sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 02, 2020

Google News

PUBLISHED ON : பிப் 02, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா-கே

அன்று, காரை படுவேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

'இரண்டு மாசத்திற்கு ஒருமுறை பொங்கல் வரக் கூடாதா என்று தோன்றுகிறது...' என்றார், லென்ஸ்.

'ஏன் மாமா?' என்றேன்.

'ரோட்டை பாரு, 'நோ டிராபிக்!' இரு சக்கர வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக ஓட்டுவோரைக் காணோம். ரொம்ப, 'ஸ்டைல்' ஆக, வேகமாக காரை ஓட்ட முடிகிறதே...' என்றார்.

நான், ஆமோதித்து தலையாட்டினேன்.

அலுவலகம் வந்த பிறகு, உதவி ஆசிரியர் ஒருவரிடம் விபரம் கேட்டேன்...

அவர் சொன்னார்:

பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 16 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அவர்களில் பாதி பேர், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட, தங்களது சொந்த ஊர்களுக்கு, ஒரு வாரமாகவே, படிப்படியாக பயணித்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகம், மூன்று நாட்களாக, 16 ஆயிரம் பஸ்களை இயக்கியது. அதில், ஒன்பது லட்சம் பேர் பயணித்தனர். ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்களில், 2.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும், தெற்கு ரயில்வே சார்பில், ஒவ்வொரு நாளும், சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, 60 ரயில்கள் இயக்கப்பட்டன.

அவற்றில், தலா, 2,500 பேர் வீதம், மூன்று நாட்களில், 4.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இதன்படி, மூன்று நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 16 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

இந்தாண்டு படுக்கை, கழிப்பறை, 'ஏசி' வசதிகள் உடைய, புதிய அரசு பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டதால், ஒன்பது லட்சம் பேர், அரசு பஸ் பயணத்தை தேர்ந்தெடுத்தனர்.

இருப்பினும், சென்னையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், தொலைதுார ரயில்களிலும், கூட்டம் நிரம்பி வழிந்தது என்றார்.

'இரண்டு மாசத்திற்கு ஒருமுறை பொங்கல் வரக் கூடாதோ...' என எண்ணிக் கொண்டேன்.



ஆர்.கே.ராமலிங்கம் என்ற வாசகர், அயன் குறிஞ்சிப்பாடி, என்ற ஊரை சேர்ந்தவர். 2013ல் நடந்த குற்றால சீசன் டூரில் கலந்து கொண்டவர்.

வாரா வாரம், வாரமலர் இதழை படித்து விட்டு, நான்கு பக்க விமர்சன கடிதம் எழுதுவார்.

ஜன., 5 இதழில், நான் டீ வாங்கி, சைக்கிளில் கொண்டு வரும் படம் இடம்பெற்று இருந்தது. அதை விமர்சித்து, அவர் எழுதிய கடிதம் இதோ...

படத்தில், சைக்கிளை பிடித்துக் கொண்டு, 'போஸ்' கொடுக்கிறீர்... உம்ம தில்லாலங்கடி வேலையை பற்றி தெரியாத வாசகர்கள் வேண்டுமானால், நீர், டீ வாங்க சைக்கிளில் கிளம்பி விட்டீர்கள் என, உண்மையிலேயே நம்பலாம். ஆனால், நாங்களெல்லாம் ஏமாற மாட்டோம். மணியாரே... ரெண்டு ஓட்ட பிளாஸ்கில் டீ வாங்க, ஒரு துணி பை, பழசான சைக்கிள் வண்டி. ம்ம்...

என்னா தில்லுமுல்லு, 'பார்ட்டி' தெரியுமா, நீங்கள்.

நான்காயிரம் ரூபாய், ஷூ, நான்காயிரம் ரூபாய், பேன்ட் - சட்டை போட்டுக் கொண்டு தான், ஆபீஸ் பையன், டீ வாங்க போவானா மணியாரே... உமக்கே இது ஓவராக தெரியவில்லை...

உம்மை பார்த்தாலே, டீக்கடைக்காரன் கூட டீ தர மாட்டானே...

நீங்கள், அனுமதி கொடுங்கள், நான் வந்து உங்களை பார்க்கிறேன். அப்போது, இந்த சைக்கிளில் என்னை அமர வைத்து, நீர், டீ வாங்கும் அந்த கடைக்கு அழைத்து போய், டீ வாங்கிக் கொடுத்தால், நான், நம்பி விடுகிறேன்.

பின்னால், ஒரு டீ கேன் உள்ளதே... சரிதான், டீ கொடுக்க வந்த, 'பார்ட்டி'யிடம் சைக்கிளை வாங்கி, சும்மா, 'போஸ்' கொடுத்துள்ளீர்; போதுமா...

ஏன் மணியாரே... இத்தனை ஆண்டுகளாக உம்மை பாராட்டியும், திட்டியும் கடிதம் எழுதுகிறேனே... என்னைப் பற்றி இரண்டு வார்த்தை, பா.கே.ப., பகுதியில் எழுதினால், குறைந்தா விடுவீர்... ஒன்றுக்கும் உதவாத, லென்ஸ் மாமாவை பற்றி எழுதுகிறீர்...

இந்த வார, கேள்வி - பதில் பகுதி, அருமை மணியாரே... அதுவும், நம்ம லென்ஸ் மாமா பற்றிய கேள்விக்கு, உங்களின் பதில், ரசிக்கும்படி இருந்தது. அவர் என் நண்பர், அவரை பற்றி நிர்வாகம் தான் கவலை கொள்ள வேண்டும்...என்ற பதில் அருமை. நான் என்ன, எம்.ஜி.ஆரா என்று கேட்டீர்களே... நீங்கள் சொன்னால், மாமா, எப்படி கேட்பார்...

— என்றும் மறவாத குற்றால நினைவுகளுடன், ஆர்.கே.ராமலிங்கம்.

அந்த குற்றால டூரில், என்னுடன் கலந்துகொண்ட நண்பர் ஒருவரை, அந்துமணி என, அவர் நினைத்துக் கொண்டு, இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

சரி... போகட்டும்!






      Dinamalar
      Follow us