sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 10, 2019

Google News

PUBLISHED ON : மார் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உஸ்... என்னா வெயிலு, 'டிராபிக் ஜாம்' வேறு. தாங்க முடியலை மணி...' என்று அலுத்தபடி, மேல் துண்டால் முகத்தை துடைத்தவாறே வந்தமர்ந்தார், குப்பண்ணா.

மேஜை மின் விசிறியை, அவர் பக்கமாக திருப்பி ஓட விட்டு, உதவி ஆசிரியைக்கு வாங்கி வைத்திருந்த இளநீரை அவரிடம் கொடுத்து, ஆசுவாசப்படுத்தினேன்.

'போக்குவரத்து நெரிசலை குறைக்க, இனி ஆகாய மார்க்கமா தான் போகணும் போலிருக்கு...' என்றார், குப்பண்ணா.

ஆகாயம் என்றதும், நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.

'தாமஸ் ஆல்வா எடிசனை பற்றி நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், ஆகாய விமானம் கண்டுபிடித்த, ரைட் சகோதரர்களை பற்றி விரிவாக ஒரு விஷயமும் தெரியவில்லையே...' என்றேன்.

'மின்சார பல்பை, எடிசன் தான் கண்டுபிடித்தார் என்று கூறுவர். உண்மையில், எடிசனுக்கு முன்பே மின்சார பல்பு இருந்தது. ஆனால், எடிசன் தான், 'சுவிட்சை' போட்டால், தொடர்ந்து பல நுாறு மணி நேரம் எரியக்கூடிய, தற்போது, புழக்கத்தில் உள்ள பல்பை கண்டுபிடித்தார்.

'அதற்கு முன் இருந்த பல்புகள், சில மணி நேரத்திலேயே, அதன் உள்ளே இருக்கும் இழை எரிந்து சாம்பலாகி விடும் வகையில் தான் இருந்தது...' என்றார், குப்பண்ணா.

'ரைட் சகோதரர்கள் தான், முதன் முதலில் விமானத்தை கண்டுபிடித்தனரா...' என்றேன்.

'இல்லை; தயாரித்தனர். அதாவது, அதற்கு முன், 'கிளைடர்' என்ற பறக்கும் ஊர்தி இருந்தது. ஒரு ஆள், அதற்குள், கைகளை மாட்டி, சிறிது துாரம் ஓடி, பிறகு பறந்து போய் தரையிறங்கலாம். அதிகபட்சம், 100 அடி துாரம் பறக்கலாம்.

'இது ஒரு விளையாட்டு பொருள் போல தான். ஆனால், ரைட் சகோதரர்கள், அந்த, 'கிளைடரில்' ஒரு இன்ஜினை பொருத்தி, பூமிக்கு மேலே சற்று உயரத்தில் பறக்கும்படியான விமானத்தை உருவாக்கினர்...' என்றார்.

'இருவருமே, திருமணமே செய்து கொள்ளவில்லையாமே...' என்றேன்.

'ஆமாம். எப்போதுமே ஆராய்ச்சியிலேயே மூழ்கி, வாழ்வை அர்ப்பணித்து விட்டனர். இருவருமே, 'ஹைஸ்கூல்' படிப்பை கூட முடிக்கவில்லை; இதற்கு, வறுமை தான் காரணம்.

'சிறுவர்களாக இருந்தபோது, இறந்த மிருகங்களின் எலும்புகளை சேகரித்து, உரத் தொழிற்சாலையில் கொடுத்து, காசு வாங்கி, பெற்றோரிடம் கொடுப்பர். அப்புறம், சைக்கிள் ரிப்பேர் கடை வைத்தனர். பிறகு, பழைய, 'கிளைடர்' ஒன்று கிடைத்தது.

'அடிக்கடி அதை உடலில் மாட்டி பறந்த அனுபவத்தை வைத்து, இன்ஜின் பொருத்தி பறக்கலாயினர். 1903ல் தான், ரைட் சகோதரர்கள், விமானத்தை கண்டுபிடித்தனர்...' என்றார்.

'ஆனால், அடுத்த, 10 ஆண்டு களுக்குள்ளாகவே, உலகமெங்கும் விமானங்கள் பறக்க துவங்கி விட்டது என்று சொல்வது உண்மையா?' என்றேன்.

'ஆமாம்... ரைட் சகோதரர்கள், தயாரித்த விமானம், 12 வினாடி தான் பறந்தது; அதுவும், 100 அடி துாரம் தான் சென்றது. ஆனால், அது, உலக நாகரிகத்தையே மேலுயர்த்தி விட்டது.

'பொதுவாக, ரைட் சகோதரர்கள் என்கிற அவர்களின் பெயர், பலருக்கு தெரியாது. மூத்தவர், ஆர்வில்; இளையவர், வில்பர். ஆர்வில்; ரொம்ப சங்கோஜி. விளம்பரம் விரும்பாதவர். தன்னை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார். பத்திரிகை நிருபர்களுடன் பேச மாட்டார்...' என்று முடித்தார், குப்பண்ணா.

பிப்., 17, 2019 வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியில், நம்மவர்களின் தமிழ் உச்சரிப்பை பற்றி, என் ஆதங்கத்தை தெரிவித்திருந்தேன். பிரபல எழுத்தாளரான, ஜோதிர்லதா கிரிஜா, தமிழ் உச்சரிப்பு சம்பந்தமாக, தன் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

வெகு நாட்களுக்கு முன், 'ஆனந்த விகடன்' வார இதழில், இரண்டு நகைச்சுவை துணுக்குகள் வெளியாகி இருந்தன. அவை:

கூவி விற்பவர்: 'வாழப்பயம்... வாழப்பயம்...'

