'பீச் மீட்டிங்'கின் போது, உளவியல் பேராசிரியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் பேசியபோது, மனிதனின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பது, ஓரளவு புரிந்தது.
மனித இயல்பை புரிந்து கொண்டால், அவர்களுடன் பழகுவது எளிதாகும்; பிரச்னை ஏற்படுவதும் குறையும். அவர் கூறிய அந்த உளவியல் ரகசியங்களை இங்கே கொடுத்துள்ளேன்:
* அதிகம் சிரிப்போர், அதிகம் தனிமையில் வாடுபவர்களாக இருப்பர்
* அதிகம் துாங்குவோர், சோகத்தில் இருப்பர்
* வேகமாக, அதே நேரம் குறைவாக பேசுவோர், அதிகமாக ரகசியங்களை தன்னுள் வைத்திருப்பர்
* அழுகையை அடக்குவோர், மனதால் பலவீனமானவர்
* முரட்டுத்தனமாக உண்போர், மன அழுத்தத்தில் இருப்பர்
* சின்னச் சின்ன விஷயங்களுக்கும் அழுவோர், அப்பாவிகள்; மனதால் மென்மையானவர்கள்
*சாதாரண விஷயங்களுக்கும் கோபப்படுவோர், அன்புக்காக ஏங்குவர்.
நீங்கள், மற்றவர்களுடன் பேசும்போது, உங்கள் கருத்தை அவர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமா... இப்படி சொல்லுங்கள்:
* மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டி பேசாதீர்; அது, உங்களை பலவீனமானவராக காட்டும்
* மற்றவரின் கண்களை பார்த்து பேசவும்; அது, உங்களை நேர்மையானவராக காட்டும்
* மிக தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்தி பேசாதீர்
* நீங்கள் பேசுவதை, மற்றவர் கேட்க வேண்டுமானால், அவர் முகத்தை பார்த்து பேசவும்
* நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும்; கூன் போட்டு அமர்ந்தால், உங்களை சோம்பேறி என நினைக்க கூடும்
* பேசும்போது, முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிபடுத்துவதையோ தவிர்க்கவும். அது, உங்களை, நம்பிக்கையற்றவராக காட்டும்
* நகத்தையோ, பென்சில் - பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை பயந்தவராக காட்டக்கூடும்
* நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும்
* உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளை பயன்படுத்தவும். சைகைகள், நீங்கள் சொல்வதை மேலும், அவர்கள் மனதில் ஆழ பதிய வைக்கும்.
தாழ்வு மனப்பான்மையை போக்க, வேண்டுமா:
* நீங்கள் அழகு என்பதை, முதலில் நம்புகள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நம்புங்கள்
* உங்களை முதலில் ரசிக்க பழகுங்கள். அது, உங்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்
* ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் சரளமாக பேச முடியவில்லையே என்று கவலை கொள்ளாதீர். இங்கு, பலருக்கு அவரவர் தாய்மொழியை சரியாக பேசத் தெரியாதென்று, துணிச்சலுடன் கூறுங்கள்
* 'உங்களால் முடியாது, உங்களுக்கு எதுவும் தெரியவில்லை...' என்று யாரேனும் சொன்னாலும், கவலை வேண்டாம். அதை விரைவில் கற்று முடித்துக் காட்ட, வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்
* வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர். நிறைவாய் இருக்கும் வாழ்க்கை, இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை
* உங்களுக்கு எதுவும் தெரியாது; எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று, ஒருபோதும் நினைக்காதீர்
* கேள்வி கேட்பதற்கும், உங்களை முன் நிறுத்துவதற்கும், மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர். உலகில், சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறைய பேர், மொழிப் புலமை இல்லாமல், தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து, புரிய வைத்தவர்கள் தான்
* அழும்போது, தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ, இங்கு யாரும் வரப்போவதில்லை. கண்ணீரில் துக்கத்தை கரைத்து துார எறிந்து விட்டு, முன் செல்லுங்கள்
* உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும், இழப்பு உங்களுக்கு இல்லை; நிராகரித்தவருக்கே என்று மனதை தேற்றி, உங்கள் போக்கில் செல்லுங்கள். பிறகு, அவர்களே, உங்கள் அன்பை புரிந்து கொள்வர்.
- என்று கூறி முடித்தார்.
மனதில் பதிய வைத்துக் கொண்டேன்!'
குடிநீர் லாரியை எதிர்பார்த்து, இரவு துாக்கம் போய், பல நாட்களாகி விட்டது. அன்றும் வழக்கம்போல், குடிநீர் லாரியின் வருகைக்காக காத்திருந்தபோது, குப்பண்ணா வீட்டிலிருந்து எடுத்து வந்த, சுய முன்னேற்ற புத்தகம் ஒன்றை படிக்க ஆரம்பித்தேன்.
அதில், ஒரு அத்தியாயத்தில், வாழ்க்கையில் பயமே இருக்கக் கூடாது; பயம் இருந்தால் முன்னேற்றம் தடைபட்டுவிடும் என்று கூறி, மனித மனங்களில் எதற்கெல்லாம் பயம் தோன்றும், அதை ஆங்கிலத்தில் எப்படி கூறுவர் என்று விரிவாக கூறப்பட்டிருந்தது.
அதை படித்தபோது, இப்படியெல்லாம் கூட பயம் வருமா என்று ஆச்சரியப்பட்டேன்.
அதில், சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்:
* வேலை செய்யும் இடத்தில், 'வேலையை நல்லபடியா முடிக்கணுமே... பேச வேண்டி வந்தால் பேசணுமே... நாம் நினைக்கிறா மாதிரி போகாம தோல்வி அடைந்து விடுமோ...' என, பலருக்கு பயம் இருக்கும். இந்த பயத்தை, 'எர்கோ போபியா' என, அழைப்பர்
* 'நம்மை அறியாமல் துாங்கி விடுவோமோ... நம்மால் துாக்கத்தை கட்டுப்படுத்த இயலாமல் போய் விடுமோ... இதனால், கெட்ட பெயர் கிடைத்து விடுமோ...' என்றெல்லாம் பயப்படுவர். இந்த பயத்தை, 'சோம்னி போபியா' அல்லது 'ஹைபோ போபியா' என்பர்
* 'நம் தலையில் உள்ள முடி திடீரென கொட்டி விடுமோ...' என்றும், அதேபோல், சில இடங்களில் திடீரென முடி முளைக்கும்போது, 'இதனால் இருக்குமோ, அதனால் இருக்குமோ...' என பயப்படுவர். இந்த பயத்தை, 'சீட்டோ போபியா' என்பர்
* வீடு சார்ந்து பலவிதமான பயங்கள் இருக்கும். 'சிலிண்டர் வெடித்து விடுமோ, 'பிரிஜ்' செயல்படாமல் போய் விடுமோ, வாஷிங் மிஷினை கையால் தொட்டால், 'ஷாக்' அடிக்குமோ...' போன்ற, பல பயங்களை கொண்டிருப்பர். இந்த பயத்தை, 'ஓல்கோ போபியா' என்பர்
* சிலர், எதற்கெடுத்தாலும், பயப்படுவர். இவர்களுக்கு, துாக்கத்தில் கூட, விழுவது போலவும், மற்றவர்கள் தன்னை இம்சை செய்வது போலவும் கனவு காண்பர். இதனால், துாக்கி போடும். வேர்த்து விறு விறுத்து எழுவர். இந்த பயத்தை, 'பான் போபியா' என்பர்
* குளிக்க, துணி துவைக்க, சுத்தம் செய்தல் போன்ற எந்த செயல் செய்வதிலும், சிலருக்கு பயம் இருக்கும். இதனால், எதை பற்றியும் எதிர்மறையாக சிந்தித்து, பயத்தில் தடுமாறுவர். இந்த பயத்தை, 'அப்லோட்டே போபியா' என்பர்.
- மேலே படிச்ச விஷயங்கள் போன்று, உங்களுக்கு, எதற்காவது பயம் இருக்கா... பயம் என்பது, சுவரில் ஒட்டிய ஒட்டடை மாதிரி. துடைப்பத்தால், அவற்றை எடுப்பது போல், துணிவாக செயல்பட்டு, அதை விரட்டி, பயமின்றி வாழ பழகுங்கள்.