தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த வாரம், சின்ன சின்ன தகவல்கள் மட்டுமே...

செல்வந்தர் ஒருவர் கொடுத்த விருந்துக்கு சென்றிருந்தார், முல்லா. சாதாரண உடையில் போனதால், முல்லாவை, விருந்து நடக்கும் மண்டபத்திற்குள் விடவில்லை, காவலர்கள்.

வீடு திரும்பும் வழியில், துணி சலவை செய்யும் கடை இருந்தது. அதிலிருந்து, ஒரு, 'கோட் - சூட்'டை, கடன் வாங்கி அணிந்து, மீண்டும், விருந்து மண்டபத்திற்கு வந்தார், முல்லா.

முல்லாவின் எடுப்பான தோற்றத்தை பார்த்து, அவரை, ராஜ மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றனர், காவலர்கள். உயர்ந்த நாற்காலியில் அமர செய்து, அவர் சாப்பிடுவதற்காக, பெரிய தட்டில், வகை வகையான உணவுகளை எடுத்து வந்து கொடுத்தனர்.

எல்லா வகை உணவுகளையும் எடுத்து, தான் அணிந்திருந்த, 'கோட்'டுக்கு, ஊட்டி விட துவங்கினார், முல்லா. அவரது இந்த செயல், அங்கிருந்த அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

'என்ன பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்கள்...' என்றனர்.

அப்போது, 'நீங்கள், யாரை மதித்தீர்களோ, அவர் விருந்து சாப்பிடுவது தானே நியாயம்... அதனால் தான், என் ஆடைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், முல்லா.

ஒரு வாடகை வண்டியில், மூன்று 'குடி'காரர்கள் ஏறினர். அவர்களுக்கு போதை தலைக்கேறி, சுயநினைவு இல்லாமல் இருந்தனர். இதை உணர்ந்த வண்டி ஓட்டுனர், வண்டியை ஓட்டாமல், இயந்திரத்தை முடுக்கி விட்டான்.

வண்டியை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல், சிறிது நேரத்திற்கு பின் இயந்திரத்தை நிறுத்தி, 'சார்... உங்க இடம் வந்திருச்சு; இறங்குங்க...' என்று, ஒரு பெரிய தொகையை சொன்னான்.

இரண்டு பேர் பணத்தை கொடுத்து, நன்றி சொல்லி இறங்கினர்.

மூன்றாவது குடிகாரனோ, ஓட்டுனர் கன்னத்தில் பளாரென அறைந்து, 'முட்டாளே... இனிமே, காரை இவ்வளவு வேகமா ஓட்டாதே...' என்று சொல்லி இறங்கினான்.

ஆக... குடி, அடிமுட்டாளாக்கி விடும் என்பது, இதிலிருந்து தெரிகிறதல்லவா!

ஓமந்துார் ரெட்டியார், முதல்வராக இருந்த காலம் அது. மகாகவி பாரதியார் பாடல்களின் உரிமையை, ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் வைத்திருந்தார். செட்டியாரை சந்தித்த முதல்வர், 'நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் சொல்லுங்கள், அரசாங்கத்திலிருந்து கொடுத்து விடுகிறோம். பாரதியார் பாடல்களின் உரிமையை, நீங்கள் அரசாங்கத்திற்கு கொடுத்து விட வேண்டும்...' என்றார்.

'மிக அதிக அளவில் பணம் வாங்கி இருந்தாலும் கூட, பாரதியார் பாடல்களின் உரிமையை அரசாங்கத்திற்கு மாற்றி விடுகிறேன். எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்...' என்று, உடனே கொடுத்து விட்டார், மெய்யப்பன்.

அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர், ராக்பெல்லர். அவரது நிறுவன அலுவலகத்துக்குள், அடையாள அட்டை இல்லாது யாரும் நுழைய முடியாது. எப்போதாவது தான், அந்த அலுவலகத்துக்கு செல்வார், ராக்பெல்லர். ஒரு சமயம், இரவில் அவசர வேலையாக அலுவலகம் செல்ல நேரிட்டது.

