
பா - கே
சென்னை பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியராக பணிபுரியும், வாசகி ஒருவர், என்னை சந்திக்க வந்திருந்தார்.
'பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டனவே... உங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு...' என்று கேட்டேன்.
'ஆம்... 100 சதம் இல்லாவிட்டாலும், கவுரவமான இடம் கிடைத்துள்ளது...' என்றவர், மேலும் தொடர்ந்து, 'மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் குறைந்து வருகிறதோ என தோன்றுகிறது, மணி...' என்றார்.
'ஏன்... இப்படி சொல்கிறீர்கள்?' என்றேன்.
'படிப்பில் பின்தங்கிய மாணவன் ஒருவனின், மதிப்பெண் பட்டியலை பார்த்தேன். சராசரி மதிப்பெண் வாங்கியிருந்தான். அவனை அழைத்து, 'ஏன், மார்க் குறைந்து விட்டது...' என்று கேட்டேன். சில கருத்துக்களை கூறி, அதிர வைத்தான்...' என்றார்.
அவன் கூறியது இது தான்:
* நான் படிக்கிற போது, என் பெற்றோர் சண்டை போடாமல் இருந்திருந்தால், நன்றாக படித்திருப்பேன்
* எனக்கு நல்ல நண்பர்கள் வாய்த்திருந்தால், என் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றிருப்பேன்
* என் உடல் நலம் மட்டும் நன்றாக இருந்திருந்தால், இன்னும் அதிக மதிப்பெண் எடுத்திருப்பேன்
* கணித ஆசிரியர், நன்கு பாடம் நடத்தியிருந்தால், மேலும் சிறப்பாக தேர்வு எழுதியிருப்பேன்
* அக்காவும், அண்ணனும் கொஞ்சம் உதவியிருந்தால், இன்னும் ஒருபடி மேலே முன்னேறியிருப்பேன்
* பக்கத்து வீட்டில், 'டிவி' சத்தம் குறைவாக இருந்திருந்தால், அமைதியாக படித்திருப்பேன்
* வகுப்பில், என் அருகிலிருந்த மாணவன், பாடங்களை நன்கு கவனித்திருந்தால், நானும் பாடங்களை கவனித்திருப்பேன்
* எனக்கு மட்டும் பேச வாய்ப்பு கொடுத்திருந்தால், என் பிரச்னைகளை அப்போதே பேசியிருப்பேன்...
'எனக்கு இவையெல்லாம் கிடைத்திருந்தால், இவற்றையெல்லாம் சாதித்திருப்பேன்... என்று அந்த மாணவன் சொல்லிக் கொண்டே இருந்தான். அவன் வயதில், அவன் எதிர்பார்ப்பது எல்லாமே சரியாகவும், நியாயமாகவும் தான் இருக்கிறது.
'ஆனால், அவன் எதிர்பார்ப்புக்கு மாறான சூழ்நிலை அமைந்து விட்டால், எதிர்மறை சிந்தனைகளை விட்டு, நேர்மறையாக சிந்திக்க வேண்டுமல்லவா? அதற்காக, அவன் கூறிய கருத்தை சற்று மாற்றி அறிவுரை கூறி அனுப்பியுள்ளேன். இனி, திருத்திக் கொள்வான் என்று நம்புகிறேன்...' என்றார்.
அவர் கூறிய நேர்மறை கருத்துக்கள் இதோ:
* நான் நன்கு படிப்பதால், என் பெற்றோர் சண்டை போடுவது குறைகிறது
* நல்லவனாக இருப்பதால், எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்
* உடல் நலனில் அக்கறையோடு இருப்பதால், உடல் நலத்தோடு சாதிக்க முடிகிறது
* கணித ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறுவதால், அவர் நடத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது
* அக்கா, அண்ணனுடன் மரியாதையும், அன்பும் கொண்டிருப்பதால், அவர்கள் எனக்கு உதவுகின்றனர்
* பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன், பண்போடு பழகுவதால், படிக்கும்போது, அவர்கள் எனக்கு உதவுகின்றனர்
* வகுப்பில் என் அருகில் இருக்கும் மாணவன் பேசும்போது, அவனை திருத்தி, இச்செயல் கூடாது என்று வழிகாட்டியதால், இருவரும் நன்றாக படிக்கிறோம்
* மற்றவர்களை முறையோடு அணுகியதால் தான், பிரச்னைகளை கேட்டு எல்லாரும் எனக்கு உதவுகின்றனர்.
