
ஏவி.எம்., ஸ்டுடியோவில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து விட்டோம். இதுவரை, எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக, எம்.ஜி.ஆர்., நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க விரும்பினார், அப்பா. ஆனாலும், அவர் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்ற தயக்கம் இருந்தது.
எங்கள் நண்பரான நடிகர், எஸ்.ஏ.அசோகனிடம், அப்பாவின் விருப்பத்தையும், எங்களின் தயக்கத்தையும் எடுத்துச் சொன்னோம். எம்.ஜி.ஆரை சந்திக்க ஏற்பாடு செய்தார், அசோகன்.
வாஹினி ஸ்டுடியோ, 'மேக் - அப்' அறையில் இருந்த, எம்.ஜி.ஆரை, நானும், சகோதரரும் சந்தித்தோம். அந்த நேரத்தில், எங்க வீட்டு பிள்ளை படம் வெளிவந்து, 'சூப்பர் ஹிட்' ஆகியிருந்தது.
எங்களை பார்த்ததும், 'வாங்க... வாங்க... சகோதரர் இருவரும் சேர்ந்து வந்திருக்கீங்க... என்ன விஷயம்...' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.,
'நாகி ரெட்டியார் மற்றும் சின்னப்பா தேவர் போன்றோருக்கு படம் செஞ்சு கொடுத்திருக்கீங்க, எங்களுக்கு தான் இன்னும் நீங்க படம் பண்ணல... எங்க, ஏவி.எம்.,லும் நீங்க படம் செய்யணும்...' என்றோம்.
உடனே, 'அதுக்கென்ன... ஏவி.எம்.,முக்கு கண்டிப்பா செஞ்சிருவோம். ஏற்பாடு செய்யுங்கள்...' என்றார், எம்.ஜி.ஆர்.,
விபரத்தை அப்பாவிடம் சொன்னோம்.
மகிழ்ச்சியடைந்தவர், 'இயக்குனர், ஏ.சி.திருலோகசந்தரை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல், ஒரு கதை எழுதச் சொல்லுங்கள்...' என்றார்.
அதன்படி, அன்பே வா என்ற பெயரில், கதை எழுதப்பட்டது. கதையை கேட்ட அப்பா, 'கதை நன்றாக இருக்கிறது. ஆனால், இதை இப்படியே எடுத்து போய், எம்.ஜி.ஆரிடம் சொல்லாதீர்கள். படம் முடிவடைந்த பின், 'சென்சார் ஸ்கிரிப்ட்' தயார் செய்வோமே... அதே போல, இந்த கதையை, தலைப்பு முதல் வணக்கம் வரை முழுமையாக செய்து போய், அவர் கையில் கொடுங்கள்...' என்றார்.
ஆரூர்தாசை அழைத்து, வசனம் எழுதி முடித்தோம். அப்பா சொன்னபடியே கதை வசனங்களை, 'பைன்டிங்' செய்து, எம்.ஜி.ஆரை சந்தித்தோம்.
'பைன்டிங் ஸ்கிரிப்டை' வாங்கி பார்த்த, எம்.ஜி.ஆர்., ஆச்சரியப்பட்டு போனார்.
'என்ன இது... இப்படி கொடுத்திருக்கீங்க... ஒவ்வொரு காட்சியின் நேரம், படம் ஓடும் நேரம்ன்னு எல்லாத்தையும் குறித்து, 'சென்சார் ஸ்கிரிப்ட்' போல இருக்கு...' என்றார்.
'இது எங்க வழக்கம்...' என்றோம்.
பின், அவரிடம், 'அவகாசம் கிடைக்கும்போது படித்து பாருங்கள்... உங்கள் கருத்து என்ன என்பதை நீங்கள் சொன்ன பிறகு தான், அடுத்த கட்ட வேலைகளை கவனிப்போம்...' என்றோம்.
'இந்த, 'ஸ்கிரிப்டை' ஏவி.எம்., ஐயா படிச்சாங்களா... அவங்க ஒப்புதல் பண்ணிட்டாங்களா...' என்று கேட்டார்.
'ஆமாம்!' என்றோம்.
'அப்படியானால், இதுல எந்த மாறுதலும் செய்வதற்கில்லை. அவங்க, ஒப்புதல் சொல்லிட்டதால, இதில் என்ன இருக்கிறதோ, அத அப்படியே எடுங்க...' என்றார்.
உடனடியாக, சரோஜாதேவி, நாகேஷ், மாதவி, அசோகன், பி.டி.சம்பந்தம் மற்றும் டி.ஆர்.ராமசந்திரன் ஆகியோரின், 'கால்ஷீட்' வாங்கி முடித்தோம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி, முதல் பாடலான... 'புதிய வானம்... புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது...' என்று எழுதினார்.
இந்த பாடலை படமாக்க, சிம்லா சென்றோம். அங்கு தான், இந்த பாடலை முதன் முதலாக கேட்ட, எம்.ஜி.ஆர்., நன்றாக இருக்கிறது என்று, எந்த மாறுதலும் சொல்லாமல் நடிக்க துவங்கினார்.
சிம்லா மற்றும் ஊட்டியில், பாடல் காட்சிகளை படமாக்கினோம்.
ஒரு கனவு காட்சிக்கான பாடல், 'ரிக்கார்டிங்' செய்வதற்காக, எம்.எஸ்.வி.,யை சந்தித்தோம்.
