PUBLISHED ON : மார் 15, 2020

மா. சுதிக் ஷா, இடைப்பாடி, சேலம்: எதற்கெடுத்தாலும், 'அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்பவர்கள் பற்றி...
இவர்கள், நாளையும், நேரத்தையும் கடத்துபவர்கள்! வாழ்வில் ஒரு போதும் முன்னேற முடியாதவர்கள்!
* எஸ். சுரேஷ் பாபு, நத்தம்: 'வர வர, 'தினமலர்' நாளிதழில், விளம்பரங்கள் அதிகமா போச்சு...' என்கிறாரே என் அப்பா... என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் அவருக்கு?
விளம்பரங்கள் அதிகமிருந்தால், பக்கங்களும் அதிகரிக்கும்; எல்லா செய்திகளும் இடம்பெறும்! விளம்பரமே இடம் பெறவில்லை என்றால், ஒரு நாளிதழின் விலை, 25 ரூபாயாகும்! இது, வாசகர்களுக்கு பெரும் பாரம்!
அதனால் தான் விளம்பரங்கள்!
வே. ஆயர்பாடி, சென்னை: சமையல் மாஸ்டராக, பல ஆண்டு வேலை செய்கிறேன்; சம்பளம் போதவில்லை. தனியாக கடை வைக்கலாம் என்று நினைக்கிறேன்...
வரவேற்கத்தக்க எண்ணம்! சம்பளதாரர்கள் பலர், இன்று, ஓட்டல் அதிபர்களாகவும் உள்ளனர். ஆனால், ஓட்டல் என்றால், தினமும், நான்கு மணி நேரம் தான் ஓய்வு - ஆரம்ப காலத்தில்! மனதை தயார் செய்து கொள்ளுங்கள்; வெற்றி உங்களுக்கே!
மு. நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஒரு நண்பன், தன் நண்பனுக்கு எப்போது எதிரியாகிறான்?
பணத்தால் ஒன்று; பெண்ணால் இன்னொன்று! இரண்டையும் விளக்க பல உதாரணங்கள் கையில் உண்டு; இடமில்லை விட்டு விடுகிறேன்!
* கருணை வள்ளல், சென்னை: இன்றைய இந்தியாவில், யார் பிழைக்கத் தெரிந்தவர்கள்?
சந்தேகமில்லாமல், அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், போலீசாரும் தான்!
இந்த பிழைக்க தெரிந்தவர்கள் மாட்டிக்கொள்ளும் செய்திகளை, அடிக்கடி நாளிதழ் மூலம் தெரிந்து கொள்கிறோமே!
எஸ். கண்ணன், மதுரை: ஒருவரின் உண்மையான திறமையை நேருக்கு நேர் புகழ்தல் தவறா?
தவறே இல்லை! புகழப்படுபவர், தன் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள இது உதவும்!
*ஆர். சாந்தி, வலையபட்டி, புதுக்கோட்டை: முதுமையில் மகிழ்ச்சியாக வாழ தேவை பணமா, பாசமா?
இரண்டாவதே முதல் தேவை. பேரன், பேத்தி, மருமகள், மகனுடன் வாழ்வதே மகிழ்ச்சி - சந்தோஷத்தைக் கொடுக்கும். பணமும் தேவை தான். வங்கியில் தேவையான பணம் வைத்திருப்பதும், சந்தோஷம் தான்!
