sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 03, 2019

Google News

PUBLISHED ON : பிப் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா

ஒரு வேலை விஷயமாக, அரசு பணியில் உள்ள நண்பரை சந்திக்க, நானும், குப்பண்ணாவும் அவரது வீட்டுக்கு சென்றிருந்தோம்.

நாங்கள் சென்றிருந்த நேரம், வீடே போர்க்களமாக காட்சியளித்தது. நண்பரது,இரண்டு வயது பேத்தி, எதையோ கேட்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். நண்பர் குடும்பத்தினர் அனைவரும், அவளை சுற்றி நின்று, சமாதானப்படுத்தியபடி இருந்தனர்.

இந்த களேபரத்துக்கு இடையிலும், எங்களை வரவேற்று, அமர செய்தார், நண்பர்.

நண்பரின் பேத்தி, தொடர்ந்து, 'ஒண்ணொன்னா... ஒண்ணொன்னா வேணும்...' என்று கேட்டு அழுதது.

நண்பரும், அவர் மனைவியும், பல விளையாட்டு பொருட்களை எடுத்து வந்து காட்டி, 'இதுவா... இதுவா?' என்று கேட்டனர். குழந்தை எல்லாவற்றையும் கோபமாக தள்ளிவிட்டு, 'ஒண்ணொன்னா...' கேட்டு, அழுகையை தொடர்ந்தது.

சாக்லேட் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை எடுத்து வந்து கொடுத்தனர். அவற்றையும் எட்டி உதைத்து, ஒண்ணொன்னா கேட்டு அழுதது.

நண்பர் வெறுத்து போய், பக்கத்து மேஜையில், காகித பொட்டலத்திலிருந்த அரிசி பொரியை அள்ளி, குழந்தை முன் போட்டு, 'அழுவாம, இதை சாப்பிடு...' என்று கத்தினார்.

குழந்தை ஆவலுடன், 'ஒண்ணொன்னா...' என்றபடியே, அழுகையை நிறுத்தி, அரிசி பொரியை எடுத்து தின்றது.

பிறகு தான் புரிந்தது. முதல் நாள், குழந்தை முன், பொரி கடலையை போட்டு, 'ஒண்ணொன்னா எடுத்து சாப்பிடு...' என்று சொல்லியிருக்கிறார், நண்பர். அதை தான், 'ஒண்ணொன்னா...' என்று குறிப்பிட்டுள்ளது, குழந்தை.

வீட்டிலிருந்தவர்கள், 'அப்பாடா...' என்பது போல், அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

இனி, குழந்தைகளிடம், எந்த ஒரு பொருளின், சரியான பெயரை குறிப்பிட்டு பேச வேண்டும் என்ற பாடத்துடன், நாங்கள் வந்த வேலையை முடித்து கிளம்பினோம்.

கே

குப்பண்ணாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஏதோ பேச்சு வாக்கில், 'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?' என்று சொல்லி விட்டேன்.

குப்பண்ணா சிரித்தபடியே, 'புலிக்குப் பிறப்பதும் பூனை தான். காரணம், பூனை, சிங்கம், புலி, சிறுத்தை ஆகிய எல்லாமே, பூனை இனத்தை சேர்ந்தது தான். இதில், அழகான விலங்கு, புலி தான். பார்ப்பதற்கு தான் அது அழகு; குணத்தில் கொடூரமானது. சிங்கம் தான் காட்டு ராஜா. ஆயினும், புலி வந்து விட்டால், அந்த இடத்தை விட்டு சிங்கம் வெளியேறி விடும்...' என்றார்.

'ஏன்... பயமா?' என்றேன்.

'அதெல்லாமில்லை... சிங்கத்தை விட சற்று பெரியது, புலி. அதே போன்ற வேகமும், பலமும் சிங்கத்திற்கு உண்டு. இரண்டும் போரிட்டால், எது வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.

'ஆனால், புலியின், மறைந்திருந்து தாக்கும் குணம் சிங்கத்திற்கு கிடையாது. வெளிப்படையாக, நேருக்கு நேர் போர் புரியும். சின்னஞ்சிறு குட்டி என்ற இரக்கங்கூட புலிக்கு கிடையாது; அதையும் கொல்லும். இக்குணம் படைத்த விலங்குடன் கூடி வாழ மனமின்றியே, சிங்கம் வெளியேறுகிறது...' என்றார், குப்பண்ணா.

'பெண் புலி தான் வேட்டையாடும். அது வேட்டையாடியதும், ஆண் புலி சாப்பிடும் என்கின்றனரே...' என்றேன்.