'பாடல் எப்படி இருக்க வேண்டும்...' என்று கேட்டார், எம்.எஸ்.வி.,
'உங்கள் விருப்பப்படி புதுமையாக அமைத்து கொடுங்கள்... நீங்கள் அமைக்கும் இந்த பாடலை, ரசிகர்கள் திரும்ப திரும்ப கேட்க வேண்டும்... அந்த பாடல் காட்சியை பார்ப்பதற்கென்றே, ரசிகர்கள், தியேட்டருக்கு வரவேண்டும்... அப்படி ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்...' என்றேன்.
கவிஞர் வாலியும் வந்திருந்தார். பாடலுக்கு, 'டியூன்' போட ஆரம்பித்தார், எம்.எஸ்.வி., 15 'டியூன்'களுக்கு மேல் போட்டு காட்டினார். எதிலும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. இதை கவனித்த, எம்.எஸ்.வி., சலிப்பாகி, 'சரி... இன்னிக்கி விட்ருங்க...' என்றவர், ஆர்மோனிய பெட்டியை மூடி, 'நாளைக்கு, 'பியானோ'வை ஏற்பாடு செய்யுங்கள். அதில் வாசித்து பார்ப்போம்...' என்று, புறப்பட்டார்.
மறுநாள் -
நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பியானோவில் வாசிக்க ஆரம்பித்தார். எடுத்த எடுப்பிலேயே ஒரு நல்ல மெட்டு வந்தது. எனக்கும் அது பிடித்திருந்தது.
'அப்பாடா...' என்றார், எம்.எஸ்.வி., உடனே... 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... கண் தேடுதே சொர்க்கம்...' என்று எழுத ஆரம்பித்தார், வாலி.
பாடல் நன்றாக வந்தது. அன்று மாலையே, 'ரிக்கார்டிங்' செய்யப்பட்டு, மறுநாள் படப்பிடிப்பு நடத்த முடிவானது.
சிம்லாவில் பனிச்சறுக்கு காட்சிகளை எடுப்பதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்பே இயக்குனர், கேமராமேன் புறப்பட்டு போய் விட்டனர்.
எம்.ஜி.ஆர்., - சரோஜாதேவி இருவரும், இரண்டு நாட்கள் கழித்து தான், சிம்லா செல்லவிருந்தனர். அந்த இரண்டு நாட்களில், சென்னையில், கனவு காட்சி பாடலை எடுத்துவிட, நாங்கள் தீர்மானித்தோம்.
குதிரை பூட்டிய சாரட் வண்டியில், எம்.ஜி.ஆர்., - சரோஜாதேவி இருவரும் ஆகாயத்தில், அந்தரத்தில் உலா வந்து பாடுவது போல, அரங்கம் அமைத்திருந்தார், ஆர்ட் டைரக்டர், ஏ.கே.சேகர்.
'ஷூட்டிங்' நாளன்று, காலையில் வேறு ஒரு படப்பிடிப்பில் நடித்து விட்டு, மாலை, 5:00 மணிக்கு எங்கள், 'செட்'டுக்கு வந்தார், எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியும் வந்தார்.
அங்கு, இயக்குனர், கேமராமேன் இருவருமே இல்லாததை அறிந்த, எம்.ஜி.ஆர்., 'என்ன இது... இருவருமே இல்லாமல் எப்படி படம் எடுப்பீர்கள்...' என்று கேட்டார்.
'கவலைப்படாதீங்க... எங்க அண்ணன் முருகன் இயக்குவார். கேமராமேன் மாருதி ராவும் இருக்கிறார்...' என்றேன்.
எந்த மறுப்பும் சொல்லாமல், படப்பிடிப்பில் பங்கேற்று, இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்து, சிம்லா புறப்பட்டார், எம்.ஜி.ஆர்.,
அப்போது, 'இது, நல்லா வருதா பாருங்க... இல்லேன்னா இயக்குனரை வச்சு மறுபடியும் இந்த காட்சிகளை படம் பிடித்துக் கொள்ளலாம்...' எனக் கூறி சென்றார்.
உடனே நாங்கள், அப்போது படம் பிடித்த பாடல் பிலிமை, 'ஸ்பெஷல் எபெக்ட்' செய்து வர, எடிட்டர் கோபுவை மும்பைக்கு அனுப்பினோம்.
குதிரை பூட்டிய சாரட் வண்டி, 'ஷாட்'களில், நட்சத்திர கூட்டங்கள் மின்னி மின்னி ஒளிவெள்ளம் பாய்ச்ச, ஆகாய மார்க்கத்தில் தேர் வருவதை போல அருமையாக, 'டெவலப்' செய்து, இரண்டே நாளில் சென்னைக்கு எடுத்து வந்து விட்டார்.
அதை, 'எடிட்' செய்து பார்த்தோம்; அற்புதமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கும், அப்பாடல் காட்சி பிடித்து போனது.
அன்பே வா படம், நல்ல முறையில் முடிவடைந்து, 1966ல் வெளியானது. சென்னையில், 'காசினோ' தியேட்டரில், ராஜாவின் பார்வை பாடலை, ரசிகர்கள், 'ஒன்ஸ்மோர்' கேட்டு ஆரவாரம் செய்யவே, திரும்பவும் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த வரவேற்பு, தமிழகம் முழுவதும் இருந்தது.
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை, முழு மனதுடன் ஒத்துழைப்பு கொடுத்தார், எம்.ஜி.ஆர்., மேலும், என் அப்பா, ஒப்புதல் சொன்னால் சரி என்று, படப்பிடிப்பில் எந்த விஷயத்திலும் தலையிடாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
அன்பே வா படத்தின் வெற்றியில், மக்கள் திலகம், எம்.ஜி.ஆரின் பெரும் பங்கு இருந்தது என்பதை, பெருமையோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
— முற்றும்
ஏவி.எம்.குமரன்