தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கட்டிப்பிடி வைத்தியம்!

கட்டிப்பிடி வைத்தியம்!

கட்டிப்பிடி வைத்தியம்!


PUBLISHED ON : மார் 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கி.மு.க., கட்சி தலைமையகம்.

கி.மு.க., கட்சி தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, ரூஸ்வெல்ட் அமர்ந்திருந்தார். அவரது சுருள் சுருள் பம்பை கேசத்தை கூடாய் அமைத்துக் கொள்ளலாமா என்கிற யோசனையில் ஒரு துாக்கனாங் குருவி, தலையை சுற்றி பறந்தது. இடது கையால் குருவியை தட்டி விட்டார், ரூஸ்வெல்ட்.

கட்சியின் நம்பர் டூ, மால்முருகன், தன், 'எக்ஸ்ட்ரா லார்ஜ்' வாயால் ஒரு பாடலை முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தார். அவரது, 'ஐப்ரோ' மீசை பளபளத்தது.

திடீரென்று எழுந்த, மால்முருகன், ''தம்பி... அங்க பாரு, பழகிரி வர்றாரு.''

''எங்க... எங்க?'' பதறி சிதறி, எங்க வீட்டு பிள்ளை, எம்.ஜி.ஆர்., போல் பம்மினார், ரூஸ்வெல்ட்.

''சும்மா ஜாலிக்கு சொன்னேன், தம்பி. இங்க எந்த கிரியும் வரல.''

''விளையாடாதீங் கண்ணே... அந்த பேரை கேட்டாலே இதயம் தாறுமாறா துடிக்குது. சோடி துணை கிமிட் ஷா துணைன்னு, உதடு தானா உச்சரிக்குது.''

''சரி, தம்பி... இன்னைக்கு, சட்டசபையில நாம எப்படி நடந்துக்கிறது, பேசுறதுன்னு கொஞ்சம் விவாதிப்போமா?''

''ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருத்தர், பல் விளக்கிட்டு வரல... சட்டசபை இருக்கை துாசியா இருக்கு... சபாநாயகர் இருக்கைக்கு பின்னாடி, கான்ஜுரிங் பேய் நின்னுகிட்டு சிரிக்குதுன்னு சொல்லி வெளிநடப்பு செய்யணும், அவ்வளவுதானே அண்ணே.''

''தம்பி... நாம, 100 தடவை வெளிநடப்பு செஞ்சதும், அதுக்கு, தமிழகம் தழுவிய ஒரு விழா நடத்தணும்.''

''விழா நடத்தலாம். ஆனா, விழாவுல இனிமொழிக்கு எந்த முக்கியத்துவமும் தரக்கூடாது.''

''ஆமா தம்பி.''

''அண்ணே... அப்பா இருக்கற வரைக்கும், எல்.கே.ஜி., குழந்தைக்கு, 'ரைம்ஸ்' சொல்லிக் குடுத்து, கூட்டத்துல அது சரியா ஒப்பிக்குதான்னு கூடவே நின்னு பாக்குற டீச்சர் வேலையை செஞ்சீங்க. இனி, என்னை கொஞ்சம் சுதந்திரமா விடுங்கண்ணே... வலிக்குது, ரொம்ப வலிக்குது.''

மணிபர்ஸ் வாய் திறந்து சிரித்தார், மால்முருகன்.

''நேத்தைக்கு வந்த, கீமான் என்னமா பேசுறான். முந்தாநேத்து வந்த, பண்புமணி, பக்கா கார்ப்பரேட் மாதிரி பொளந்து கட்டுறான். கிசா காலத்திலேர்ந்து அரசியல்ல நீச்சல் அடிச்சுகிட்டு இருக்கற உனக்கு மனப்பாடம் பண்ணினதை, 'மாடுலேஷ'னோட அடிச்சு விட தெரியலையே... சமயங்கல்ல உனக்கு பதிலா நானே, 'டப்பிங்' பேசிடலாம்ன்னு மனசு பதைபதைக்குது.''

