PUBLISHED ON : ஜூலை 21, 2019
முதன் முதலாக, சினிமாவில், எம்.ஆர். ராதாவுடன் நடிக்க வேண்டிய காட்சியை படமாக்கும்போது, சின்ன பிரச்னை ஏற்பட, நாகேஷிடம், 'என்ன பிரச்னை...' என்று விசாரித்தார், எம்.ஆர். ராதா.
பொறுமையாக நான் சொன்னதை கேட்ட, ராதா, 'மத்தவன் எல்லாம் நடிகன்!
நீ கலைஞன்!' என்றவர், இயக்குனரை பார்த்து, 'இவனுக்கும் தனியா கேமரா வெச்சே, காட்சி எடுங்க...' என்றார்.
'சரிங்கண்ணே... சரிங்கண்ணே...' என்று எல்லாரும் தலையை ஆட்டியவுடன், எனக்குள், ஆச்சரியமாக இருந்தது.
ஒருநாள், படத்தின் தயாரிப்பாளரிடம், 'சார்... சம்பளம், 500 ரூபாய் பேசினீங்க... எனக்கு தர வேண்டியதை கொடுத்தீங்கன்னா...' என்று இழுத்தேன்.
காசாளரை கூப்பிட்டு, 'இவருக்கு, 50 ரூபாய் கொடுத்திடுங்க...' என்றார்.
'என்ன, 50 ரூபாயா... 500 ரூபாய் தருவதாக தானே பேச்சு?'
'ஆமாம்... மொத்த படத்துக்கும் சேர்த்து தானே, 500 ரூபாய். படம் முடிகிறபோது, எல்லாம் செட்டில் பண்ணிடுவோம்...'
அதிர்ந்து போனேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், படம் முடிந்த பின்னரும், படத்தின் தயாரிப்பாளர்கள் பேசியபடி, பணம் தரவில்லை, இனிமேல், பொறுமையாக இருந்து பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒருநாள், அந்த கம்பெனிக்கு போய் பணம் கேட்டேன்.
ஏதேதோ சமாதானம் கூறினரே தவிர, எனக்கு பணத்தை கொடுக்கவில்லை. வந்ததே கோபம், கன்னாபின்னாவென்று சத்தம் போட்டு, கண்ணில்பட்ட, 'விக்' மற்றும் அழைப்பு மணியை எடுத்து, நடையை கட்டினேன்.
அடுத்த நாள் முதல், நாடகத்தில் அந்த, 'விக்'கை அணிந்து, நடிக்க ஆரம்பித்தேன். அதேபோல், தொலைபேசி ஒலிக்க வேண்டிய காட்சிகளில், நான் எடுத்து வந்த அழைப்பு மணி, 'டிரிங்... டிரிங்...' என்று ஒலிக்க ஆரம்பித்தது.
தாமரைக்குளம் படத்தில், எனக்கும், கருணாநிதி எழுதிய, உதயசூரியன் நாடகத்தில் நடித்து வந்த, ராஜகோபால் என்ற நண்பருக்கும், 'சொக்கு - மக்கு' என்று, ஒரு காமெடி ஜோடி கதாபாத்திரம்; படம் வெளியானது.
படத்தின் போஸ்டர்களில், எங்கள் இருவரின் புகைப் படங்களையும் கலரில் போட்டிருந்தனர். சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை, அருகே போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில், தெருவில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர், சில விநாடிகள் நின்று, சுவரொட்டியை பார்த்தனர். சட்டென்று அவர்களில் ஒருவன் மட்டும், போஸ்டரை நோக்கி உதைப்பது போல, பாவனை செய்து, 'இவனுக்கெல்லாம் எதுக்குடா சினிமா?' என்று, சற்று உரக்கவே, 'கமென்ட்' அடித்தான்; எனக்கு அதிர்ச்சி.
படமும் தோல்வியடைந்தது. 'ஆனந்த விகடன்' இதழில், அந்த படத்தின் விமர்சனம் வெளியானது. 'என்னை பற்றி ஏதாவது பாராட்டியிருப்பரோ...' என்று, ஆர்வத்துடன் படித்தேன்.
