sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வரிசைகளை உடைத்து முன்னேறுபவர்கள்!

/

வரிசைகளை உடைத்து முன்னேறுபவர்கள்!

வரிசைகளை உடைத்து முன்னேறுபவர்கள்!

வரிசைகளை உடைத்து முன்னேறுபவர்கள்!


PUBLISHED ON : பிப் 03, 2019

Google News

PUBLISHED ON : பிப் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த புத்தக கண்காட்சிக்கு போனோன். அப்போது, எதிரில் இருந்த ராயப்பேட்டை மருத்துவமனையில், 'வெறும், 250 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம்...' என்ற அறிவிப்பைப் பார்த்து, அங்கு சென்றேன்.

முழு உடல் பரிசோதனை என்ற அறிவிப்புடன், இருந்த அந்த அறை மூடிக்கிடந்தது. அதற்கான நேரம் கடந்திருக்கலாம் என்று தோன்றியது. சரி, இன்னொரு நாள் பகலில் வந்து விசாரிக்கலாம் என்று கிளம்பி விட்டேன்.

காலையிலேயே எதுவும் சாப்பிடாமல், முடிந்தால் அன்றைக்கே முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள தயாராய் ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு கிளம்பிப் போனேன்.

மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, முழு உடல் பரிசோதனை செய்யும் கட்டடம் நோக்கி நடந்தேன். இருசக்கர வாகனங்கள் மானாவாரியாக நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சந்துக்குள் நுழைந்தபோது, எங்கிருந்தோ எனக்கு எதிரில் வந்த மூதாட்டி ஒருத்தி, ''இங்க உடம்பு மொத்தமும், 'செக் - அப்' பண்ணிக்கிற ஒரு இடம் இருக்காமே... அதுக்கு எப்படிப்பா போகணும்,'' என்றாள்.

''நானும் அங்க தான் போறேன்; என் கூட வாங்க பெரியம்மா,'' என்று, அவரையும் அழைத்து, முன்னேறினேன்.

முழு உடல் பரிசோதனை செய்யும் அறையில் இருந்த நாற்காலிகளில், நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர். உள்ளறை வாசலொன்றில், பச்சை சேலை அணிந்திருந்த பெண்ணிடம் விசாரித்தாள், மூதாட்டி.

''வெயிட் பண்ணுங்க... நர்சம்மா வந்து, 'அப்பாயின்ட்மென்ட்' தருவாங்க,'' என்றாள், ஆயாம்மா.

''இன்னைக்கே பண்ணிக்க முடியாதுங்களா?'' என்றேன்.

''இல்ல சார்... இன்னைக்கு ஏற்கனவே நிறைய பேர் இருக்கறாங்க,'' என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வெள்ளுடை அணிந்த நர்சம்மா, நீள குறிப்பு அட்டையுடன், அறைக்குள் பிரவேசித்தாள்.

நர்சம்மா வந்து உட்கார்ந்ததும், மூதாட்டி எழுந்து போய், ''எனக்கு, உடம்பு மொத்தமும், 'செக் - அப்' பண்ணிக்கணும்,'' என்றாள்.

''ஏற்கனவே, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கியிருக்கீங்களா,'' என்றாள், நர்ஸ்.

''இல்ல, இன்னைக்குத் தான் வந்துருக்கேன்,'' என்றாள்.

''அப்ப காத்துருங்க... இன்னைக்கு பண்ண வேண்டியவங்களுக்கெல்லாம் முடிச்சிட்டு, 10:00 மணிக்கு மேல தான் புது, 'அப்பாயின்ட்மென்ட்' தருவோம்,'' என்று, நர்சம்மா சொல்லவும், சோர்ந்து போய், என்னருகில் உட்கார்ந்த மூதாட்டி, ''ரெண்டு நாள் வேலை கெட்டுரும் போலிருக்கே,'' என்று, அலுத்துக் கொண்டாள்.

மூதாட்டியை பார்த்தால், படிப்பறிவு உள்ளவளாக தெரியவில்லை. அப்படி இருந்தும், முழு உடல் பரிசோதனை செய்யும் விழிப்புணர்வுடன் இருக்கிறாளே என்று ஆச்சர்யப்பட்டு, விசாரித்தேன்.

