PUBLISHED ON : மார் 10, 2019

வீரத்திருமகன் படப்பிடிப்புக்காக, படக்குழுவினருடன், ஒகேனக்கல் சென்றோம். அன்று, படப்பிடிப்பு முடித்து, இயக்குனர் திருலோகசந்தரும், நானும், எம்.ஜி.ஆர்., படம் பார்க்க, தர்மபுரிக்கு சென்றபோது, கார் விபத்துக்குள்ளானது. இதில், நான் காருக்குள் மாட்டிக் கொண்டேன்.
என் நிலையை பார்த்து பதறிய இயக்குனர், கதவை உடைத்து, என்னை வெளியே கொண்டு வந்தார்.
மேனேஜர் என்ன ஆனார் என்று சுற்றும்முற்றும் பார்த்தபோது, அவர், சாலையில் நின்று கொண்டிருந்தார். ஆச்சரியப்பட்டு, 'எப்படி வெளியே வந்தீங்க...' என்றோம். 'கார் புரள ஆரம்பித்ததும், நான் குதித்து விட்டேன்...' என்றார்.
பின், இயக்குனரின் விரலில் ஏற்பட்ட காயத்துக்கு கட்டு போட்டோம். அங்குள்ளோர், போலீசில் புகார் செய்ய கூறினர். அப்படி செய்தால், தேவையில்லாத பிரச்னை ஏற்படும். சிலசமயம், படப்பிடிப்பு கூட தடைபடலாம் என்பதால், புகார் கொடுக்கவில்லை.
நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பியதும், எல்லாரும் விசாரித்தனர். என் நிலைமையாலும், இயக்குனருக்கு ஏற்பட்ட காயத்தாலும், மறுநாள் படப்பிடிப்பு நடக்குமா என்று கவலைப்பட்டனர்.
விபத்தின் இறுக்கமான மன நிலையை மாற்ற எண்ணிய அசோகன், பல விஷயங்களை கலகலப்பாக பேச ஆரம்பித்தார்...
'இவ்வளவு பெரிய விபத்து நடத்தும், உடம்புல எந்த காயமும் இல்லாம உயிர் தப்பிச்சிருக்கீங்கன்னா, அதுக்கு காரணம்,
எம்.ஜி.ஆர்., தான். ஏன்னா, நீங்க பார்க்க போனது, அவர் நடிச்ச, நல்லவன் வாழ்வான் என்ற படம். அவர், வாக்கு பொய்யாகுமா...' என்றார்.
அசோகனின் பேச்சில், நாங்கள் சற்று ஆசுவாசமானோம். மறுநாள் வழக்கம் போல் படப்பிடிப்பு தொடர்ந்தது.
ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியின் பின்னணியில், படப்பிடிப்பு நடத்தி திரும்பினோம்.
அடுத்து...
நீல பட்டாடை கட்டி... நிலவென்னும் பொட்டு வைத்து... என்ற பாடலை, பிரமாண்டமாக படம் பிடிக்க நினைத்தோம்.
மகாபலிபுரம் போகும் வழியில், அரங்கம் அமைத்தோம். அதில், ஒரு பெரிய தண்ணீர் தொட்டிக்குள், தாமரை மொட்டு தோன்றி மலரும். அதனுள்ளிருந்து கதாநாயகி, சச்சு எழுந்து நடனமாடுவார். அந்த தாமரை மலரை சுற்றி ஒன்பது தாமரை இலைகள், சச்சு இருக்கும் தாமரை மலரை சுற்றி வரும். அந்த இலைகளின் மேலிருந்து ஒன்பது அழகிகள் ஆடுவர்.
மோர் கடையும் மத்தின் தொழில்நுட்பத்தில், கலை இயக்குனர் சாந்தாராம், இந்த அரங்கத்தை அமைக்க, அப்பாடல் காட்சியை எடுத்தோம்.
இரண்டு நாட்கள் எடுத்த, அந்த பாடல் காட்சியின் பதிவை பார்த்த, அப்பா, 'நன்றாக இருக்கிறதே... இதை, கருப்பு வெள்ளையில் எடுப்பதை விட, கலரில் எடுத்தால் இன்னும் நன்றாக இருக்குமே...' என்றார்.
அதனால், அந்த பாடலை மீண்டும் கலரில் எடுக்க ஆரம்பித்தோம்.
இதே படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்காக, ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து, 80 கி.மீ., தொலைவில், சந்திரகிரி கோட்டை என்ற இடத்தை தேர்வு செய்தோம்.