ராக்பெல்லரை வாசலிலேயே வழிமறித்து, அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார், காவலாளி.

'நான் தான் ராக்பெல்லர். எனக்கு எதற்கு அடையாள அட்டை...' என்று கேட்டார்.

'யாராயிருந்தாலும் சரி, அடையாள அட்டை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது...' என்று கூறி, அவரை உள்ளே அனுப்ப மறுத்து விட்டார், காவலாளி.

வீடு திரும்பி விட்டார், ராக்பெல்லர். வேறு ஒருவராக இருந்தால், அந்த காவலாளிக்கு மறுநாளே வேலை போயிருக்கும். ஆனால், அவரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், பதவி மற்றும் சம்பள உயர்வும் கொடுத்து கவுரவித்தார், ராக்பெல்லர்.

மறைந்த முன்னாள் பிரதமர், லால் பகதுார் சாஸ்திரி, குள்ளமானவர் என்பது, அனைவரும் அறிந்தது. நிமிர்ந்து பார்த்தபடிதான் மற்றவர்களிடம் பேசுவார்.

'இது, கஷ்டமாக இல்லையா...' என்று, சக நண்பர் ஒருவர் கேட்டார்.

'அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை. என்னோடு யார் பேசுவதாக இருந்தாலும், நெஞ்சை நிமிர்த்தி பேச முடியாது. மிகவும் பணிந்து, குனிந்து தான் பேச வேண்டும். இந்த வாய்ப்பு அரிதானது. இது, இறைவன் எனக்கு கொடுத்த வரம்...' என்றார்.

சாஸ்திரியின் புத்திசாலித்தனமான பதிலை கேட்டு வியந்தார், நண்பர்.

ஒருமுறை, இங்கிலாந்து சென்றிருந்த, இந்திய முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனும், இங்கிலாந்து பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சிலும், ஒரு விருந்தில் சாப்பிட தயாராயினர்.

ராதாகிருஷ்ணன் கையால் சாப்பிடுவதை கண்ட, சர்ச்சில், சற்று கிண்டலோடு, 'என்ன இது, கையால் சாப்பிடுகிறீர்... இது, சுகாதாரமானது இல்லையே...' என்றார்.

உடனே, ராதாகிருஷ்ணன் புன்னகைத்தபடியே, 'இல்லை... ஸ்பூனை விட, கையால் சாப்பிடுவது தான் சுகாதாரமானது; என் கையை, என்னை தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதே...' என்றார்.

மறு பேச்சு பேசவில்லை, சர்ச்சில்.

இள வயதிலேயே அரசன் ஆனவன், கரிகால் சோழன். தினமும், அரச சபைக்கு, சில சிக்கலான வழக்குகள் வருவதுண்டு. தன் அறிவுத் திறமையால், மிக சிறப்பாக அவற்றை கையாண்டான், கரிகால் சோழன்.

ஒருநாள், மிகவும் சிக்கலான வழக்கு ஒன்று வந்தது. அரசன் மீது பொறாமைப்பட்ட சில பெரியவர்களும், சபையில் இருந்தனர். 'இவ்வழக்கிற்கு தீர்ப்பு சொல்வது கடினம்...' என்று முணுமுணுத்தனர்.

'என்னை விட திறமையான பெரியவர், நாளை தீர்ப்பு சொல்வார்...' என்று, தீர்ப்பை மறுநாள் ஒத்தி வைத்தார், கரிகால் சோழன்.

மறுநாள், சபை கூடியது. பெரியவர் ஒருவர், அரசவைக்கு வந்து, சரியான தீர்ப்பு சொன்னார்.

எல்லாரும் மெச்சியபோது, மாறுவேடத்தில் இருந்த சிறுவனான, கரிகாலன், தன் தாடி, மீசையை எடுத்து, முதியவர் வேடத்தை களைந்தான்.

வயதும், அனுபவமும் எல்லா சமயத்திலும் முக்கியமல்ல. அறிவும், சமயோசித புத்தியும் மிக முக்கியம் என்பதை, அங்கிருந்தவர்களுக்கு தெளிவாக உணர்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us