''இதெல்லாம் பத்தி எனக்கொண்ணும் தெரியாது தம்பி... என் புருஷன் தான் சொல்லிக்கிட்டே இருக்கும்... ஒரு நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து போயி மொத்த உடம்பையும், 'செக் - அப்' பண்ணிக்கலாம்ன்னு. ஆனால், அந்த மனுஷன் அதைப் பண்ணிக்காமலே செத்துப் போயிடுச்சு,'' என்று, கண் கலங்கினாள்.

''அய்யய்யோ... ரொம்ப சாரிங்க,'' என்றேன், வருத்தத்துடன்.

''புது, 'அப்பாயின்ட் மென்ட்'காக வந்துருக்கவங்க, எல்லாரும் வரிசையில வாங்க,'' என்று நர்சம்மாள் அறிவிக்கவும், அவசரமாக எழுந்து போய், முதல் ஆளாக நின்றாள், மூதாட்டி.

நான், அவளுக்கு அடுத்து நின்றேன். மூதாட்டியிடம் கட்டணத்தை வாங்கிய நர்ஸ், ''என்னைக்கு வந்து பண்ணிக்கிறீங்க பாட்டி,'' என்றாள்.

''நாளைக்கே பண்ணிக்கிறேன், தாயி!''

''வியாழக்கிழமை வரைக்கும், 'புல்'லா இருக்கு, பாட்டி. வெள்ளிக்கிழமை பண்ணிக்கிறீங்களா?''

கொஞ்சம் யோசித்த மூதாட்டி, ''வெள்ளிக்கிழமை வேண்டாம்; சனிக்கிழமை பண்ணிக்கிறேன்,'' என்று சொல்லவும், குறிப்பிட்ட பக்கத்தை திருப்பி, ''பேர் சொல்லுங்க,'' என்றாள், நர்ஸ்.

''வனராணி!''

''உங்க வீட்டுக்காரர் பேரு?''

''சடையாண்டி!''

''வயசு?''

''தெரியாதே,'' என்ற மூதாட்டி, ''நீயா எதுனாச்சும் போட்டுக்கோ தாயி,'' என்றாள். மூதாட்டியைப் பார்த்தால், 60ம் மதிக்கலாம்; 80 என்றும் சொல்லலாம்...

''உங்க வீட்டுக்காரர் வயசாச்சும் தெரியுமா?'' என்ற நர்சின் கேள்விக்கும், உதட்டைப் பிதுக்கினாள், மூதாட்டி.

''வேலை எதுனாச்சும் பார்க்கிறீங்களா பாட்டி,'' என்ற நர்சின் கேள்விக்கு, குப்பை அள்ளும் வேலை பார்ப்பதாக சொன்னாள், மூதாட்டி.

''சரி... 65 வயதுன்னு போட்டுக்கவா பாட்டி,'' என்றாள், நர்ஸ்.

''மகராசியா போட்டுக்க தாயி,'' என்று, சம்மதத்தை வெளிப்படுத்தினாள், மூதாட்டி.

ஒரு சீட்டை கிழித்து எழுதிக் கொடுத்த நர்ஸ், ''சனிக்கிழமை காலையில, 8:00 மணிக்கெல்லாம், இந்தச் சீட்டையும் மறந்துடாம எட்டுத்துட்டு வரணும். அதோட, ஒரு காலி தீப்பெட்டிக்குள்ள கொஞ்சூண்டு உங்களோட, 'மோஷனை' எடுத்து வரணும்,'' என்றாள்.

''புரியலையேம்மா,'' என்று மூதாட்டி சொல்லவும், ''மோஷன் பாட்டி... மோஷன்,'' என்றாள் நர்ஸ், அழுத்தம் திருத்தமாக.

''அப்படின்னா என்னம்மா,'' என்று மூதாட்டி கேட்கவும், ''கார்ப்பரேஷன்ல வேலை பார்க்குற உனக்கு, இது கூடப் புரியலையாக்கும்,'' என்று அலுத்துக் கொண்டவள், ''காலங்கார்த்தால கக்கூஸ் போவில்ல; அதுலருந்து கொஞ்சூண்டு எடுத்துட்டு வரணும்,'' என்றாள், கோபமாக.

''மலத்தை எடுத்துட்டு வரணுமாக்கும்,'' என்றாள், மூதாட்டி.

அங்கிருந்த எல்லாருமே, அசூசையாக முகஞ்சுளித்தனர்.