''அதெல்லாம் சரி பண்ணிடலாம், அண்ணே.''

''என்னமோ போ... உன்னை முதல்வராக்குறதுக்குள்ள, எனக்கு, 200 வயசாயிடும் போல.''

''சட்டசபை விஷயத்துக்கு வாங்கண்ணே.''

''தம்பி... சட்டசபைக்குள்ள

நீ நுழையுறப்ப, உன் கண்ணுல,

கே.எம்.எஸ்., என அழைக்கப்படுகிற முதல்வர் குறிஞ்சிப்பாடி மாடசாமியுடன், எம்.எம்.எஸ்., என அழைக்கப்படுகிற துணை முதல்வர் மானாமதுரை மயில்சாமியும் பாடுவாங்க. நீ தடக்குன்னு, துணை முதல்வர் மயில்சாமியை பார்த்து, ப்ரியா வாரியார் மாதிரி கண்ணடிக்கிற.''

''கையாலேயே துப்பாக்கி செஞ்சு சுடணுமா?''

''ஓவராயிடும். ஏற்கனவே, கே.எம்.எஸ்.,சுக்கும், எம்.எம்.எஸ்.,சுக்கும், 'ஈகோ' போர். நீ கண்ணடிச்சவுடனே, கே.எம்.எஸ்.,சுக்கு, எம்.எம்.எஸ்., மேல பேய்தனமான சந்தேகம் வந்துரும். துணை, 'மு' உன்னோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி கிதி பண்ணுதோன்னு. அப்புறமென்ன உள்ளுக்குள் முட்டல் மோதல் தான்,'' என, பழைய நடிகர் அசோகன் போல சிரித்தார், மால்முருகன்.

''பிரமாதம் அண்ணே.''

''சட்டசபைக்குள்ள போறோம், உக்கார்றோம். 'முதல்வர், தன் முழு கை சட்டையை மடிச்சு விட்டுக்கிற விதம், எங்களை வம்புக்கு இழுக்குது'ன்னு, சபை வெளிநடப்பு பண்றோம். கேன்டீன்ல, மசால் வடையும், டீயும் குடிச்சுட்டு திரும்ப சட்டசபைக்குள்ள வந்து உட்கார்றோம்.''

''ம்... சரி.''

''கடந்த ஒரு மாசத்துல, கர்நாடக அரசு, 300 டி.எம்.சி., தண்ணி குடுத்ததா சொல்லுது. அதுல முக்கால்வாசி தண்ணி கடல்ல போய் கலந்திருச்சு. அப்படி கலக்காம அம்புட்டு தண்ணியையும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, 'கன்டெய்னர்' லாரிகள்ல ஏன் பிடிச்சு வைக்கலைன்னு, இரண்டாம் தடவை வெளிநடப்பு செய்யறோம்.''

''இரண்டாவது தடவை, மசால் வடை வேணாம். சமோசா கிமோசா கிடைச்சா நல்லாருக்கும்.''

''அய்ய...'' என அபிநயித்தார், மால்முருகன்.

''தேசிய கட்சியின் முன்னாள் தலைவர், ரெண்டு மூணு வாரத்துக்கு முன் இறந்தார்ல்ல, அவருக்கு, முதல்வர் நிவாரண நிதி, 50 லட்சமும், அவரது வளர்ப்பு பேரன், பேத்தி யாருக்காவது அரசு வேலையோ ஏன் அறிவிக்கலேன்னு, மூணாவது தடவை வெளிநடப்பு செய்யறோம்.''

''நாம வெளிநடப்பு செய்யும்போது, கூட்டணி கட்சி கிங்கிரஸ் என்ன பண்ணும்?''

