லையே எனவும், வருந்தினாள், தோழி.
அதிலிருந்து, மாமியாரிடமும், மகனிடமும், அன்புடன் இருக்க ஆரம்பித்துள்ளதாகவும், இப்போது, சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினாள், தோழி.
மாமியாரை தாயாகவும், மருமகளை மகளாகவும், மன வேறுபாடின்றி, இருவரும் நினைத்து விட்டால், மனமாச்சரியங்களுக்கு இடமே இல்லை. பெற்ற தாயை, முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன்களுக்கு, இது ஒரு பாடம்!
— மா.செண்பகம், மதுரை.
தேவை அடையாள அட்டை!
இன்றைய சூழலில், சிறிய மருத்துவமனை துவங்கி, பெரிய மருத்துவமனை வரை, தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, 'அடையாள அட்டை' வழங்குவது வாடிக்கையாகி விட்டது.
அடையாள அட்டையில், பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என, பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவையெல்லாம் சரி தான். ஆனால், மொபைல் எண், நோயாளிக்கு உரியதாக இருப்பதால், என்ன பயன்?
நோயாளிகள், தீவிர சிகிச்சை பெறும் காலத்திலோ, மயக்கம் போன்ற நிலைகளிலோ, குடும்பத்தினருக்கு, தகவல்களை தெரிவிக்க முடியாது. எனவே, நோயாளியின் மொபைல் எண்ணுடன், அவரது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் என, கூடுதலாக ஒருவரின் மொபைல் எண்ணையும், அடையாள அட்டையில் பதிவு செய்தால், ஆபத்து நேரத்தில், தகவல் தொடர்புக்கு உதவியாக இருக்கும்.
மருத்துவமனை நிர்வாகங்கள், இது பற்றி சிந்திக்குமா?
ஆர்.மீனா, மதுரை.