'இல்லை. சிங்க குடும்பத்தில் தான், அந்த பழக்கம். குட்டிகளோடு செல்லும் பெண் புலி, எந்த காரணமும் இன்றி குறுக்கிடும் விலங்குகளை கொன்று விடும். குட்டிகளுக்கு, வேட்டையாட கற்றுக் கொடுப்பதற்காக, முயல், பன்றி மற்றும் மான் முதலியவற்றை கொல்லாமல் பிடித்து வந்து, குட்டிகளிடம் விடும். இச்சமயங்களில் அது இழைக்கும் கொடூரத்திற்கு அளவே கிடையாது.

'தன்னிடம் சிக்கிய விலங்கை, சித்ரவதை செய்த பின்பே, கொன்று தின்னும், புலி. பூனை கூட, தன்னிடம் சிக்கிய கரப்பான் பூச்சியை எப்படியெல்லாம் கால்களால் தட்டி, புரட்டி, அது மல்லாந்து துடிதுடிப்பதை பார்த்து ரசித்து, ரொம்ப நேரத்திற்கு பிறகே தின்கிறது...

'தன் பசியை துாண்டிக் கொள்ளவே, அவை இப்படி செய்கிறதாம். ஆனால், சிங்கம் ஒரே அடியில் உயிரை போக்கி, சாப்பிட்டு விடும். ஆக, பூனை குடும்பத்தில் சிங்கம் கொஞ்சம், விலங்காபிமானி...' என்றார், குப்பண்ணா.

'ஹைதர் அலி, ஆற்காடு நவாபிற்கு, 18 அடி வேங்கை ஒன்றை பரிசாக கொடுத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்...' என்றேன், நான்.

'அதெல்லாம் சும்மா...' என்ற குப்பண்ணா, 'நாட்டுப்புற பாட்டில் கூட, 16 அடி வேங்கை என்று வரும். விலங்கியல் ஆராய்ச்சிப்படி எந்த புலியும், 12 அடி நீளத்திற்கு மேல் வளர்ந்ததாக செய்தி இல்லை...' என்றார்.



ஆங்கில இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தேன். புகழ்பெற்ற கார் நிறுவனம் ஒன்றை பற்றி சிறப்பு கட்டுரை வெளியாகி இருந்தது. உதவி ஆசிரியை உதவியுடன் படித்தபோது, கிடைத்த சுவாரசியமான தகவல் இது:

ஒரு பெரிய கார் நிறுவனத்தில், ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு, ஒரு கிடங்கில் அடுக்கப்பட்டிருந்தன.

மார்க்கெட்டுக்கு அதை வெளியே எடுத்து வரும்போது, சிக்கல் ஏற்பட்டது.

காரின் உயரத்தை விட, கிடங்கின் நுழைவு வாயிலின் உயரம் சற்று சிறிதாக இருந்தது. உள்ளே ஏற்றும்போது வராத பிரச்னை, வெளியே எடுத்து வரும்போது ஏற்பட்டது.

எப்படி வெளியே கொணர்ந்தாலும், மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறத்தில் கீறல் விழக்கூடும்.

'கீறல் விழுந்தால் பரவாயில்லை. மறுமுறை, 'பெயின்ட்' அடித்து, 'டபுள் கோட்' கொடுத்து விடலாம்...' என்றார், மேலாளர்.

'வேண்டாம். வாயிலின் மேற்புறம், ஒரு செங்கல் கனத்துக்கு இடித்து விடுவோம். பிறகு மீண்டும் சிமென்ட் பூசி விடலாம்...' என்றார், அக்கட்டடத்தின் இன்ஜினியர்.

இதையெல்லாம் பார்த்தபடி அங்கு நின்றிருந்த வயதான காவலாளி, 'அதெல்லாம் வேண்டாம்... கார் சக்கரத்தின் காற்றை இறக்கி விடுங்கள் சரியாக போய் விடும்...' என்றார்.

கேட்டுக் கொண்டிருந்த கார் நிறுவன இயக்குனர், பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தார்.

எப்பேர்பட்ட ஆலோசனை... இன்ஜினியர்களும், டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க, எவருக்கும் தோன்றாதது, ஒரு படிப்பறிவு இல்லாத காவலாளிக்கு தோன்றியது.

இவர்கள், தொழில்நுட்பத்தில் கரை கண்ட நிபுணர்கள். பெரிய பிரச்னைகளை எல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால், இந்த சிறிய பிரச்னை, அவர்களை திக்குமுக்காட வைத்து விட்டது.

அன்றிலிருந்து படித்தவன், படிக்காதவன் அனைவரிடமும் ஆலோசனை கேட்கும் பழக்கம், அனைத்து கார் நிறுவனங்களிலும், கட்டாய கடமையாகவே மாறி விட்டது, அங்கு. தற்போது, முன்னணியில் உள்ள பல நிறுவனங்களிலும் இது இயல்பான நடைமுறையாகவே உள்ளது.

படித்தவனெல்லாம் அறிவில் சிறந்தவனும் அல்ல; படிக்காதவனெல்லாம் முட்டாளும் அல்ல என்ற சொற்றொடர் நினைவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us