PUBLISHED ON : மார் 15, 2020

கே
அந்துமணி வாசகி ஒருவரிடமிருந்து, பல மாதங்களுக்குப் பின், 'வாட்ஸ் - ஆப்'பில், ஒரு குறுஞ்செய்தி... 'நீங்கள் சொல்லிக் கொடுத்த, 'மோர் களி'யை, இன்று தான் முயற்சித்தேன்... சாப்பிட்ட கணவரும், குழந்தைகளுக்கும் ஏக குஷி...' என்று இருந்தது.
அமெரிக்காவிலிருந்து இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் பெயர், சத்யா; திண்டுக்கல்லை சேர்ந்தவர். இவரும், இவரது மூத்த சகோதரி சித்ராவும், வாரமலர் இதழின் நீண்ட கால வாசகியர்; இரு சகோதரிகளும் அமெரிக்காவில் தான் உள்ளனர்.
நம்மவர்கள் அமெரிக்காவில் என்ன வேலை செய்வர் என்பது, உங்களுக்குத் தான் தெரியுமே!
குறுஞ்செய்தி வந்த பிறகு, அவருடன் போனில் பேசினேன். 'மோர் களியை எப்படி செய்தாய்... 'ரெசிப்பி'யை சொல்...' என்றேன்.
அதற்கு அவர், 'வெரி சிம்பிள்... நன்றாக புளித்த மோரை எடுத்துக் கொண்டேன். அதில் தேவையான அரிசி மாவையும், பொடி உப்பையும் கலந்து கொண்டேன்.
'கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மோர் கலவையை அதில் ஊற்றி, அல்வா பதத்திற்கு கிளறி, நன்கு வெந்ததும், ஒரு தட்டில் போட்டு சமப்படுத்தி, அல்வா துண்டுகள் போல வெட்டி எடுத்து, பரிமாறினேன். அதை சாப்பிட்ட குழந்தைகளும், கணவரும், 'ஆஹா... ஓஹோ...' என, பாராட்டினர்...' என்றார்.
'ஓ... வெரி குட்...' என்று சொல்லிய நான்... 'ஒரு விஷயத்தை மறந்து விட்டாயே, அம்மா...' என்றேன்.
மிகுந்த பதட்டத்துடன், 'அது என்ன...' எனக் கேட்டார்.
குழந்தைச் சிரிப்புடன் நான், 'தாளிக்கும்போது, போதுமான பெருங்காயத் துாள் சேர்க்க வேண்டுமே அம்மா... அப்போது தான் சுவை இன்னும் அதிகரிக்கும்...' என்றேன்.
'அய்யையோ... மறந்து விட்டேனே நான்...' எனக் கூறி, வருத்தப்பட்டார்.
என்ன... வாசக, வாசகியரே... இப்போதே நாக்கு ஊறுகிறதா... வீட்டில் புளித்த மோர் இருந்தால், இன்று மாலையே செய்து பாருங்களேன்!
ப
அமெரிக்க ஜனாதிபதியான போது, தாடி வளர்த்திருந்தார், ஆபிரகாம் லிங்கன். ஆனால், அதற்கு முன், அவர் தாடியை மழித்து விடுவது தான் வழக்கம். அவர் ஏன் தாடி வளர்க்கத் தொடங்கினார் தெரியுமா?
அமெரிக்காவில், 'வெஸ்ட் பீல்டு' என்ற இடத்தில் வசித்து வந்த,
15 வயதுள்ள ஏழை சிறுமி, ஒருநாள், தன் தந்தை வாங்கிக் கொடுத்த லிங்கனுடைய படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். படத்தில், லிங்கனின் கன்னங்கள் ஒட்டி, முகம் ஒடுக்கமாக இருந்ததை கவனித்தாள்.
'இவர், கொஞ்சம் தாடி வளர்த்தால், ஒடுக்கம் மறைந்து, முகம் எடுப்பாக இருக்கும் அல்லவா...' என்று, அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.
