தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'பீச் மீட்டிங்' களை கட்டியிருந்தது. நான், லென்ஸ் மாமா, ராமசாமி அண்ணாச்சி மற்றும் கோவையை சேர்ந்த, நண்பர் ஒருவரும் ஆஜராகி இருந்தோம்.

பூ போட்ட கண்ணாடி டம்ளரில், 'அங்கிள் ஜானி'யை ஊற்றி, என்னை தவிர மற்றவர்களுக்கு கொடுத்தார், லென்ஸ் மாமா.

மாமா, ரொம்ப குஷியாக இருந்தால் தான், இப்படியெல்லாம் செய்வது வழக்கம் என்பதால், 'என்ன மாமா... ரொம்ப ஜாலியா இருக்கீங்க போலிருக்கே...' என்றேன்.

'அது ஒண்ணுமில்லே மணி... மாமி, அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா... வர, ஒரு வாரம் ஆகும். அது வரைக்கும், மவுனராகம் ஜனகராஜ் போல், கொஞ்சம், 'என்ஜாய்' செய்யலாமே...' என்றார்.

'மாமா... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல... வயசாச்சு; அளவோடு இருந்துக்கங்க...' என்றேன்.

'ஏலே, லெஞ்சு... கொறிக்கிறதுக்கு, 'பன்னி டிக்கி' இருக்குன்னு சொன்னியே... அத கொஞ்சம் தாரும் வே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.

இதைக் கேட்டதும், 'டென்ஷன்' ஆன மாமா, 'ஓய்... உம்மோட பெரிய ரோதனையா போச்சு... தப்பு தப்பா பேசாதீரும்... அது, 'பனீர் டிக்கா' பாலாடைக் கட்டி, வெங்காயம், தக்காளியுடன், மசாலா சேர்த்து பொரித்தெடுப்பது. 'பன்னி டிக்கி'ன்னா, வேறு அர்த்தம் வந்துரும்...' என்றார் எரிச்சலுடன்.

இவர்கள் கலாட்டாவை ரசித்தபடியே, நண்பரை பார்த்தேன். அவர் முகம் வாடியிருக்கவே, 'என்னாச்சுப்பா... ஏன் ஒரு மாதிரி இருக்க... ஏதாவது பிரச்னைன்னா சொல்லுப்பா... என்னால முடிஞ்ச உதவிய செய்றேன்...' என்றேன்.

'மணி... எனக்கு ஒருத்தர் பணம் தர வேண்டியிருந்தது. அத, காசோலையா எழுதி கொடுத்தார். ஆனா, அந்த காசோலையை வங்கியில் கொடுத்தப்போ, பணமில்லைன்னு திரும்பி வந்துடுச்சுப்பா...' என்றார்.

'எவ்வளவு தொகை...' என்றேன்.

சொன்னார்.

'பெரிய தொகை தான்... முடிஞ்சா சமரசமா பேசி, வசூலிக்க பார்ப்போம். முடியலேன்னா, அடுத்து என்ன செய்வது என்று யோசிப்போம்...' என்றேன்.

'அந்த ஏமாற்றுக்கார போக்கிரியின் பிடரியில் நாலு தட்டு தட்டி, பணத்தை வசூலிக்கிறதை விட்டுட்டு... 'மயிலே... மயிலே'ன்னு இறகு போடுன்ற கதையா யோசனை சொல்லிட்டிருக்கியே...' என்றார் குழறியபடி, ராமசாமி அண்ணாச்சி.

உடனே, லென்ஸ் மாமா, 'காசோலை, பணமில்லாமல் திரும்ப வர்றது, இன்று - நேற்றா நடக்கிறது... இதெல்லாம் சகஜமப்பா... நான், கேள்விப்பட்ட வெளிநாட்டு செய்தி ஒன்றை சொல்றேன், கேட்டுக்குங்க...' என்று கூற ஆரம்பித்தார்:

ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கு, அதில் நடந்த குளறுபடிகளால், 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய், அருகில் இருந்த பூங்காவில், சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது, செல்வந்தர் போன்ற தோற்றம் உடைய ஒருவர், இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து, 'ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு இவர், 'என் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டேன். அதிலிருந்து எப்படி மீள போகிறேனோ என்று பயமாக இருக்கிறது...' என்றார்.

'எவ்வளவு ரூபாய் நஷ்டம்?' என்றார், செல்வந்தர்.