''அதோட கூட்டணியை அறுத்து விட்டுட்டு, கி.ஜே.பி.,யோட கூட்டணி சேர்ந்திருவோமான்னு, மரண பீதியில இருக்கு, கிங்கிரஸ். வெளிநடப்பு செய்யிற நம்மள, உப்பு மூட்டை துாக்கிட்டு வர தயாரா இருக்காங்க கிங்கிரஸ்காரர்கள். தி பிளடி ஈயடிச்சான் காப்பீஸ்.''

''நமக்கு வாய்த்த அடிமைகள் மகா விசுவாசிகள்.''

''கடைசியா, நாலாவது தடவை வெளிநடப்பு. எதுக்கு தெரியுமா, மட்கா ஊழல்ல சம்பந்தப்பட்ட காவல்துறை தலைவர் தேவேந்திரனையும், அமைச்சர் ஜெய காஸ்கரையும் ஏன் பதவி விலகலைன்னு கேட்டு வெளிநடப்பு.''

''வாவ்...''

''தம்பி... வெளிநடப்பு செய்யிறதுக்கு முன்ன, நீ ஒரு அரை மணி நேரம், அரசுக்கு எதிரா காரசாரமா பேசணும். சபை குறிப்புல ஏத்த மாட்டார், தினபால். பரவாயில்ல, வெளியில வந்து, பத்திரிகைகாரங்ககிட்ட விலாவாரியா கும்மியடிக்கலாம்.''

''சரி...''

''நாலாவது தடவை நீ வெளிநடப்பு செய்யிறப்ப, ஒரு முக்கியமான காரியம் செய்யணும்.''

''அதென்ன?''

''சத்தமா சொல்ல மாட்டேன், காதை கொண்டா.''

மால்முருகன் சொல்லி முடிக்க, வானத்துக்கு துள்ளி குதித்தார், ரூஸ்வெல்ட்.

''இது, 'ஒர்க் - அவுட்' ஆகுமா அண்ணே.''

''மால்முருகன் இருக்க பயமேன்,'' கை உயர்த்தி அருள்பாலித்தார்.

சட்டசபை -

முதல்வர் குறிஞ்சிபாடி மாடசாமி, மினிஸ்டர் ஒயிட் சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். தலை கேசத்தை கிராமத்து பண்ணையார் போல துாக்கி சீவியிருந்தார். சட்டசபையில் மறைந்த கட்சி தலைவி தெய்வநாயகியின் புகைப்படம். பக்கத்தில், துணை முதல்வர், மானாமதுரை மயில்சாமி அமர்ந்திருந்தார்.

முதல்வர் தன் கண்களால், ஆளும்கட்சி உறுப்பினர்கள் எத்தனை பேர் சபைக்கு வந்திருக்கின்றனர் என, ஆராய்ந்தார்.

'ஆட்டை கவனமா மேய்ச்சு, பட்டியில அடைக்க வேண்டியிருக்கு. இல்லேன்னா, பணகரன் பிடிச்சிட்டு போயிருவான்...' முணுமுணுத்தார்.

சட்டசபை ஆரம்பித்தது.

எதிர்க்கட்சி தலைவர், ரூஸ்வெல்ட், மட்கா ஊழலை பற்றி பேச எழுந்தார்.

''எங்க ஊர் கிராமங்கள்ல சில கிழங்கட்டைகள், இழுத்துக்க, பறிச்சுக்கன்னு கயித்து கட்டில்ல, 10 - 20 வருஷமா உயிர் வாழும்; அப்படிதான் இந்த அரசும். இந்த அரசு, மைனாரிட்டி அரசாக இருந்தாலும், ஊழல்களை உலகமே திகைக்க தினம் தினம் செஞ்சுகிட்டு தான் இருக்கு.

''இந்த அரசு எப்ப கவிழும்ன்னு வெகுஜன மக்கள் ஆவலா காத்துகிட்டு இருக்காங்க. 'லேட்டஸ்டா' மட்கா ஊழலில் சம்பந்தப்பட்டோரின் இல்லங்களில், சி.பி.ஐ., ரெய்டு. தமிழ்நாடு காவல்துறை தலைவர், தேவேந்திரனும், அமைச்சர் ஜெய காஸ்கரும், இந்த மட்கா ஊழலுக்கு உடந்தை.