கதைப்படி, 'அசோகனை, சங்கிலியால் கட்டி இழுத்து வாருங்கள்...' என்று, சிப்பாய்களிடம் சொல்லி அனுப்பியிருப்பார், ராமதாஸ்.
அதன்படி அவர்கள், அசோகனை இழுத்து வரும்போது, 'எதிரியின் முன் கைதியாய் நின்று, அவனால் கொல்லப்படுவதை விட, நானே, என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்...' என்று சொல்வார்.
வீரர்கள் பிடித்திருக்கும் சங்கிலியை இழுத்தபடி, அவர்களிடமிருந்து விடுபட்டு ஓடி, மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து, அசோகன் உயிர் விட வேண்டும். இது தான் காட்சி.
பள்ளத்தாக்கின் முன் கேமராவை வைத்து, 'உச்சியிலிருந்து குதிப்பது போல் பாவனை செய்தால் போதும்...' என்று சொல்லி, அந்த காட்சியை எடுக்க ஆரம்பித்தார், இயக்குனர்.
ஆனால், ஆக் ஷன் என்றதும், ஓடி வந்த அசோகன், ஆவேசமாக பேசியபடியே மலை உச்சியின் விளிம்புக்கு வந்து விட்டார். அவர் போகும் போக்கையும், மலையின் விளிம்பை நெருங்குவதையும் கண்ட, 'ஸ்டன்ட் மாஸ்டர்' சாமிநாதனின் உதவியாளர்கள், ஏதோ விபரீதம் நிகழ போகிறது என்பதை உணர்ந்தனர்.
ஓடிச்சென்று, பள்ளத்தாக்கில் விழப்போன, அசோகனின் காலை தாவிப் பிடித்து விட்டனர். அப்படி அவர்கள் பிடிக்கவில்லை என்றால், அசோகன் பள்ளத்தாக்கில் விழுந்திருப்பார்.
'நடிக்க சொன்னால், ஆவேசப்பட்டு என்ன செய்கிறோம் என்று தெரியாமல், நிதானம் இழந்து இப்படியா செய்வது...' என்று, அசோகனை திட்டினார், இயக்குனர்.
'ஷாட் நல்லா வரணும்ன்னு தான், அப்படி செய்தேன். நான் நிதானமெல்லாம் இழக்கல... எனக்கு தெரியாதா...' என்றார், அசோகன்.
ஒரு நடிகராக இருந்து, அசோகன் தன் செயலுக்கு சமாதானம் சொன்ன போதிலும், இயக்குனர் நிலையிலிருந்த, திருலோகசந்தர், 'இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதீங்க. ஏதாவது ஆகியிருந்தால் என்ன ஆவது... எந்த வேலையிலும் கவனம் தேவை...' என்று, மீண்டும் எச்சரித்தார்.
அதன்பின், அவர் விழுவதற்கென்று, சுமாரான பள்ளம் உள்ள இடத்தில் மெத்தைகளை போட்டு, பாறை உச்சியிலிருந்து குதிப்பதை போன்ற காட்சியை, எடுத்து முடித்தோம்.
அடுத்து, 'கிளைமாக்ஸ்' காட்சி. கதைப்படி, மன்னரின் கோட்டைக்குள், ஒரு புரட்சிக் கூட்டம் புகுந்து விடும். அந்த கூட்டத்தை விரட்டியடிக்க, கோட்டைக்குள் இருக்கும் போர் வீரர்கள் தாக்குதல் நடத்துவர். இந்த காட்சியை படமாக்க எண்ணினோம்.
அப்போது, 'ஹெலன் ஆப் டிராய் என்ற ஆங்கில படத்தில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அதில், கோட்டைக்குள், குதிரை வீரர்கள் ஒளிந்திருந்து, தாக்குதல் நடத்தும் காட்சி, அற்புதமாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே, நிறைய கூட்டத்தை பிரேமில் எடுத்து வந்து பிரமாதமாக எடுங்கள்...' என்றார், அப்பா.
அதன்படியே மன்னர் காலத்து கோட்டை அரங்கம் அமைத்து, எடுத்து முடித்தோம். பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு, வீரத்திருமகன் படத்தை வெளியிட்டோம். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது, எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.
கதை சரியாக இல்லாமல், பிரமாண்டம் மட்டுமே படத்தின் வெற்றிக்கு கை கொடுக்காது என்ற பாடத்தை, இப்படத்தின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டோம்.
— தொடரும்
ஏவி.எம்.குமரன்