sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏவி.எம்., சகாப்தம் (21)

/

ஏவி.எம்., சகாப்தம் (21)

ஏவி.எம்., சகாப்தம் (21)

ஏவி.எம்., சகாப்தம் (21)


PUBLISHED ON : ஏப் 28, 2019

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், 125வது படம், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை, அப்பாவிடம் தெரிவித்திருந்தார், அவர்.

அதனால், இந்த படத்தை சிறப்பாக எடுக்கும் எண்ணத்தில், இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு, கதாசிரியரும், நடிகருமான, ஜாவர் சீதாராமன் மற்றும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர்கள், கதாசிரியர்களிடமெல்லாம் கலந்து ஆலோசித்தார்.

சிவாஜி நடிப்பதற்கு ஏற்ற கதை குறித்த விவாதத்தில் இருந்தார், அப்பா. நானும், சகோதரர்களும் உடன் இருந்தோம். அப்போது, அப்பாவின் நெருங்கிய நண்பரான, கோல்கட்டாவை சேர்ந்த, வி.ஏ.பி.ஐயர் வந்திருப்பதாக கூறினர். அவரையும் இந்த விவாதத்தில் கலந்துகொள்ள செய்தார்.

எங்களின் கதை விவாதத்தில் பங்கேற்றவர், 'உத்தர் புருஷ் என்று வங்க மொழியில் ஒரு படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால், அந்த படத்தின், பிரதியை வரவழைக்கிறேன், பாருங்கள்...' என்றார். உடனே, அதற்கான ஏற்பாட்டை செய்யக் கூறவே, மறுநாளே விமானத்தில், சென்னைக்கு வந்து சேர்ந்தது, அப்படச்சுருள்.

ஏவி.எம்.,மில், 'ஏசி' தியேட்டரில், படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, வங்க மொழி வசனங்களை மொழி பெயர்த்து, அப்பாவிடம் சொன்னார், வி.ஏ.பி.ஐயர். அதன் கதை, எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது.

'சிவாஜி நடிப்பதற்கு ஏற்ற கதை தான். ஆனால், இதை அப்படியே நாம் எடுக்க முடியாது. தமிழ் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில், மாற்றி படமாக்கலாம்...' என்றார், அப்பா.

அந்த பொறுப்பை, ஜாவர் சீதாராமன் ஏற்று, இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சுவின் ஆலோசனையோடு, கதையை அருமையாக அமைத்துக் கொடுத்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கேமரா மேன், வி.என்.சுந்தரம் என முடிவானது.

கதையை கேட்ட சிவாஜி, உடனே, 'கால்ஷீட்' கொடுத்தார். சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, பாரதி, சிவக்குமார், அசோகன் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோரின், 'கால்ஷீட்'டும் வாங்கி, படப்பிடிப்பு தேதியை முடிவு செய்தோம்.

கொடைக்கானலில், உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது.

வெள்ளிக் கிண்ணம் தான்... தங்க கைகளில்... வைரச் சிலை தான்... எந்தன் பக்கத்தில்...என்று பாடியபடி படகில் வருவது போல், சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடித்தனர். அடுத்து...

என் கேள்விக்கென்ன பதில்... உன் பார்வைக்கென்ன பொருள்... என்ற பாடலை, சிவக்குமார், பாரதி பாடும்படியாக எடுத்தோம்.

பாடல் காட்சியோ, வசன காட்சியோ எடுக்கப்பட்ட உடனே, அதை, 'எடிட்' செய்து, அப்பாவுக்கு போட்டு காட்டி, அவர், ஒப்புதல் சொன்ன பிறகே, அடுத்தகட்ட வேலையை ஆரம்பிப்போம். அதன்படி, அந்த இரண்டு பாடல்களையும் போட்டு காட்டினோம்.

'வெள்ளிக் கிண்ணம் தான்... தங்கக் கைகளில்...பாடல் பிரமாண்டமாக வந்திருக்கிறது. ரொம்ப நல்லா இருக்கு. இதில் ஏதும் மாற்றம் செய்யத் தேவையில்லை. என் கேள்விக்கென்ன பதில்...பாடலை எடுத்த விதம் சரியில்லை. எனக்கு பிடிக்கவில்லை...' என்று கூறி விட்டார்.

காரணம் கேட்டோம். 'கதைப்படி, ஏழ்மையில் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும், நவீன உடையில், மேற்கத்திய இசைக்கேற்ப பாட்டு பாடி, நடனம் ஆடுவது பொருத்தமாக இல்லை...' என்றதும் தான், எங்கள் தவறு புரிந்தது. அப்பாவின் ஆலோசனைபடி, அந்த பாடல் காட்சி மீண்டும் எடுக்கப்பட்டது.

ஒரு காட்சியில், மலையின் அழகை ரசித்தபடி வந்த சிவாஜி, ஒரு இடத்திற்கு வந்ததும், காரை நிறுத்தச் சொல்வார்.

ஏன் என்று புரியாமல் காரணம் கேட்ட டிரைவர் மேஜர் சுந்தர்ராஜனிடம், 'இந்த வழியாக நாம் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும்போது நடந்த நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்து விட்டன...' எனக் கூறி, அந்த நிகழ்ச்சிகளை பற்றி மனம் விட்டுப் பேசுவார்.