''உங்களுக்கெல்லாம் அந்த வார்த்தைய சொல்றதுக்கே நாறுது... நாங்க, அதுகளையே அள்ளிப் போட்டுக்கிட்டு, அப்பப்ப செத்துக்கிட்டும் வாழுறோம்,'' என்றாள், மூதாட்டி.

நானும் சனிக்கிழமைக்கே, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கி கிளம்பினேன்.

சனிக்கிழமை, அங்கு போனபோது, 8:30 மணிக்கும் மேலாகி விட்டது. நானே பரவாயில்லை என்பது போல், மூதாட்டியும், இன்னும் சிலரும், எனக்குப் பின் வந்து, 'டோக்கன்' பெற்றுக் கொண்டனர்.

அன்று முழு உடல் பரிசோதனைக்காக, என்னையும் சேர்த்து, 16 பேர் இருந்தோம். 'டோக்கன்' பெற்ற வரிசைப்படி, ஒவ்வொருவராக அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். 'அப்பாயின்ட்மென்ட்' கொடுத்த நர்ஸ், இன்னொரு பெண்மணியின் உதவியுடன் உயரத்தையும், உடல் எடையையும் குறித்து, ரத்தம் சேகரிக்கும் இடத்திற்கு அனுப்பினாள்.

ரத்தம் சேகரிப்பவரே சிறுநீர், மலம் முதலியவற்றையும் தனியாக வாங்கி வைத்தார். எல்லாருக்கும் மூன்றையும் சேகரித்து முடித்ததும், எங்களை அழைத்து போய், 'ஈ.சி.ஜி.,' எடுக்கும் அறைக்கு முன் நிறுத்தினாள், ஆயாம்மாள்.

''இங்க, 'ஈ.சி.ஜி.,' மட்டும் எடுத்துட்டு, பக்கத்து கட்டடத்துல போய், 'எக்ஸ் - ரே' எடுங்க... அப்புறம், இன்னொரு இடத்துல போய், 'ஸ்கேன்' எடுத்துட்டு, எல்லா சீட்டையும் முதல்ல ரத்தம் எடுத்த அறைக்கு எடுத்து வந்து குடுங்க... திங்கட்கிழமை வந்து, 'ரிப்போர்ட்' வாங்கிக்கிட்டு, தேவைப்பட்டா, டாக்டரப் பார்க்கலாம்,'' என்று சொல்லிப் போனாள், ஆயாம்மா.

அரசு மருத்துவமனைகளுக்கே உரிய அசிரத்தைகளையும் மீறி, எல்லாம் மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் நடந்தேறியது. 10:30 மணிக்கெல்லாம் எல்லாம் முடிந்து மருத்துவமனையிலிருந்து கிளம்பி விடலாம் என்று தோன்றியதால், மதியத்திற்கு மேல் அலுவலகம் போய்விடலாம் என்று நினைத்து கொண்டேன்.

மூதாட்டியும் அதை உணர்ந்தவளாக, யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டு, 12:00 மணிக்கெல்லாம் கண்டிப்பாக பணிக்கு வந்து விடுவதாக, உறுதி சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆனால், 'ஸ்கேன்' செய்யும் இடத்தில், எங்களின் நம்பிக்கையில், பெரிதாய் மண் விழுந்தது. முதலில் அங்கும் எல்லாம் சரியாக தான் போய் கொண்டிருந்தது. இளைஞன் ஒருவன், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி, எல்லாரையும், 2 - 3 நிமிடங்களுக்குள், 'ஸ்கேன்' முடித்து, வெளியே அனுப்பிக் கொண்டிருந்தான்.

அடுத்து என் முறை. நான் மேல் சட்டையை கழட்டி, 'ஸ்கேன்' அறைக்குள் நுழைய முற்படுகையில், எங்கிருந்தோ ஒருத்தர், வேகமாக வந்து, ''கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்,'' என்று சொல்லி, என்னை மறித்தார்.

எதுவும் புரியாமல், அறை வாசலில் தயங்கி நின்றேன்.

கொஞ்ச நேரத்தில் அந்த இடமே பரபரப்பானது. வந்தவர், மருத்துவமனை ஊழியர்கள் எல்லாரையும் விரட்டி, வேலை வாங்க துவங்கினார். ஒருபெண், தரையை, 'மாப்' வைத்து துடைத்தாள்; இன்னொரு பெண், படுக்கை விரிப்புகளை மாற்றினாள்.

