எத்தனை காலம் தான் ஏமாற்றுவரோ!
சமீபத்தில், பிளாஸ்டிக் பைகளை, அரசு, தடை செய்துள்ளது. இந்நிலையில், 'வீட்டிலிருந்தே காகித பைகளை செய்து தர, ஆட்கள் வேண்டும்...' என்று, எங்கள் பகுதி முழுவதும், சுவர் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அதை பார்த்து, அக்கம் பக்கத்து பெண்கள், வேலையில் சேர்ந்தனர். செய்முறை பயிற்சியும் அளித்து, அவர்கள் செய்யும் பைகளுக்கு பணமும் கொடுத்து, வாங்கிச் சென்றனர்.
தினமும், உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவே, மேலும், பல பெண்கள் சேர்ந்து, காகித பைகள் தயாரிக்க ஆரம்பித்தனர்.
'ஒரு நாளைக்கு, ஒருவர், 100 பை தான் செய்கிறீர்கள்... எங்களுக்கு நிறைய, 'ஆர்டர்'கள் கிடைத்துள்ளன. பெரிய பெரிய கடைகளில், புது புது மாடல்களில் பைகள் கேட்கின்றனர். எனவே, வேகமாகவும், புது மாடல்களிலும் பைகள் செய்ய, புது இயந்திரங்களை வாங்க போகிறோம்...' என அறிவித்தனர்.
மேலும், 'வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க, கொஞ்சம் பேர் முதல் போட்டு, புது இயந்திரங்களை வாங்கிக் கொள்ளுங்கள். தயாரிப்பு முறைகளை சொல்லித் தருகிறோம்...' என்று, பேப்பர் பை தயாரிப்பு நிறுவனமே, புதிய யோசனையையும் கூறியது.
அதன்படி, 10 பெண்கள் ஒன்று சேர்ந்து, நகையை அடமானம் வைத்து, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, பேப்பர் பை உற்பத்தி நிறுவனத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.
ஒரு மாதம், நன்றாக வேலை செய்து, பணம் ஈட்டி தந்த இயந்திரங்கள் பழுதானது. அவை, மட்டமான இரண்டாம் தர இயந்திரம் என்று, பழுது பார்க்க வந்த ஆட்கள் சொல்லிதான் தெரிய வந்தது.
இயந்திரத்தை விற்றவன், இடத்தை காலி செய்து, ஓடி விட்டான். வசதி இல்லாத, ஏமாற்றப்பட்ட அந்த ஏழைப் பெண்கள், வீட்டில் உள்ளோரின் ஏச்சுக்கும், வெளியில் உள்ளோரின் கிண்டலுக்கும் ஆளானதை பார்க்க, பரிதாபமாக இருந்தது.
எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும், ஏமாற்றுவோர், பலவிதமாக ஏமாற்றியும், பாவப்பட்டோர் ஏமாந்தபடியும் தான் இருக்கின்றனர்.
— எஸ். செந்தில், சென்னை.
கணவனை கழட்டி விடாதீர்கள்!
தோழியின் செல்ல பெண், மூன்று ஆண்டாக, ஒருவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாள்.
ஆறு மாதங்களுக்கு பின், ஒருநாள் என்னை வீட்டிற்கு அழைத்தாள், தோழி. சென்றபோது மகளும் இருந்தாள்.
மண வாழ்க்கையை பற்றி மகளிடம் விசாரித்தபோது, அவள், 'கணவனை பிடிக்கவில்லை, குழந்தையை தர தகுதியில்லாதவன், பணத்திற்காகவே என்னை வளைத்துள்ளான்...' என்று அடுக்கிக் கொண்டே போனாள்.
'மகளுக்கு கொஞ்சம் அறிவுரை கூறேன்...' என்று கேட்டாள், தோழி.
நானும், தோழி மகளிடம், 'இதோ பார், திருமணம் என்பது, கடை சரக்கு அல்ல, சரியில்லை என திருப்பி கொடுக்க. ஆயிரம் காலத்து பயிரான வாழ்க்கையை, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என, துாக்கியெறிய முடியாது. பெற்றோர் பட்ட திருமண செலவு கடன் அடைபடுமுன், நீ இப்படி பேசினால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்...