'50 கோடி ரூபாய்...' என்றார்.

'அப்படியா, நான் யார் தெரியுமா...' என்று கேட்டு, அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயரை சொன்னார்.

'அவரா நீங்கள்?' என்று அசந்து போனார், நிறுவன தலைவர்.

'சரி... 50 கோடி பணம் இருந்தால், நீ சரியாகி விடுவாயா?' என்று கேட்டார், செல்வந்தர்.

முகமலர்ச்சியுடன், 'நிச்சயம், எல்லாம் சரியாகி விடும்...' என்றார்.

உடனே, அந்த செல்வந்தர், தன்னிடமிருந்த, காசோலை புத்தகத்தை எடுத்து, கையெழுத்திட்டு, இவரிடம் நீட்டி, 'இதில், 500 கோடி ரூபாய் எழுதியுள்ளேன். நீ கேட்டதை விட, 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி.

'ஆனால், ஒரு வருஷம் கழித்து, இந்த பணத்தை எனக்கு திருப்பி கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருஷம், இதே நாளில், இங்கே நான் காத்திருப்பேன்...' என்று சொல்லி, காசோலையை இவர் கைகளில் திணித்துச் சென்றார்.

அந்த நிறுவனத்தின் தலைவர், வேகமாக, தன் அலுவலக அறைக்குள் சென்று, அந்த காசோலையை, தன் பீரோவில் வைத்து, பத்திரமாக பூட்டினார். பின், தன் உதவியாளரை அழைத்து, அனைத்து ஊழியர்களையும், நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர சொன்னார்.

ஊழியர்கள் அனைவரும் வந்தனர்...

'நண்பர்களே... நம் நிறுவனத்தில், 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டம் எப்படி, எதனால், எதற்காக ஏற்பட்டது என்று ஆராய்ந்து, அதை களைந்து, நம் நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார், நிறுவன தலைவர்.

அதன்பின், வேலைகள் மளமளவென்று நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட்டன. அவருடைய பேச்சு, மூச்சு, செயல், சிந்தனை மற்றும் துாக்கம் அனைத்தும், அவருடைய தொழிலை மேம்படுத்துவதிலேயே இருந்தது.

மிக சரியாக ஒரு ஆண்டு சென்றது. கணக்குகள் அலசப்பட்டன. 550 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது, இவருடைய நிறுவனம்.

அடுத்த நாள், விடியற்காலை அந்த செல்வந்தர் கொடுத்த, 500 கோடி ரூபாய்க்கான, காசோலையுடன் பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற ஆண்டு அமர்ந்திருந்த அதே சிமென்ட் பெஞ்சில் காத்திருந்தார். காலை நேரம் ஆனதால், பனி மூட்டம் காணப்பட்டது. சற்று நேரத்துக்கு பின், துாரத்தில் செல்வந்தரும், அவரது கையை பிடித்தபடி ஒரு பெண்மணியும் நடந்து வருவது, பனி மூட்டத்தினிடையே தெரிந்தது.

சில வினாடிகள் சென்றதும், அந்த பெண்மணி மட்டும் வந்தார்; செல்வந்தரை காணவில்லை.

இவர் சென்று, அந்த பெண்மணியிடம், 'எங்கே அம்மா உங்களுடன் வந்தவர்?' என்றார்.

அதற்கு அந்த பெண்மணி, பதட்டத்துடன், 'உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா?' என்றார்.

'இல்லை அம்மா... ஏன் கேட்கிறீர்கள்...' என்றார்.

'இல்லை அய்யா, அவர், என் கணவர் தான். மனநிலை சரியில்லாதவர். யாராவது ஒரு பெரிய மனிதரின் பெயரை சொல்லி, காசோலை தருவதாக பார்ப்பவர்களிடம் எல்லாம், பழைய காசோலையில், கையெழுத்திட்டு கொடுத்து விடுவார்...' என்றார்.

அந்த நிறுவன தலைவரால், எதுவும் பேச இயலவில்லை... 'நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது...' என்று நினைத்தார்.

- இவ்வாறு கூறி முடித்தார், லென்ஸ் மாமா.

'ஓய், லெஞ்சு... உமக்கு கூட நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்குதே...' என்று கலாய்த்தார், ராமசாமி அண்ணாச்சி.

கூட்டம் கலைந்து, அவரவர் வீட்டுக்கு திரும்பினோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us