'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...' என்றார், இயக்குனர்களான, கிருஷ்ணன் - பஞ்சு.

நானும், மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டோம்.

கதையில், பாடல் தேவைப்படும் இடத்தை, இசையமைப்பாளர், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்லி, 'சிவாஜிக்கு ஏற்றார் போல், ஒரு நல்ல மெட்டு அமைத்துக் கொடுங்கள்...' என்றேன்.

'என்னங்க இது... நண்பர்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் பாடலா... புரியவில்லையே... காதலர்கள் சந்திப்பில் ஒரு காதல் பாட்டு என்றால் கூட, நகைச்சுவை தோன்றும்படியாக ஏதேனும் செய்யலாம். சோகப் பாட்டு என்றால்...' என்று தயங்கினார்.

அப்போது, சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் வரும் ஒரு காட்சியை, எம்.எஸ்.வி.,யிடம் விவரித்தேன். புரிந்துகொண்டவர், 'வாலியை வரச்சொல்லுங்கள்... பாடலை, 'கம்போஸ்' பண்ணி விடுவோம்...' என்றார்.

'சிறு வயதில், பள்ளி சென்றதும், விளையாடியதுமான அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார், சிவாஜி. இடையிடையே அந்நிகழ்ச்சிகளை வசனமாகவும் பேசுகிறார். இப்படி ஒரு பாடல் வேண்டும். இடையில் வரும் வசனங்களையும் நீங்கள் தான் எழுத வேண்டும்...' என்றோம்.

இதைக் கேட்டவுடன், நாங்கள் சொன்ன முதல் வாக்கியத்தையே முதலடியாக வைத்து... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே... என்ற பாடலை சொல்ல ஆரம்பித்தார், வாலி.

உடனே, எம்.எஸ்.வி., அந்த வரிகளை பாடலாக பாடி காண்பித்தார். இப்படியாக, வாலி எழுதவும், எம்.எஸ்.வி., பாடவும், 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.

அக்காலத்தில் இப்போது போல, 'மல்டி டிராக் ரிக்கார்டிங்' வசதி கிடையாது; 'சிங்கிள் டிராக்' தான். அதனால், ஒரே சமயத்தில் பாடலும், அதன் நடு நடுவே வரும் வசனங்களையும் பேசி, பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக, சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன் இருவரையும், 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு வரவழைத்து, ஒரு மைக்கில், டி.எம்.எஸ்., பாட, இன்னொரு மைக்கில், சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் ஜோடியாக வசனம் பேச, இந்த பாடல் சிறப்பாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இதே போன்று, இன்னொரு சிறந்த பாடல்... நாளை இந்த வேளை பார்த்து... ஓடி வா நிலா... இன்று எந்தன் தலைவன் இல்லை, சென்று வா நிலா... இந்த பாடலை, ஸ்டுடியோவில், கொடைக்கானல் போன்று, 'செட்' போட்டு படமாக்க முடிவு செய்தோம். மூன்றே நாளில், அமைத்துக் கொடுத்தார், சேகர்.

மலை செட்டில் பனிமூட்டங்கள் பரவி வர, வானத்தில் தோன்றும் நிலவின் வெளிச்சம் பனிமூட்டத்தில் ஊடுருவும் வகையில் மிக அற்புதமாக, 'லைட்டிங்' அமைத்தார் கேமரா மேன், பி.என்.சுந்தரம்.

இப்பாடல் காட்சி, உண்மையிலேயே கொடைக்கானலுக்கு சென்று எடுத்தது போலவே, வெகு அற்புதமாக இருந்தது.

இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அகில இந்திய அளவில், திரையுலகின் பல்வேறு துறைகளில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பாடகர்களுக்கான விருது, அதுவரை வழங்கப்படவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக, பாடகர்களுக்கும் விருது வழங்கப்பட வேண்டும் என்று, அப்போது தான், மத்திய அரசு முடிவு செய்து அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு வந்ததும், அகில இந்திய அளவில், 'சிறந்த பாடகி' ஆக தேர்வு செய்யப்பட்டார், பின்னணி பாடகி, பி.சுசீலா. அதற்கு காரணமாக இருந்தது,

ஏவி.எம்., தயாரிப்பில் உருவான, உயர்ந்த மனிதன் படம். 1968ல், 'அகில இந்திய சிறந்த பெண் பாடகி' என்று, பி.சுசீலாவுக்கு, ஜனாதிபதி விருது கிடைத்தது.

படம் முடிந்து வெளியானது. இப்படத்தில் பணியாற்றிய அனைவரது உழைப்புக்கும் பரிசாக, ரசிகர்களும், மக்களும் மாபெரும் வெற்றியை தந்தனர்.

சிவாஜியின், 125வது படத்தை வெற்றிகரமாக எடுத்து வெளியிட வேண்டும் என்ற, எங்கள் அப்பாவின் முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

- தொடரும்

ஏவி.எம்.குமரன்







      Dinamalar
      Follow us