
* பி.வீரமோகன், மானாமதுரை:சென்னையில் உள்ள, சாலை நெருக்கடியில், 'சைக்கிளில்' எப்படி சமாளிக்கிறீர்கள்?
மஞ்சள் கோட்டை தாண்டக் கூடாது! இரு சக்கர வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வழியில் சென்றால், 90 சதவீதம் ஆபத்தில்லை! இரண்டு சக்கர, 'மோட்டார்' வாகனம் வைத்திருந்த பலர், இன்று, நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விட்டனர்; பழைய நினைவில், அவர்கள், இங்கும், அங்கும் புகுவது தான், ஆபத்தாக உள்ளது!
கோ.குப்புசுவாமி, சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டம்: மணி... சென்னையில் நடந்த, புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தீர்களா?
ஓ... சென்றிருந்தேன்! 'நாயகன்' புத்தகத்தை வெளியிட்ட, 'தாமரை பிரதர்ஸ்' கடையில், நானும், 'பாக்கெட் நாவல்' ஆசிரியர், அசோகனும் அமர்ந்து இருந்தோம்! அப்போது, எதிரே இருந்த கடையிலிருந்த பெண் வெளியீட்டாளர் ஒருவர், தன் உதவியாளர்களுடன், ஓடி வந்து, கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைக் கண்ட பார்வையாளர்கள், என்னை சூழ்ந்து, படம் பிடிக்க ஆரம்பித்தனர்; அந்த சூழலிலிருந்து மெதுவாகக் கழன்று கொண்டேன்!
* எஸ்.யாழினி, அச்சிறுபாக்கம், சென்னை: உங்களுக்கு பிடித்தது, கிராம வாழ்க்கையா... நகரத்து வாழ்க்கையா?
நீங்கள் கூறிய முதலாவது தான்; அங்கே, அதிக ஒலி, தண்ணீர் பிரச்னை கிடையாது; அதே போல், நகரத்தில் உள்ள பல தொந்தரவுகளும் நமக்கு கிடையாது! நீங்கள் கூறிய முதல் வாழ்க்கையையே நான் விரும்புகிறேன்; ஆனால், கிடைக்கவில்லையே!
* எஸ்.இளங்கோவன், ஈரோடு: பல கட்சிகளும், காங்கிரசுக்கு எதிராக கூட்டணி சேர்ந்து விட்டனவே... இனி, என்னாகும்?
அவர்களின் அடிப்படை நோக்கமே, ராகுல், பிரதமராகி விடக்கூடாது என்பது தான்! அவர்களில் யாரும் அப்பதவியை பிடித்து விடப் போவதில்லை! காங்., நிலை, அதோ கதி தான்!
எம்.சரஸ்வதி, மதுரை: சமையலைப் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்களே... உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?
'இரண்டை'யுமே சுவையாக நான் சமைப்பதாக, நண்பர்கள் கூறுவர். ஆனால், அதற்கான வாய்ப்பு இப்போது கிடைக்காமலேயே போய் விட்டது; காரணம் கேட்காதீர்!
ஓ.என்.ராமநாதன், மதுரை: ஆணையும், பெண்ணையும் ஒப்பிடும்போது, நீங்கள், பெண்களையே, 'சப்போர்ட்' செய்து எழுதுகிறீர்களே, ஏன்... நீங்கள், ஆணா, பெண்ணா?
நீங்கள், நான் எழுதும், பா.கே.ப., மற்றும் அதில் வெளியாகும் என் புகைப்படத்தை, இதுவரை பார்க்கவில்லை என, நினைக்கிறேன்! அதில் வெளியாகும் என் படங்களில், நான் அணிந்துள்ள உடைகளை பார்த்தால், உங்கள் சந்தேகம் தீரும்!