வெள்ளை கோட்டும், கழுத்தில், 'ஸ்டெத்தோஸ்கோப்'புமாய் ஆண்களும், பெண்களுமாய் நாலைந்து டாக்டர்கள் வந்தனர். திடீர் பரபரப்பு.

கொஞ்ச நேரத்தில், ஒரு இளம்பெண் வந்தாள். அவள், இளமை பூத்துக்குலுங்கும், பதின்ம வயதில் இருந்தாள். ஆனால், முகத்தில் வாட்டமும், உடலில் சோர்வும் தெரிந்தது. பெண்ணுடன் வந்தவர், வாசலில் நின்று கொள்ள, இளம்பெண் மட்டும், 'ஸ்கேன்' அறைக்குள் போனாள்.

''ஸ்கேன் பண்றதுக்கு, 'லேடி டெக்னீஷியன்' யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வாங்க,'' என்று, மருத்துவமனை ஊழியரிடம், அவசரப்படுத்தினார், பெரிய மருத்துவர்.

''பரவாயில்ல... நானே, 'ஸ்கேன்' பண்றேன் சார்,'' என்றார் அங்கிருந்த, ஒரு பெண் மருத்துவர். பெரிய மருத்துவர் தலையசைக்கவும், பெண் மருத்துவர், 'ஸ்கேன்' அறைக்குள் போனார். அவருடன், மற்றொரு பெண் மருத்துவரும் உள்ளே போனார்.

இளம் பெண்ணுடன் வந்தவர், மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன், நின்று கொண்டிருந்தார். அவரிடம் போன பெரிய மருத்துவர், ''நீங்க உட்காருங்க சார்,'' என்றார், மிகவும் பணிவுடன்.

''பரவாயில்ல,'' என்றார்.

பெரிய மருத்துவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், அங்கிருந்த ஊழியரைப் பார்த்து ஜாடை காட்ட, அவர், 'குஷன்' வைத்த மர நாற்காலியை துாக்கி வந்து போட்டார். பெரிய மருத்துவர் மிகவும் வற்புறுத்தவே, அதில், உட்கார்ந்தார்.

உள்ளே போன இளம் பெண்ணிற்கு, 'ஸ்கேன்' எடுப்பது, மணிக்கணக்காக நீண்டு கொண்டிருந்தது. அது, இப்போதைக்கு முடியாது என்று தோன்றியதால், நாங்கள் அங்கிருந்து வெளியே வந்து நின்று கொண்டோம். 'ஸ்கேன்' அறையிலிருக்கும் இளம் பெண் பற்றி, 'குசுகுசு'வென்று பேசிக் கொண்டிருந்தனர், மருத்துவமனை ஊழியர்கள்.

''யாருய்யா அந்தப் பொன்ணு... நம் டாக்டருங்க எல்லாம் இப்படி விழுந்து விழுந்து கவனிக்குறாங்க,'' என்றார், ஒருவர்.

''பொண்ணோட அப்பா, தலைமை செயலகத்துல பெரிய அதிகாரியாம். அதான் இந்தக் கவனிப்பு. அப்புறம், உனக்கும், எனக்குமா இப்படி மரியாதை கிடைக்கும்?'' என்றார், இன்னொருவர்.

''பொண்ணுக்கு என்ன தான் பிரச்னையாம்... ஏதாச்சும் தெரியுமா?''

''என்ன பிரச்னைன்னு தெளிவா தெரியலப்பா... ஆனா, இன்னும் ஆறேழு மாசத்துல, பொண்ணு செத்துப் போயிடும்ன்னு டாக்டருங்க பேசிக்கிட்டதை கேட்டேன். அவங்களுக்கு ஒரே பொண்ணாம்; வேற குழந்தைகளே இல்லையாம்... பொண்ணுக்கு இப்படி ஆயிருச்சுன்னு தெரிஞ்சதுலருந்து பொண்ணோட அம்மா படுத்த படுக்கையா ஆயிட்டாங்களாம்...

''அமெரிக்காவுக்கெல்லாம் பொண்ணை அழைச்சுட்டுப் போய், சிகிச்சை பண்ணி பார்த்துருக்காங்க... அங்கேயும் காப்பாத்த முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டாங்களாம்... அதான், மனசு கேட்காம கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துருக்காங்க,'' என்றார், அவர்.

