
கே
குப்பண்ணா வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன். அவரது மனைவி, எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். அச்சமயம் பார்த்து, ஒரு பூனை குறுக்கே ஓட, மீண்டும் வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதைப் பார்த்த நான், 'பூனை குறுக்கே போனால், போன காரியம் நடக்காதா... இது என்ன மூட நம்பிக்கை...' என்றேன்.
'அது, மூட நம்பிக்கை இல்லை... அறிவியல் உண்மை. அமெரிக்காவில் உள்ள, 'நாசா' ஆய்வகத்தினரே நிரூபித்துள்ளனர்...' என்று ஆரம்பித்தார், குப்பண்ணா:
வெளியில் செல்லும்போது, பூனை குறுக்கே வந்தால், அது, நல்லதல்ல என்று முன்னோர் நம்பினர். ஆனால், அது தவறு என்று, 'கார்ப்பரேட் சயின்ஸ் கம்பெனி'கள், நம்மை நம்ப வைத்தன. அதன் விளைவு, இப்போது, நாம் பூனை குறுக்கே மட்டுமல்ல, எப்படி வந்தாலும் கண்டு கொள்வதில்லை. நம்மை இப்படி மாற்றி, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் தெரியுமா?
சீனாவை ரகசியமாக கண்காணிப்பதற்காக, உளவு செயற்கை கோள்களை, அந்நாட்டு மீது நிலை நிறுத்துவது அமெரிக்காவின் வழக்கம். சில ஆண்டுக்கு முன், அப்படி செய்தபோது, செயற்கை கோள்கள், ஒரு நிமிடம் செயலிழந்து ஸ்தம்பித்தன.
பலமுறை முயன்றும் அப்படியே நிகழ்ந்தது. அதை சரி செய்யவே முடியவில்லை. சரி... அதன் கீழே சீனாவில் அப்படி என்ன தான் செய்து கொண்டிருந்தனர் என்று ஆராய்ந்தனர். அங்கே, அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே இருந்தது, எந்த ஊரும் இல்லை; அது, ஒரு காட்டுப் பகுதி. அந்த காட்டின் நடுவே, ஒரு கோவில் இருந்தது. மேலும் ஆய்வு செய்தபோது, அது, சீனாவின் பிரசித்தி பெற்ற பூனை கோவில் என்று கண்டறிந்தனர். அந்த பூனை கோவிலிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தான், செயற்கைக் கோள்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
உடனே, பூனைகளை வாங்கி, 'நாசா' ஆய்வகத்தில் ஆராய துவங்கினர். பூனையின் வாலிலிருந்து பிரத்யேக மின் காந்த அலைகள் வெளியாவதை, நாசாவின் அதிநவீன உபகரணங்கள் படம் பிடித்தன. மனிதர்களை பார்க்கும்போது, அந்த கதிர் அலை நீளம் உடனே மாறியது.
குறிப்பாக, பூனைகள் வாசலில் இருந்து குறுக்கே செல்லும்போது, அபாயகரமான, 'காமா' கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து, ஆச்சரியத்தின் உச்சத்திற்கு போயினர், விஞ்ஞானிகள்.
இந்த, 'காமா' கதிர்கள், மனிதனது சிந்தனையை குலைத்து, ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இதனாலேயே, 'பூனை குறுக்கே வந்தால், போன காரியம் விளங்காது...' என, நம் முன்னோர் கூறி வைத்தனர்.
-இவ்வாறு, கூறிய குப்பண்ணா, 'நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று, இப்போதாவது புரிகிறதா...' என்றார்.
ப
வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது: என் மகள் வழி பேரன், கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான். அம்மாவுக்கு அடங்கின பையன். எந்த விஷயமாக இருந்தாலும், என் மகளிடம் கேட்காமல் செய்ய மாட்டான்.
டிச., 31, 2018 மாலை, தன் நண்பர்களுடன் வெளியே செல்வதாக, மகளிடம் கூறி சென்றான். இரவு, 8:00 மணி அளவில், அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
'என் நண்பர்கள் இருவர் மற்றும் இரு தோழியர் வீட்டுக்கு வரவுள்ளனர். இரவு, நம் வீட்டில் தங்க போகின்றனர்; அழைத்து வரலாமா...' என்று கேட்டான். என் மகள், என்னிடம் கேட்டாள். நான், 'வேண்டாம், பையனை வீட்டுக்கு வரச்சொல்...' என்றேன்.
