PUBLISHED ON : ஏப் 07, 2019

வங்க மொழியில், பொது என்ற நாடகத்தின் தழுவலான, நானும் ஒரு பெண் படத்தின் கதையை கேட்ட அப்பா, கிருஷ்ணன் - பஞ்சுவை வைத்து இயக்க கூறினார்.
நானும், என் சகோதரர்களும்,'ஏ.சி.திருலோகசந்தரை இயக்குனராக வைத்து செய்யலாம்...' என்ற, எங்கள் விருப்பத்தை சொன்னோம்.
'அவர், ஏற்கனவே, வீரதிருமகன் படம் செய்து, அது, சுமாராகத்தான் ஓடியது. கிருஷ்ணன் - பஞ்சு நமக்கு வெற்றி படம் தந்தவர்களாயிற்றே...' என்றார்.
இருந்தாலும், எங்கள் விருப்பம், ஏ.சி.திருலோகசந்தர் பெயரிலேயே இருந்ததை அறிந்து, 'வேண்டுமானால், அவரை இயக்குனராக மட்டும் வைத்து, வேறு ஒரு நல்ல கதாசிரியரை நியமித்து, திரைக்கதை அமைத்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
அப்போது, பாசமலர் படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அதன் கதாசிரியர், கே.பி.கொட்டாரக்கரா, இயக்குனர், பீம்சிங் மூலமாக ஏற்கனவே எங்களுக்கு பழக்கமாகி இருந்தார். அதனால், கொட்டாரக்கராவை வைத்தே திரைக்கதையை எழுதச் சொல்லலாம் என்று நினைத்தோம்.
அவரை சந்தித்து, நாங்கள் எடுக்கப் போகும் கதையை சொன்னோம். 'இந்த கதையில், சில மாற்றங்களை புதுமையாகவும், அழுத்தமாகவும் செய்து, திரைக்கதை அமைத்து தர முடியுமா...' எனக் கேட்டோம்; அவரும், செய்து தர சம்மதித்தார்.
ஆனால், இயக்குனர் திருலோகசந்தர், 'நானே ஒரு கதாசிரியன். என் இயக்கத்தில் வேறு ஒருவர் திரைக்கதை எழுதுவது, எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்...' என்றார்.
இருந்தாலும், நாங்கள் விடவில்லை. 'இந்த படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதுபோல, திரைக்கதையை வேறு ஒருவர் எழுதுவதில், நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்...' என்று வற்புறுத்தினோம்.
மறுப்பு சொல்ல முடியாத திருலோகசந்தர், 'அவரை, திரைக்கதையை எழுத சொல்லுங்கள்; நானும் உடனிருந்து ஒத்துழைக்கிறேன். ஆனால், திரைக்கதை என் பெயரில் தான் வரவேண்டும்...' என்று, அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
இதை கொட்டாரக்கராவிடம் தயக்கத்தோடு தெரிவித்தோம். எங்களிடம் அவர் கொண்டிருந்த நட்பின் காரணமாக, 'என் பெயர் படத்தில் வரவில்லை என்றாலும், உங்கள் படத்திற்கு திரைக்கதை எழுதி தருகிறேன்...' என்று சம்மதம் தெரிவித்தார்.
நானும் ஒரு பெண் படத்தின் கதை தயாரானது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகியோருடன் கதையில் புதிதாக உருவாக்கப்பட்ட இளம் ஜோடிக்கு, ராஜன் என்ற ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்தோம். அவருடன், புஷ்பலதாவும் நடித்தார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின், ராஜன், என் அப்பாவிடம், 'ஜெமினி ஸ்டுடியோவில் அறிமுகமாகி நடித்த, 'காதல் மன்னன்' தன் பெயருக்கு முன், 'ஜெமினி' என்று சேர்த்து, ஜெமினி கணேசன் ஆனது போல், தங்களின் ஸ்தாபனத்தில் அறிமுகமான நான், என் பெயருக்கு முன், ஏவி.எம்., என்று சேர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கு தாங்கள் அனுமதி தரவேண்டும்...' என, கேட்டுக் கொண்டார்.
அப்பாவும், நாங்களும் சம்மதித்தோம். அதன்படி அவர், ஏவி.எம்.ராஜன் ஆனார்.
ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பிடிக்க வேண்டுமே என்ற நோக்கத்திலேயே சிறப்பாக அமைத்து, படம் பிடித்து வந்தோம்.
கல்லுாரியில் படிக்கும் புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் இருவரும் காதலர்கள்.
என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அப்படி, என்.சி.சி., சீருடையில் இருவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு விஷயத்தில், புஷ்பலதா, ராஜனிடம் ஏமாந்து விடுகிறார்.
அதனால் கோபமடைந்து, ராஜனுடன் செல்லாமல், தனியே வந்து, பேருந்து நிலையத்தில், என்.சி.சி., சீருடையில் நிற்கிறார். அதே சீருடையில், ஸ்கூட்டரில் அங்கு வரும் ராஜன், 'என்னுடன் வா... நான் அழைத்து போகிறேன்...' என்கிறார்.
புஷ்பலதா கோபத்தில் மறுக்கிறார்.
உடனே ராஜன், 'ஏமாறச் சொன்னது நானோ... என் மீது கோபம் தானோ... மனம் மாறிப் போவதும் ஏனோ... எங்கே நீ சென்றாலும் விடுவேனோ...' என்று பாட, புஷ்பலதா விலகிச் செல்ல, ராஜன், என்.சி.சி.,யிலிருந்து வந்த அதே பாதிப்பில், புஷ்பலதா நடந்து செல்வதற்கு தகுந்தபடி, 'லெப்ட்... ரைட்... லெப்ட்... ரைட்... அபவுட் டர்ன்...' என்று பாடலை தொடர்ந்து பாடுவார்.
இந்த பாடலை எடுக்க, பெங்களூரு விதான் சவுதாவின், கர்நாடக சட்டசபை கட்டடம் பின்னணியில் அமைந்திருக்கும் பிரதான சாலையை கண்டோம். அந்த சட்டசபை கட்டடத்தின் தோற்றமும், சாலையும், என்.சி.சி., சீருடையில் காதலர்களின், அணிவகுப்பு நடைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.
ஒரு மாநில சட்டசபை கட்டடம் முன், சினிமா காட்சி எடுக்க விடுவரா... அது, எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தும், பாடல் காட்சி சிறப்பாக வரவேண்டுமே என்ற ஆதங்கத்தில், பெரும் முயற்சி செய்து, அதிகாரிகளிடம் மன்றாடி அனுமதி பெற்று, பாடல் காட்சியை நல்லமுறையில் எடுத்து விட்டோம்.
படம் முடிந்து, தணிக்கை சான்றிதழ் வாங்குவதற்காக, படத்தை போட்டு காட்டினோம். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், 'படம் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு பகுதியை மட்டும் நீக்க வேண்டும். அதை செய்து கொடுத்து விடுங்கள்; சான்றிதழ் கொடுத்து விடுகிறோம்...' என்றனர்.
தணிக்கை செய்யும் அளவிற்கு படத்தில் தவறுதலான காட்சிகள் அப்படி என்ன இருக்கிறது என்று புரியாத நாங்கள், 'எந்த பகுதி...' என, கேட்டோம்.
'என்.சி.சி., சீருடையில் காதலர்கள், 'டூயட்' பாடுவது சரியில்லை. அந்த பகுதியை நீக்கம் செய்கிறோம்...' என்றனர்.
'என்.சி.சி., மாணவர்கள், விளையாட்டாக பாடுவது போலத்தானே எடுத்திருக்கிறோம். எந்த விரசமும் அதில் இல்லையே...' என்றோம்.
'அது, அந்த சீருடையை அவமானப் படுத்துவது போல நாங்கள் உணர்கிறோம். அதனால், நீங்கள் அந்த பகுதியை நீக்கியே தீர வேண்டும்...' என்று பிடிவாதமாக கூறினர்.
நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம். தணிக்கை குழுவின் எந்த உறுப்பினரும், எங்கள் வாதங்களுக்கு செவி சாய்க்கவே இல்லை.
மீண்டும் பெங்களூரு சென்று, என்.சி.சி., சீருடையை மாற்றி, அதே விதான் சவுதா கட்டடம் முன் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால், அது பெரிய கஷ்டம். நிச்சயமாக அவர்கள் அனுமதி தரமாட்டார்கள். அதற்காக முயன்று பார்க்க கூட அவகாசம் இல்லை.
மேலும், படத்தின் வெளியீடு தேதியும் நெருங்கி விட்டது. வேறு வழியே இல்லாமல், அந்த பாடலை இங்கேயே மாற்றி எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானோம்.
ஏவி.எம்., ஸ்டுடியோவில், அதேபோல், பேருந்து நிலைய அரங்கம் போட்டு, என்.சி.சி., சீருடையில் இல்லாமல் படம் பிடித்து காட்டினோம். அதன் பிறகு தான், தணிக்கை குழு உறுப்பினர்கள் திருப்தி அடைந்து, சான்றிதழ் கொடுத்தனர்.
— தொடரும்.
ஏவி.எம்.குமரன்