உடனே அவள், தன் யோசனையை ஒரு கடிதத்தில் எழுதி, அதை, லிங்கனுக்கு அனுப்பி வைத்தாள். தாடி வளர்த்தால், ஜனாதிபதி தேர்தலில், அவருக்கு பெண்களின் ஓட்டுகள் அதிகம்
கிடைக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தாள்.
ஒரு சிறுமி, தன் மீது இவ்வளவு அன்பு வைத்து எழுதியிருந்ததை கண்ட லிங்கன், அன்று முதல், தாடி வளர்க்கத் துவங்கினார்.
அடுத்த ஆண்டு, அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், வாஷிங்டன் நகரில், ஜனாதிபதிக்குரிய வெள்ளை மாளிகையில் குடியேறுவதற்காக, ரயிலில் சென்றார். அப்போது, 'வெஸ்ட் பீல்டு'க்கு அருகில், ஒரு ரயில் நிலையத்தில், மக்கள் திரளாக வந்து, அவருக்கு வாழ்த்து கூறினர்.
அப்போது, லிங்கன் அவர்களை பார்த்து, 'இந்த கூட்டத்தில், வெஸ்ட் பீல்டைச் சேர்ந்த, கிரேஸ் என்ற சிறுமி இருக்கிறாளா... அவள் தான், என்னை தாடி வளர்க்கும்படி யோசனை கூறி, கடிதம் எழுதியவள்...' என்றார்.
கிரேஸும், அவளின் தந்தையும் அந்த கூட்டத்தில் இருந்தனர். லிங்கன் கூறியதை கேட்டதும், கிரேஸை துாக்கிக் கொண்டு கூட்டத்தை கடந்து, அவரிடம் அவளை அழைத்து போய் விட்டார், தந்தை.
உடனே, லிங்கன், அவளை உயரே துாக்கி முத்தமிட்டு, கீழே இறக்கி, 'இந்த பெண், நான் தாடி வளர்த்தால் நன்றாக இருக்கும் என்று, எனக்கு கடிதம் எழுதியிருந்தாள். அவளது யோசனைப்படியே, தாடி வளர்க்க ஆரம்பித்தேன்...' என்று, கூட்டத்தினரிடம் அறிவித்தார்.
அவளிடம், 'கிரேஸ், உனக்காகத்தான், நான் தாடி வளர்க்கிறேன்...' என்றார், லிங்கன்.
கிரேஸுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
சென்னை, 'நாயுடு ஹால்' கம்பெனி தயாரிக்கும், 'கட் பாடி'கள் பிரபலமானவை. அதன் அதிபரான எம்.ஜி.நாயுடு, ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் படித்தது இது:
'ஸ்டேட் பேங்க்' உதவியோடு, சிறு தொழிலாகத்தான் இந்த, 'கட் பாடி' தயாரிப்பை துவங்கினேன். 'பிரா' தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு, ஏழெட்டு ஆண்டுகளுக்குள்ளாகவே எங்கள் கம்பெனி பிரபலமானதற்கு, நான் தேர்தலில் நின்றது தான் காரணம்.
என் கடையிலிருந்த பெண் விற்பனையாளர்கள், வீடு, வீடாக சென்று, எங்கள் தயாரிப்பு, 'பிரா'க்களை பற்றி விளக்கிச் சொல்ல, என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். அப்போது, தேர்தலில் நிற்பது தான் சரியான யோசனை என்று பட்டது.
அதன்படி, ஒவ்வொரு விற்பனையாளரையும், வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்க மட்டுமல்லாமல், நாயுடு ஹால், 'பிரா' பற்றி விளக்கிச் சொல்லி, அவற்றை விற்பனை செய்யவும் வைத்தேன்.
தேர்தலில் நான் தோற்றேன். ஆனால், அதற்காக செலவழித்த பணத்துக்கு மேல், என் வியாபாரத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்து விட்டது. ஆரம்பத்தில், ஆண்டு ஒன்றுக்கு, 30 ஆயிரம், 'பிரா'க்கள் மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஆனால், 1962 தேர்தலுக்கு பின், 75 ஆயிரமாக உயர்ந்தது. ஆக, தோற்றாலும், வென்றவன் நான்!
— இப்படி கூறியுள்ளார்.