அதில், 'சொக்கு - மக்கு என்று இரண்டு கேரக்டர்களாம். இவர்கள் இரண்டு பேரையும், யார் செட்டுக்குள் விட்டனர்...' என, எழுதியிருந்தனர்.
பிற்காலத்தில், என் நடிப்பை பாராட்டி, 'விகடன்' இதழில், பல சமயங்களில் எழுதப்பட்டது என்றாலும், முதல் விமர்சனத்தை, என்னால் மறக்க முடியாது.
சினிமா உலகில் பலருக்கு, எம்.ஆர். ராதா என்றாலே, சிம்ம சொப்பனம் தான். வெளியே முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர் போல நடந்து கொண்டாலும், வெள்ளை மனசு; தைரியசாலி.
எம்.ஆர். ராதாவுடன் நடித்த போது ஏற்பட்ட இன்னொரு அனுபவமும் சுவாரசியமானது. சரசா பி.ஏ., படத்துக்கு, வேம்பு என்பவர் தான், இயக்குனர்.
ஒரு குறிப்பிட்ட காட்சியில், எம்.ஆர். ராதாவும், அவர் மகன், எம்.ஆர்.ஆர். வாசுவும், வீட்டுக்குள் நுழைய வேண்டும். அவர்களின் வருகையை எதிர்பார்க்காத நான், அவர்களை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டும். காட்சியை விளக்கி, என்னை பார்த்து, 'சும்மா, 'ஷாக்' அடிச்சா மாதிரி நடிக்கணும்...' என்று சொல்லி விட்டார், இயக்குனர்.
'என்னடா இது... 'ஷாக்' அடித்தாற் போல எப்படி நடிப்பது...' என்று, நானும் ஒரு நிமிடம் குழம்பினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை. அந்த செட்டில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில், மரப்பெட்டி மீது, ஒரு கூஜாவை பார்த்தேன்.
காட்சியை படம் பிடிக்க தயாரானவுடன், சட்டென்று சைடு வாங்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த கூஜாவை எடுத்து, கையில் வைத்துக் கொண்டேன். கேமரா சுழல துவங்கியது.
அதட்டலான குரலில் ராதா, 'யாரு வீட்ல?' என்று கேட்டபடி, வீட்டுக்குள் நுழைய, நான் தடாலென்று கையிலிருந்த கூஜாவை நழுவ விட்டு, என் அதிர்ச்சியை காட்டினேன்.
'கட்... கட்...' என்றார், இயக்குனர்.
என்னை பார்த்து, 'யாரை கேட்டு, கூஜாவை எடுத்து கீழே போட்ட...' என்றார்.
'இல்லை சார்... நீங்கதானே, 'ஷாக்' அடிச்சாப்போல நடிக்கணும்ன்னு சொன்னீங்க?'
'அதுக்கு என் கூஜா தான் கிடைச்சதா?' என்று கத்தினார், இயக்குனர்.
அதற்குள் ஒருவர், கூஜாவை எடுத்து வந்து, இயக்குனரிடம் நீட்டினார். அது, நசுங்கி போயிருந்தது. இயக்குனர், தினமும் குடிக்க தண்ணீர் எடுத்து வரும் கூஜா என்பது, அவர் சொன்ன பிறகு தான் தெரிந்தது.
'ரொம்ப, 'சென்டிமென்ட்'டா வெச்சிருக்கும் கூஜா. அது இல்லாமல் நான் வீட்டுக்கு போக முடியாது...' என்று இயக்குனர் கூறினார்.
உடனே ராதா, 'சென்டிமென்டா, எதை வெச்சுக்கிறதுன்னு ஒரு கணக்கு இல்லை. இன்னிக்கு கூஜா, நாளைக்கு, துடைப்பம், 'சென்டிமென்ட்டு'ன்னு சொல்வீங்களா?' என்று, ஒரு போடு போட்டதும், அமைதியானார், இயக்குனர்.
பழநி பட படப்பிடிப்பின் போது நடந்த, இன்னொரு சம்பவம்.
- தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி