தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே

கணினி தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டுள்ள நண்பர் ஒருவர், 'பீச் மீட்டிங்'கில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் கூறிய சம்பவம் இது:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, புதுப்புது, 'மொபைல் ஆப்'களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. அதில் ஒன்று, 'காஸ்டில்' என்ற 'ஆப்!'

அதன் வேலை, புதுப்புது சவால்களை கண்டுபிடித்து, தன் வாடிக்கையாளர்களை செயல்படுத்த வைப்பது தான்.

அந்த சவாலை செய்து, புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும். அதில் சிறந்தவைக்கு பரிசு தருவர். பரிசு பெறுபவர், ஒரு பங்கு தொகையை, சமூக நல சேவைக்கு வழங்க வேண்டும்.

இந்த வகையில், சமீபத்திய சவால் என்ன தெரியுமா?

பசுவுக்கு முத்தம் கொடுத்து, அதை புகைப்படமாய் எடுத்து அனுப்புவது தான்.

'அட கஷ்ட காலமே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.

'உமக்கு தான் ஓய்... அது கஷ்டம். ஆனால், வெளிநாட்டை சேர்ந்தோர் உடனே செய்யத் துடிக்கின்றனர்...' என்று, தொடர்ந்தார், நண்பர்:

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பக்கெட் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்... மெதுவாக ஓடும் காரிலிருந்து இறங்கி, 'டான்ஸ்' ஆடுவது என்று, பல சவால்கள் நடத்தப்பட்டன. உலகம் முழுவதும், சிறிது காலம் பரபரப்பாக இருந்தது. அது போன்றது தான், இதுவும்...

ஆனால், இந்த பசு முத்த சவாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஆஸ்திரிய நாடு. 'ஆபத்தான விளையாட்டான இதை, நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும்...' என, ஆலோசனை கூறியுள்ளது.

இதற்கு ஒரு பின்னணி உண்டு. இந்த சவால், பிரபலமாவதற்கு முன், ஆஸ்திரியா நாட்டில் ஒரு பெண்ணை, பசு மாடு ஒன்று, மிதித்து கொன்று விட்டது. இது வழக்காக மாறி, சமீபத்தில் தீர்ப்பும் கூறப்பட்டது.

அதாவது, 'பசு மாட்டின் சொந்தக்காரர், அந்த பெண்ணின் கணவருக்கு, 4.90 லட்சம் யூரோ, இந்திய மதிப்பில், 4 கோடி ரூபாய், நஷ்டஈடு வழங்க வேண்டும்...' என தீர்ப்பு வழங்கியது.

'இது, ஏற்க முடியாத தீர்ப்பு...' என, பசுவின் சொந்தக்காரர், மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளார்.

இவருக்கு, ஆஸ்திரிய விவசாயிகள் கழகத்தின் ஆதரவும் உள்ளது.

இனி, தீர்ப்பு எப்படி வரப்போகிறதோ என எதிர்பார்த்துள்ளனர்.

இப்போது புரிகிறதா... ஆஸ்திரிய அரசு, இதை ஏன், ஆபத்தான தொல்லை சவால் என வர்ணித்துள்ளது... என்று கூறி முடித்தார், நண்பர்.



காவல் துறையில், டி.ஜி.பி., ஆக இருந்து, ஓய்வு பெற்றவர், பொன்.பரமகுரு. 'ஒரு போலீஸ் அதிகாரி, எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி வாழ்ந்து காட்டியவர்...' என, பலர் பாராட்டப்பட்டதுண்டு!

இவர் எழுதிய, 'காவல் நினைவுகள்' புத்தகத்திலிருந்து, ஒரு சுவையான தகவல்:

காஞ்சிபுரத்தை சேர்ந்த கோவில் யானை, ஜானகி. ஒரு சமயம், சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த, அய்யப்பன் வழிபாட்டிற்காக அழைக்கப்பட்டிருந்தது. யானையுடன், பாகன் வரவில்லை; மாறாக, உதவியாளன் தான் வந்திருந்தான். யானைக்கு, அவன் சரிவர உணவு அளிக்கவில்லை.

இதனால், கடும் கோபம் அடைந்த யானை, சைதாப்பேட்டையிலிருந்து, அண்ணாசாலை வழியாக பிளிறியபடி ஓடியது; இறுதியாக, எழும்பூர், 'கமாண்டர் இன் சீப்' சாலையில் ஆட்டம் போட்டபடி நின்று கொண்டிருந்தது.

சாலையின் இருபுறமும், வேடிக்கை பார்க்க, பெரும் கூட்டம் கூடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், எனக்கு போன் செய்து, யானையை சுட உத்தரவிட்டார், அப்போதைய, ஐ.ஜி.,

அன்று, மெரினா கடற்கரை குடியிருப்பில் நடந்த கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். உடனே, 'ஒயர்லெஸ்' மூலம், ஐ.ஜி.,க்கு, 'சார்... யானையை சுட தேவையில்லை; நான் நேரில் சென்று, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்...' என்று கூறி, அந்த இடத்திற்கு புறப்பட்டேன்.

யானை இருக்கும் இடத்திற்கு சென்றதும், அங்கிருந்த ஒரு காவலரை கூப்பிட்டு, அருகில் இருந்த ஓட்டலிலிருந்து சாதம் வாங்கி வர கூறினேன்.

அதேசமயம், அருகில் இருந்த மற்றொரு காவலரிடம், அப்பகுதியின் தென்னை மரத்திலிருந்து, தென்னை மட்டைகளை வெட்டி எடுத்து வரச் செய்தேன்.

கூடுதலாக, புரசைவாக்கம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, கரும்பு கட்டு ஒன்றை தேடிப் பிடித்து வாங்கி வரும்படியும் கட்டளையிட்டேன். மேலும், மிருககாட்சி சாலை, 'சூப்பிரண்டெண்'டுக்கு போன் செய்து, அங்குள்ள கோரைப் புல்லை வெட்டி, உடனே அனுப்புமாறு வேண்டினேன்.

இதனிடையே, யானையை நெருங்கிய என்னை, 'வேண்டாம் சார்... யானை கோபத்தில் உள்ளது. ஏதாவது ஆபத்து நேரிடலாம்...' என எச்சரித்தனர், கூட்டத்தினர்.

'பரவாயில்லை... யானைக்கு உதவ தானே போகிறேன். யானை தாக்கினால், கவிஞர் பாரதியாருக்கு ஏற்பட்ட முடிவு, எனக்கு ஏற்பட்டாலும் கவலையில்லை...' எனக் கூறி, பயமின்றி யானை அருகே சென்றேன்.

நான் நெருங்குவதை பார்த்ததும், சாலையை விட்டு விலகி, ஒரு புளிய மரத்தடியில் போய் நின்றது, யானை. ஓட்டலிலிருந்து வாங்கி வந்த சாதத்தை, உருண்டையாக எடுத்து, 'கணேசா... இந்தா, பசியாறு...' எனக் கூறி, அதை யானைக்கு அளித்தேன்.

யானையும், தன் துதிக்கையால் அதை வாங்கி சாப்பிட்டது. அடுத்து, மற்றொரு காவலர் வெட்டி வந்த, தென்னங் கீற்றுகளையும் பிய்த்து சாப்பிட்டது.

இதனிடையே கரும்பும் வந்து சேர்ந்தது. அதையும் யானைக்கு போட்டனர். கூடுதலாக கோரைப் புல்லும் வர, அதுவும் யானைக்கு போடப்பட, அனைத்தையும் கபளீகரம் செய்தது; பசி அடங்கி, அமைதியானது, யானை.

இதனிடையே, காஞ்சிபுரத்திலிருந்து, பாகனை வரவழைத்து, அவனிடம், யானை ஒப்படைக்கப்பட்டது.

'பரமகுருவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரியவலம் நல்லுார். கரி என்றால், யானை. யானை வலம் வந்த ஊரை சேர்ந்தவர் என்பதால், யானையை மடக்கி பிடித்து விட்டார்...' என, யானையுடன், பரமகுரு இருந்த படத்தை போட்டு, பாராட்டியது, ஒரு வார இதழ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us