'மூன்றாண்டுகள் பழகியவனை பற்றி, இப்போது இப்படி பேசுவது சரியல்ல... தாம்பத்ய உறவை காரணம் காட்டி, கணவனை கழட்டி விடும் போக்கு, பெண்களிடையே அதிகரித்து வருகிறது. அதையே நீயும் செய்ய முற்படுகிறாய். உங்களுள் யாரிடம் குறையுள்ளது என்பது, மருத்துவ சோதனையில் தெரியும்.
'நீ நினைப்பது போல், அவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. அதோடு, தற்போதுள்ள அதிநவீன மருத்துவ சிகிச்சையில், குறைபாடுகளை சரி செய்து, குழந்தையும் பெற்றெடுக்கலாம். எனக்கு தெரிந்த மகப்பேறு நல சிறப்பு மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுங்கள்... எல்லாம் நல்லதாகவே நடக்கும்...' என்று அறிவுரை கூறினேன்.
அவளும் மருத்துவரிடம் செல்ல சம்மதித்தாள்.
இது நடந்து சில மாதங்களுக்கு பின், ஒருநாள் தொலைபேசியில் அழைத்த தோழியின் மகள், 'ஆன்ட்டி... நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்... உங்களை, நாங்கள் மறக்க மாட்டோம்...' என்றாள்.
மகிழ்ச்சி பொங்கும், அவள் குரலை கேட்டதும், மனதுக்கு இதமாக இருந்தது.
- லலிதா கிருஷ்ணமூர்த்தி, சென்னை.
சபாஷ் இளைஞர்களே!
பிரபல நகை கடை ஒன்றில், பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதியை, பிரபல, 'இன்டர்நேஷனல் ரெடிமேட் ஷோரூம்' ஒன்றிற்கு, வாடகைக்கு கொடுத்து இருந்தனர்.
அதன் திறப்பு விழாவிற்கு, கேரளாவின் பாரம்பரிய செண்டை மேளத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆறு இளைஞர்கள், 'பேன்ட், ஷர்ட்' சகிதம் வந்திருந்தனர்.
சிறிது நேரத்தில், மேல் சட்டை, பனியன் களைந்து, 'பேன்ட்'டை கால் முட்டிக்கு மேல் மடித்து, பின் குத்தி, அதற்கு மேல், பெரிய, 'பார்டர்' போட்ட வேட்டியை கட்டிக் கொண்டனர். நெற்றி, உடல் முழுக்க, விபூதியை பட்டையாக பூசிக் கொண்டனர். தொடர்ந்து, நான்கு மணி நேரத்திற்கு செண்டை மேளம் இசைத்தனர்.
திறப்பு விழா, நல்லவிதமாக முடிந்தது.
செண்டை மேள இளைஞர்கள், பழையபடி, 'பேன்ட், ஷர்ட்' அணிந்து, புறப்பட தயாராகினர். அவர்களிடம், 'அனைவரும், கேரளாவை சேர்ந்தவர்களா... முறையாக இந்த இசையை பயின்று, தொழில் செய்கிறீர்களா...' என, பேச்சு கொடுத்தேன்.
'எங்களில், மூன்று பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். மற்ற மூவரும், தமிழகத்தை சேர்ந்தவர்கள். மேலும், நாங்கள், தொழில் ரீதியான கலைஞர்களே இல்லை. 'கான்ட்ராக்டருடன்' தொடர்பில் இருப்பதால், அவர்களின் கமிஷன் போக, மீதி பணத்தை, எங்களுக்கு பகிர்ந்து அளிப்பார்.
'அனைவரும், விடுதியில் தங்கி படிக்கும், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள். நேரம் கிடைக்கும்போது, செண்டை மேளம் இசைக்கிறோம்...' என்றனர்.
பெற்றோர் உழைப்பில் சம்பாதித்த பணத்தில், விலை உயர்ந்த பைக், மொபைல் போன், ஆடைகள் என, வாங்கி, 'பேஷன்' என்கிற பெயரில், தலைமுடியை கோணல், மாணலாக கத்தரித்து, சுருள் சுருளாக புகை விட்டு சுற்றி திரிகின்றனர் பல, இளைஞர்கள். இவர்கள் மத்தியில், படித்துக்கொண்டே சுயதொழில் மூலம், சம்பாதித்து வாழுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 'சபாஷ் இளைஞர்கள்...' என, அவர்களை பாராட்டினேன்.
— ஆண்ட்ரூ, திருவள்ளூர்.

