
கே
இந்த வாரம் குட்டி குட்டி தகவல்கள் மட்டுமே...
ஓடையின் மேல் பகுதியில், ஒரு ஓநாய் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தில், ஆட்டுக்குட்டி ஒன்று, தண்ணீர் குடித்தது. ஆட்டுக்குட்டியை பார்த்து, 'ஏன், நான் குடிக்கும் தண்ணீரை கலக்குகிறாய்...' என்று கேட்டது, ஓநாய்.
'நீ தண்ணீர் குடிப்பது மேட்டு பகுதியில்... நானோ, பள்ளத்தில் இருக்கிறேன். நான் எப்படி, நீ குடிக்கும் தண்ணீரை கலங்கல் செய்ய முடியும்...' என்றது, ஆட்டுக்குட்டி.
'என்னையா எதிர்த்து பேசுகிறாய்...' என்று கோபத்துடன் பாய்ந்து, ஆட்டுக்குட்டியை அடித்து தின்று விட்டது, ஓநாய்.
-இந்த, ஈசாப் கதையை குப்பண்ணாவிடம் கூறியதும், 'அது சும்மா, கதைக்காக சொன்னது. உண்மையில், ஆடுகள், ஓடும் நீரை குடிக்காது. பூமியிலோ, பாத்திரத்திலோ இருக்கும் தண்ணீரை தான் குடிக்கும்..' என்றார்.
இது, நிஜந்தானா?
டாக்டர் ஒருவர் கூறிய தகவல் இது:
மருந்தில்லா நோய்கள் சில உண்டு. உதாரணத்திற்கு...
பொன்னுக்கு வீங்கி: இந்நோய், பெண்களுக்கென்றே பிறந்த, ஒரு பயங்கர தொற்று நோய். அடுத்த பெண்ணின் கழுத்தில் ஏதாவது ஒரு புதிய நகை இருந்தால், அதை பார்க்கும் பெண்ணுக்கு, இந்நோய் தொற்றிக் கொள்ளும். அந்த நகையை செய்து போட்டவுடன், இந்நோயின் தீவிரம் குறைந்து விடும். ஆனால், முழுமையாக குணமாகாது. கொஞ்ச காலத்தில் மீண்டும் தலை துாக்கும்.
இருமல் - தும்மல்: இந்நோய், எல்லாரிடமும் இருந்தாலும், கல்லுாரி மாணவ - மாணவியரிடையே மிக அதிகம். பேராசிரியர் ரொம்ப, 'போர்' அடிக்கும்போது, கடைசி பெஞ்சிலிருந்து ஆரம்பமாகி, முதல் பெஞ்சில் முடியும்.
இளம்பிள்ளை வாதம்: இந்நோய், எல்லா சிறுவர் - சிறுமியரிடையேயும் காணப்படும். இந்நோயின் அறிகுறி, அசட்டுத்தனமான கேள்விகள் கேட்பதாகும். இந்த நோய்க்கு மருந்து, பதில் சொல்வதற்கு தேவையான பொறுமை!
டாக்டர் சொன்னது, கிண்டலுக்காக கூட இருக்கலாம்... புரிந்து கௌ்ளுங்கள்!
சென்னையின் அடையாளமாக மாறிய, அந்த மிகப்பெரிய வணிக வளாக வாசலில் நின்றிருந்த போது, கேட்ட சங்கதி:
அங்கு வந்த இரு இளம்பெண்கள், யாருக்காகவோ காத்திருந்தனர். அப்போது, எதிர்திசையில் இருந்து வந்த பெண்ணை பார்த்து, 'சண்டே இஸ் பெட்டர் தென் மண்டே' என்றாள், ஒரு பெண்.
உடனே, அந்த பெண், தன் உடையை சரி செய்தபடி, சென்றாள். 'இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாள்...' தோழி.
'உன் பிரா பட்டை ஜாக்கெட்டுக்கு வெளியில் தெரிகிறது; சரி செய்து கொள்...' என்பது, அர்த்தம் என்றாள். அதன்பின், இன்னும் சில, மறைமுக வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் கூறினாள்...
'பாரின்' போகணும்; என்றால், சிறுநீர் கழிக்கணும்; ஜிப்சம் கம்பெனியை மூடு என்றால், 'பேன்ட் ஜிப்' போட மறந்து விட்டாய், உடனே, 'ஜிப்' போடு; 'பிராப்ளம்' என்ன என்றால், 'பிரா' அளவு என்ன... 'ஆப் ரின்' வாங்கணும் என்றால், 'சானிட்டரி நாப்கின்' வாங்கணும்; 'குட்டீஸ்' வாங்கணும் என்றால், 'பேன்டீஸ்' வாங்கணும் என்று, அடுக்கியபடியே போனாள்.
போகிற போக்கை பார்த்தால், இன்றைய இளம் பெண்கள், தங்களுக்கென தனியாக ஒரு அகராதியையே உருவாக்கி விடுவர் போலிருக்கிறதே என்று, நினைத்துக் கொண்டேன்.
டாக்டர் மாத்ருபூதம் எழுதிய, 'புன்னகை பூக்கள்' நுாலில் இருந்து:
ஒருமுறை நான், ரயிலில் பயணம் செய்தபோது, ஏழெட்டு குழந்தைகளுடன் வந்திருந்தார், ஒருவர். அவருக்கு, வயது, 45க்குள் தான் இருக்கும்.
நான் அவரிடம், 'இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு எவ்வளவோ செலவழித்து விளம்பரமெல்லாம் கொடுக்கிறதே... அதை, நீங்கள் பார்த்ததில்லையா...' என்றேன்.
'அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க... இந்த குழந்தைகள் எல்லாம் கடவுள் கொடுத்த சொத்து...' என்றார்.
'அது எப்படியப்பா, கடவுள் கொடுக்கிறதா இருந்தா கூட, நீ கர்ப்பத்தடை முறைகளை கடைப்பிடித்திருந்தால், இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே... அதற்கு கடவுள் என்ன, தடையா சொல்லப் போகிறார்...' என்றேன்.
அவர் கேட்பதாக இல்லை. 'உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார்... இது, கடவுள் கொடுத்த வரம்... வேறு யாரிடமாவது போய் பேசுங்கள்...' என்றார்.
பின், வண்டி கிளம்பியது. எல்லாரும் துாங்க ஆரம்பித்தோம். 'ஜிலு ஜிலு'வென்று காற்று அடித்ததால், கழிவறை செல்ல வேண்டும் என்று எழுந்தேன்.
அப்போது, அருகில் படுத்திருந்த, ஆசாமியின் வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பி, 'வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொள்ளுங்கள்; கடவுள் கண்ணுக்கு தெரிகிறார்...' என்றேன்.
மெசபடோமியாவில், பிலிப் மன்னருக்கு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஊர் மக்களை ஒன்று திரட்டி, உப்பரிகை மேல் நின்று, அவர்கள் மீது தங்க நாணயங்களை அள்ளி வீசினார். கடைசியாக நின்றிருந்தவரின் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசியபடியே இருந்தார். அப்போது, மக்கள் எல்லாரும் மகிழ்ச்சி பொங்க, தன் குழந்தையை வாழ்த்துவது கண்டு, மனம் பூரித்தார், மன்னர்.
அருகில் இருந்த அமைச்சர் ஒருவர், 'மன்னா... ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை, மக்களிடம், தங்க காசு கொடுத்து மகிழ்கிறீரோ...' என்று கேட்டார்.
'இல்லை... இல்லை... ஆண் மகவு பிறந்ததற்காக, நான் தங்க காசு கொடுக்கவில்லை. எனக்கு பாடம் நடத்தி, புத்திசாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது, என் மகன் பிறந்துள்ளான். அவர், என் மகனையும் மிகப்பெரும் அறிவாளியாக, இந்த உலகிற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோஷத்தில் தான், இந்த பொற்காசுகளை அள்ளி வீசுகிறேன்...' என்றார்.
அவர் சொன்னபடி, பிற்காலத்தில் மிகப்பெரும் அறிவாளியாக, வீரனாக உருவெடுத்தான், பிலிப்பின் மகன். அவன் தான், மாவீரன் அலெக்சாண்டர்.
சிறந்த ஆசிரியரால் மட்டுமே, ஒருவனை மிகச்சிறந்த மனிதனாக மாற்ற முடியும் என, அன்றே, பிலிப் மன்னர் நம்பினார்; ஆசிரியர் அரிஸ்டாட்டிலும், அவர் நம்பிக்கையை காப்பாற்றினார்.