'இப்படி மாற்றுப்பாதையில் சிந்தித்திருந்தால், செயல்பட்டிருந்தால், படிப்பிலும், வாழ்க்கையிலும் இந்த மாணவன் பின்தங்க மாட்டான்...' என்று முடித்தார், வாசகி.
என்ன இருந்தாலும், தலைமை ஆசிரியர் அல்லவா... அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடு தான்.
ப
வெளிநாட்டை பொறுத்தவரை, நிர்வாணமும், அழகு தான். அதனால், அங்கெல்லாம் எப்போதும் நிர்வாணத்திற்கு தனி கவுரமும், அங்கீகாரமும் உண்டு. அவர்களை பொறுத்தவரை, நிர்வாணம் என்பது, இயற்கையுடன் ஒத்து வாழ்தல். அத்துடன், இதற்கு ஒத்துழைத்து வாழ்வது, ஒவ்வொருவரின் கடமை எனவும் எண்ணுகின்றனர்.
இனி, நிர்வாணமும் அழகு என ஏற்றுக்கொள்ளும் சில இடங்களை பற்றிய சுவாரஸ்ய தகவல் இதோ:
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சம காலத்திய ஓவிய அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதை, 'பாலயிஸ் டி டோக்யோ' என, அழைக்கின்றனர். சமீபத்தில், இங்கு, நிர்வாண வருகையாளர்களுக்காக, முதன் முதலாக ஒரு நாள் அறிவிக்கப்பட்டது. இதற்கு, 30 ஆயிரம் பேர் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்; ஆனால், 160 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
லண்டனில், 'தி பன்யாடி' என்ற பெயரில், ஒரு உணவகம் உள்ளது. இதனுள், மின்சாரம் மற்றும் 'காஸ்' வசதிக்கு அனுமதி இல்லை. வாடிக்கையாளர்கள் நிர்வாணமாய் வந்து, உணவருந்தி செல்லலாம். அத்துடன், பரிமாறும் சர்வர்களும், முக்கிய இடத்தை இலைகளால் மறைத்தபடி, நிர்வாணமாக நடமாடுவர். இதற்கான வரவேற்பு காரணமாக, பல்லாயிரம் வாடிக்கையாளர்கள், பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இதேபோல், ஸ்பெயினின், 'டினீரிப்' மற்றும் பாரிசின், 'ஓ நேச்சுரல்' உணவகங்களிலும், நிர்வாண வாடிக்கையாளர்களுக்கு தனி பிரிவுடன், அனுமதி உண்டு.
அமெரிக்காவின், வாஷிங்டனில், 2005ல், மே மாத முதல் சனிக்கிழமை, ஜாகப்கேபரில் மற்றும் மார்க்ஸ்டோனி ஆகிய இருவரும், ஒரு இயக்கத்தை துவங்கினர். ஆண்டுக்கு, ஒரு நாள் மட்டும், தனியார் மற்றும் பொது தோட்டக்காரர்கள், தங்கள் தோட்டங்களில் நிர்வாணமாக பணிபுரியலாம். இயற்கையுடன் இணைந்து வாழ, இது ஒரு முயற்சி என்பது தான், இதன் நோக்கம்.
இப்போது, இது பரபரப்பாக பேசப்பட்டு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள, 'ஜிம்' செயின் அமைப்பு, நிர்வாண, 'ஜிம்' வகுப்புகளை துவக்கியுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் நடக்கும் இதில் ஆண்கள் தனி, பெண்கள் தனி மற்றும் இருவரும் இணைந்து என, பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நிர்வாணமாக உடற் பயிற்சி செய்வதால், உடம்பு சூடாவது தவிர்க்கப்படுவதுடன், வியர்த்து விறுவிறுத்து போகாமல், எளிதில் சுவாசிக்க இயலுமாம்.
நியூயார்க்கில் இயங்கி வரும், 'தி போல்டு அண்டு நாக்கிடு யோகா ஸ்டுடியோ' இத்தகைய நிர்வாண யோகா வகுப்புகளை, நடத்தி வருகிறது. ஆனால், ஒரு நிபந்தனை... புகைப்படமோ, தொடுதலோ கூடாது. இந்த உடற்பயிற்சி கூடங்களுக்கு, பயனீட்டாளர்களிடம் அமோக வரவேற்பு உள்ளதாம்.
- சே... என்னடா உலகம் இது!