''அய்யோ பாவமே... கேட்கவே கஷ்டமா இருக்குய்யா... அபரிமிதமா அழகை கொடுத்த ஆண்டவன், ஆயுசை குறைச்சுட்டான் போலருக்கு,'' என்றார், மற்றவர்.

மூதாட்டியின் அலைபேசிக்கு அழைப்பு வரவும், ''இல்ல மேஸ்திரி... கோவிச்சுக்காத... வந்த வேலை இன்னும் முடியல... முதல்ல முடிஞ்சுடும் போல இருந்துச்சு... அதான், 12:00 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துடுறதா போன் பண்ணினேன்... ஆனா, வேலை இன்னும் முடியலயே... நான் என்ன செய்யட்டும்,'' என்றாள்.

'ஸ்கேன்' அறையிலிருந்து, பெண் மருத்துவர்கள் முதலில் வெளியே வந்தனர். சிறிது நேரத்திலேயே, துப்பட்டாவைத் திருத்தியபடி, இளம்பெண் வெளியே வரவும், பெண்ணுடன் வந்திருந்த அதிகாரியும், சோகமே உருவாக நாற்காலியிலிருந்து எழுந்து, அவளை அழைத்துப் போக தயாரானார்.

தலைமை செயலக அதிகாரியிடம் போய், ''உன்னோட பொண்ணாப்பா,'' என்றாள், மூதாட்டி.

அவர், 'ஆம்...' என, தலை அசைக்கவும், ''கேள்விப்பட்டேன்... மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்குப்பா,'' என்று சொல்லி, கண் கலங்கினாள்.

அதிகாரியின் கண்களிலிருந்தும் தன்னிச்சையாக கண்ணீர் பொங்கி வழிந்தது.

''ஆனால், நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே,'' என்ற மூதாட்டி, அதிகாரி அமைதியாக அவளை பார்க்கவும், மெதுவாக சொல்ல துவங்கினாள்...

''உன்கிட்ட அதிகாரம் இருக்கு... அதை வச்சு உன் பொண்ணு பொறந்ததுலர்ந்து எல்லா இடத்திலயும், பொறப்பு சர்டிபிகேட் வாங்கினது, இஸ்கூலுல சேர்க்கிறதுன்னு ஒவ்வொரு இடத்துலயும் வரிசைய உடைச்சுக்கிட்டு, உன் பொண்ண முன்னால முன்னாலன்னு கூட்டிக்கிட்டுப் போயிருப்ப...

''வரிசையில மணிக்கணக்கா காத்துக்கிட்டிருந்த என்னை மாதிரியானவங்க, உன் அதிகாரத்துக்கு முன்னால ஒண்ணும் செய்ய முடியாம, மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருந்துருப்பாங்கள்ல...

''எத்தனை பேரோட வயித்தெரிச்சலக் கொட்டி வாயில விழுந்து, உன் பொண்ணு, வரிசைகளை உடைச்சுக்கிட்டு முன்னால வந்துருக்கும்... அதான், சாவும் வரிசைய உடைச்சுக்கிட்டு உன் பொண்ண முன்னாலயே கூட்டிக்கிட்டுப் போக வந்துருச்சோ என்னமோ,'' என்றாள், மூதாட்டி.

அதிகாரி, மூதாட்டியை கோபமாய் முறைக்கவும், மருத்துவமனை ஊழியன் அவளிடம் வந்து, ''ஏய் கிழவி... உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா... அவரு எவ்வளவு பெரிய, வி.ஐ.பி., அவருகிட்ட போய் சட்டம் பேசிக்கிட்டு இருக்குற,'' என்றான்.

''அதென்னப்பா, வி.ஐ.ப்பீ., எல்லா வயித்துலயும், 'அதான்' இருக்கும். தங்க பஸ்பமே சாப்பிட்டாலும், அதுவும், 'அதாத் தான்' வெளியே வரும். இதிலென்ன, வி.ஐ.ப்பீ., போவியா,'' என்று நொடித்த மூதாட்டி, 'ஸ்கேன்' வரிசையில், அவள் இடத்தில் போய் நின்று கொண்டாள்.

சோ.சுப்புராஜ்






      Dinamalar
      Follow us