அப்போது, என் அருகில் இருந்த, எங்கள் உறவினர் ஒருவர், என்னை தடுத்து, 'நம் பையன் நல்லவன். அதனால், அனுமதி கேட்கிறான். நாம் மறுத்தால், அவனது நண்பர்கள், அவனை தவறான வழியில் அழைத்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே, இரவு, நம் வீட்டுக்கு வந்து தங்கி செல்ல சொல்லுங்கள்...' என்று அறிவுறுத்தினார்.
எனவே, வீட்டுக்கு வந்து தங்கி செல்லுமாறு, அனுமதி கொடுத்தாள், என் மகள்.
அவர்கள், ஓட்டலில் சாப்பிட்டு, பீச்சுக்கு சென்று, 12:00 மணிக்கு, புத்தாண்டை கொண்டாடிய பின், வீடு திரும்பினர்.
பேரனின், இரு பெண் தோழியரையும், என் அறையில் தங்க வைத்தேன். அவர்களிடம், 'உங்கள் வீட்டில் தேட மாட்டார்களா...' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இல்லை பாட்டி... இவள் என் வீட்டிலும், நான் அவள் வீட்டிலும் தங்க போவதாக, முன்பே எங்கள் பெற்றோரிடம் கூறி விட்டோம். அதனால், தேட மாட்டார்கள்...' என்றனர்.
'இதென்ன கொடுமை... பெற்றோர், இப்படியா ஏமாளிகளாக இருப்பர்... பெண் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனரே...' என்று நினைத்துக் கொண்டேன். இருவரும், படுத்ததும், துாங்கி விட்டனர். எனக்கு தான் துாக்கம் வரவில்லை.
முன்பின் அறிமுகமில்லாத வீட்டில், இவர்களால் எப்படி சகஜமாக இருக்க முடிகிறது என்று, ஆச்சரியமாக இருந்தது.
விடிந்ததும், அப்பெண்களை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க சொன்னேன். பேரனுடன் வந்த ஒரு நண்பன், அவர்களை, 'கால் டாக்சி'யில் அனுப்பி வைப்பதாக கூறி, அழைத்துச் சென்றான்.
இன்னொரு நண்பன், ஏற்கனவே எங்கள் வீட்டுக்கு வந்திருப்பதால், அவனிடம், 'இப்படியெல்லாம் பெண்களுடன் சுற்றுவது தவறு... இது, பிரச்னையை ஏற்படுத்தும். இனி, அப்பெண்களுடனோ, அந்த இன்னொரு நண்பனுடனோ சேர வேண்டாம்...' எனக் கூறி, அனுப்பி வைத்தேன்.
பெண்கள் ஏன், இப்படி மாறி போயினர். இதுவா பெண் சுதந்திரம். இவர்கள், தங்கள் பெற்றோருக்கும் உண்மையாக இல்லை. சுய மரியாதையையும் காப்பாற்றி கொள்ள தெரியவில்லை.
பெற்றோருக்கு நல்ல மகளாக, ஆசிரியருக்கு நல்ல மாணவியாக, குழந்தைக்கு நல்ல தாயாக, குடும்பத்தை தாங்கும் துாணாக இருக்க வேண்டிய பெண்கள், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று சீரழிந்து போகின்றனரே... இப்படி இருக்கவா, பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பாடுபட்டனர், நம் முன்னோர்.
ஆண்களை மட்டும் குற்றம் சொல்வது என்ன நியாயம்...
மூன்று மாதமாக என் மனதிற்குள் புழுங்கிய விஷயத்தை, இப்போது உன்னிடம் சொல்லி விட்டேன், அந்து...
-இவ்வாறு எழுதியிருந்தார்.
இனி, பாரம்பரியம், கலாசாரம் அது இது என்றெல்லாம் பேசி பிரயோஜனமில்லை என்று தோன்றியது, எனக்கு.
'டெட்லி வெப்பன்ஸ்' என்னும் ஆங்கில படத்தில் நடித்துள்ள, மார்கன் என்னும் ஹாலிவுட் நடிகையின் மார்பளவு, 72 அங்குலமாம். இதை கேலி செய்ய என்ன இருக்கிறது? ஆனாலும், அங்குள்ள ஒரு விமர்சகர் எழுதியிருப்பது:
'நடிகை மார்கன், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டால், அதிகம் ஓடாமலே வெற்றி பெறுவார்...' ஜோக் என்று எடுத்துக் கொண்டால், சிரித்து வையுங்களேன்!
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.