''இவங்க ரெண்டு பேரையும், உடனடியா பதவியை விட்டு நீக்காம, ஏன் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கு அரசு. அமைச்சர் ஜெய காஸ்கரை நீக்கினால், அவரது ஆதரவாளர்கள் ஆட்சியை கவிழ்த்து விடுவர் என்கிற பயமா, முதல்வருக்கு?''

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, கத்தினர்.

''கி.மு.க., தான் ஊழல் பல்கலைக் கழகம். உங்களுக்கு, எங்களை பத்தி பேச யோக்கியதை இல்லை. எங்கள் ஆட்சி, கி.பி., 2500 வரைக்கும் நீடிக்கும். தமிழக மக்கள் ஒவ்வொரு கோவிலிலும் நின்று, முதல்வர், 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் என, அர்ச்சனை செய்கின்றனர்.''

உதட்டை சுழித்தார், ரூஸ்வெல்ட்.

''ஒரு வார்டு கவுன்சிலராக நின்று கூட ஜெயிக்கும் ஓட்டு வங்கி இல்லாதவர், குறிஞ்சிபாடி மாடசாமி. பெரும்பான்மை இல்லை. கட்சி, மூன்று அணிகளாக பிரிந்து நிற்கிறது.

''மத்திய அரசு அணைத்துக் கொண்டே முதுகில் குத்துகிறது; 90 சதவீத மக்கள் வெறுப்பு, மீடியா அமில விமர்சனம், எல்லாவற்றையும் தாண்டி தாக்குபிடித்து, முதல்வராக நீடிக்கிறாரே மாடசாமி, அதை பாராட்டுகிறேன்,'' என, ரூஸ்வெல்ட் மிக வேகமாக ஓடி, மாடசாமியை கட்டி அணைத்தார்.

தப்பிக்க முயலும் கதாநாயகி போல, ரூஸ்வெல்ட் அணைப்பிலிருந்து முரண்டி விடுபட்டார், மாடசாமி.

பத்து நொடியில் சட்டசபை கட்டடம் நொறுங்க கூவினார், மாடசாமி.

''என் மணிபர்ஸ் காணல... யாரோ சுட்டுட்டாங்க.''

''யாரோ என் வைர மோதிரத்தை உருவிட்டாங்க,'' கத்தினார், ரூஸ்வெல்ட்.

சட்டசபை வளாகமே அல்லோலகல்லோலப்பட்டது. முதல்வரையும், எதிர்க்கட்சி தலைவரையும் தன் அறைக்கு வரவழைத்தார், சபாநாயகர்.

''ரெண்டு பேருமே, மணிபர்ஸ் காணல, வைர மோதிரம் காணலைன்னு, 'சீன் கிரியேட்' பண்ணாதீங்க... நடந்ததை, அடக்கி வாசிப்பது ரெண்டு கட்சிகளுக்கும் நல்லது.''

மவுனமாய் அறையை விட்டு வெளியேறினார், ரூஸ்வெல்ட்.

மறுநாள் காலை, சட்டசபை வளாகம்.

வரிசைக்கு பத்து ஆணிகள் வீதம், 20 வரிசைகள் மார்பிலும், முதுகிலும் கொண்ட விசேஷ மார்பு சட்டை அணிந்து வந்திருந்தார், குறிஞ்சிபாடி மாடசாமி. துணை முதல்வர், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கூட, ஆணி மார்பு சட்டை அணிந்திருந்தனர்.

ரூஸ்வெல்டை பார்த்து, ''இப்ப என்ன பண்ணுவீங்க... இப்ப என்ன பண்ணுவீங்க...'' என, கிண்டலித்தார், மாடசாமி.

'ஞே...' என, விழித்தார், மால்முருகன்.

சாணக்கிய ராஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us