கூப்பிடுபவர்: 'இங்க வாய்யா...

வாழுறதுக்கு ஏம்ப்பா பயப்படுறே? சும்மா தைரியமா வாழு!'

தமிழாசிரியர்: 'உங்க மகன், வாயப்பயம், வாயப்பயம்னே சொல்லிட்டு இருக்கான்... சரியா உச்சரிக்க மாட்டேன்கறான்!'

பையனின் அப்பா: 'அந்தப் பயக்கத்தை எப்படியாச்சும் மாத்திடுங்கய்யா!'

தொலைக்காட்சிகளில், செய்தி வாசிப்பாளர்களும், சில பேட்டியாளர்களும், பேசுகிற தமிழையும், உச்சரிக்கிற பெயர் உரிச் சொற்களையும் கேட்கும்போது, மேற்கூறிய இந்த ஜோக்குகள் தான் நினைவுக்கு வருகின்றன. தமிழ் பத்திரிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நம் நாட்டின் முதல் பிரதமரை, இன்றளவும் பல இதழ்கள் ஜவஹர்லால் நேரு என்றே எழுதி வருகின்றன. ஜவாஹர் என்பதே சரி. ஜவாஹர் என்றால், மாணிக்கம் என்று பொருள். இதேபோல், லால்பகதுார் சாஸ்திரி என்கின்றனர். லால் பகாதுர் சாஸ்திரி என்பதே சரி.

இன்றைய பிரதமரைக் கூட, மோடி என்றே சொல்லியும், எழுதியும் வருகின்றனர். 'மோதீ' என்பதே சரி. அப்படித்தான் இந்தியில் எழுதுகின்றனர். முன்னாள் பிரதமரின் பெயரை, வாஜ்பாய் என்று, பா.ஜ.,வினரே உச்சரிக்கின்றனர். வாஜ்பேயீ என்பதே சரியான உச்சரிப்பாகும்.

சமீபத்திய புகழ்பெற்ற வாராக் கடனாளியான விஜய் மல்லையாவை, நம்மூர் செல்லையா, பொன்னையா, தங்கையா என்பது போல், மல்லையா என்கின்றனர். விஜய் மல்யா என்பதே சரி.

சரியான உச்சரிப்பு என்றதும், அந்த நாள், துார்தர்ஷன், 'டிவி' செய்தி வாசிப்பாளர், ஷோபனா ரவி ஞாபகத்துக்கு வருகிறார். தாம் வாசிக்கும் செய்தியில், வார்த்தைகள் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதில், இவர் தனிப்பட்ட கவனம் செலுத்துபவராக இருந்தார்.

அயல் நாட்டு பிரமுகர்கள் மற்றும் ஊர் பெயர்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக, நம் நாட்டில் உள்ள அந்தந்த நாட்டு துாதரகத்துடன் தொடர்பு கொண்டு, விசாரித்து, தெரிந்து கொள்வார், என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இங்கே என்னடாவென்றால், உள்ளூர் ஆசாமிகளின் பெயர்களை கூட தப்பும் தவறுமாய் உச்சரித்தும், எழுதியும், அச்சுக் கோர்த்தும் வருகிறோம்.

இரண்டு வாரங்களுக்கு முன், சென்னை தமிழ் சேனல் ஒன்றின் செய்தி வாசிப்பாளர் ஒருவர், போலந்து நாட்டை, போலண்டு என்று உச்சரித்தார்.

இதேபோன்று, தமிழகத்தின், ப.சிதம்பரம் பெயரை, வட மாநில சேனல்களில், சிதாம்பரம் என்று உச்சரிக்கின்றனர்.

விருப்பம் உள்ளோர் திருத்திக் கொள்ளலாம். கீழே, அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில வார்த்தைகளும், அதன் சரியான உச்சரிப்பையும் கொடுத்துள்ளேன்.

தவறு - சரி

கிரண்பேடி - கிரண்பெடி

பூரி சங்கராசாரியார் - புரி சங்கராசாரியார்

கஸ்துாரி பாய் காந்தி - கஸ்துார்பா காந்தி

மாக்சிம் கார்க்கி - மாக்சிம் கோர்க்கி

பின்லேடன் - பின்லாடன்

அண்ணா ஹசாரே - அன்னா ஹஜாரே

நோபல் பரிசு - நோபேல் பரிசு

ராஜேஷ் கண்ணா - ராஜேஷ் கன்னா

பீம் ராவ் அம்பேத்கர் - பீம்ராவ் அம்பேட்கர்

நினைவுக்கு வந்தவை இவை. இன்னும் பல இருக்கக் கூடும்.

தமிழையே சரியாக உச்சரிக்காத நாம், பிற மாநிலங்கள், பிற நாடுகள் சார்ந்தவற்றை, எங்கே சரியாக உச்சரிக்கப் போகிறோம்.

இருப்பினும், 'டி.வி' சேனல்களும், பத்திரிகைகளும் உரிய கவனம் செலுத்துதல் நல்லது.

- இவ்வாறு எழுதியுள்ளார்.

தாய்மொழி தினம் என்றெல்லாம் கொண்டாடி, தப்பு தப்பாக பேசலாமா... இனி, சரியான உச்சரிப்பை சொல்லி பழகுவோம்.






      Dinamalar
      Follow us