தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 22, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே

வழக்கமாக நடைபெறும், எழுத்தாளர் கூட்டத்தில், 'திண்ணை' நாராயணன் சார், சொல்லக் கேட்டது:

'ரெப்ரிஜிரேட்டர்' கண்டுபிடிக்கும் முன்பே தமிழன், 'வச்சு வச்சு' சாப்பிட்டது புளி சாதத்தை தான். ஒரு வாரம் ஆனாலும் கெடாது. அக்காலத்தில், வெளியூர் பயணங்களில் நம் கால்களே, 'டாக்சி'யாக இருந்தபோது, பாட்டன்களின் பசியை போக்கிய வழிச்சோறு, புளி சோறு என்பது, 100 சதவீத உண்மை.

எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில், 'டாப் 5'ல் இடம்பிடிக்க கூடிய புளியோதரையில், உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என, அறுசுவைகளும் உள்ளன. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்து விடலாம். இதன் புராணம் மிகச் சுவையானது.

புளியோதரைக்கு, மணமும், நிறமும் இரு கண்கள். முதலில், புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம், மிக முக்கியம். அது, புதுமண தம்பதியர் போல பின்னிப் பிணைந்து, குழைந்து விடாமல், திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆன தம்பதியர் போல, சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே சாலச் சிறந்தது.

அடுத்து, நிறம். புளியோதரை, ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச் சிறப்பு. சாதத்தை வடித்து, ஆறவிட்டு பயன்படுத்துதல், புளியோதரைக்கு சரியான பக்குவ முறை.

அடுத்து, எண்ணெய். நீங்கள், பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும், எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்க்கக் கூடாது. நல்லெண்ணெய் எனும் ஏக பத்தினியை மட்டும் ஏற்றுக்கொள்வான், இந்த புளியோதரை எனும், ராமச்சந்திர மூர்த்தி. அதிலும், செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில், எந்த சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன்.

அடுத்து, புளி... நேற்று முளைத்த புது புளி கூடாது. பழம் புளியே, புளிக்காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது.

புது புளியில், புளியோதரை செய்தால், புலிக்கு பிறந்த பூனையாகி விடும். பழம் புளியில் தான், அது புலியாகும். அடுத்து, மிளகாய். வதக்கும்போதே, நல்ல தரமான, நெடியேறும், காரமான காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு. அடுத்து, மிகுந்த சுவை சேர்ப்பது, நிலக்கடலை.

நிலக்கடலையும், புளியோதரையும் நல்ல நண்பர்கள். நல்லெண்ணெய் கமகமக்க, ஒரு வாய் அள்ளி சுவைக்கையில், வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை, 10 பாதாம் பருப்புகளுக்கு சமம்.

புளியோதரைக்கு, மிகப் பொருத்தமானது, துவரம் பருப்பு போட்ட, மெல் இனிப்பில் சின்ன வெங்காயம் அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான். கத்தரிக்காய் சாம்பாரை விட, எண்ணெய் புளி கத்தரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம். இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியத்துடன், தேங்காய் சேர்க்காது, புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள், நீண்ட நாள் உபயோகத்திற்கு; பொட்டுக் கடலை, தேங்காய் வைத்து அரைக்கும் துவையல், 'இன்ஸ்டன்ட்' சொர்க்கம்.

மதுரையில், சித்ரான்னங்களுக்கு புகழ்பெற்ற, சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகியபோது, அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு, கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தனர். சுவாரஸ்யமாக சாப்பிட்டால், சுவை ஆஹா... அள்ளியது; கூடவே, இஞ்சி மிளகாய் சட்னி வேறு!

முருங்கை, முள்ளங்கி போன்றவைகளின் தன்மையால், அக்காய்களை கொண்டு வைக்கும் சாம்பார், நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்து விடும். என் அம்மா, இதற்கு, மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார். 'இது, புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி...' என்பார்.

அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது. ஆயிரம் தான் புளியோதரையை வீட்டில் செய்தாலும், பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு. ஒரு பெண், புகுந்த வீட்டிலிருந்து, தாய் வீட்டிற்கு, ஒரு மாதம் விடுமுறையில் வந்தது போல இருக்கும்.

புளியோதரையின் தாய் வீடு, பெருமாள் கோவில். திருப்பதி, மயிலை, திருவட்டார் ஆகிய பெருமாள் கோவில்களுக்கு வந்து விட்டாலே, அதற்கு ஒரு தனி ருசி வந்துவிடும். பாண்டிய நாட்டிற்கு அடிமை என, ேஹமநாத பாகவதர் எழுதி தந்தது போல, புளியோதரைக்கு கொஞ்சமும் தயங்காமல், நான் மனதார எழுதி தருவேன்.

சிறிது சுண்டை வத்தலை நன்கு வதக்கி, அதை இடித்து துாவுவது, என் பாட்டியின், 'ஸ்டைல்!' பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிக பிரமாதமாக செய்வார்.

'புளியோதரையை புண்ணிய சோறு...' என்பர். மாயா பஜார் படத்தில், 'கல்யாண சமையல் சாதம்...' என்ற பாடலில், 'புளியோதரையும் சோறு, மிகப் பொருத்தமாய் சாம்பாரு...' என்பது போல, அருமையான புளியோதரை கிடைத்து விட்டால், நாம் எல்லாருமே, கடோத்கஜன்கள் தானே!

முன்பொரு முறை, எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியதை, வாசக எழுத்தாளரான, ஜோ.ஜெயக்குமார் எடுத்து, தனக்கு அனுப்பி உள்ளார் என்று கூறி முடித்தார், நாராயணன் சார்.



'வாட்ஸ் - ஆப்'பில் படித்தது:

நிறைய படித்து விட்டோம் என்ற இறுமாப்பு அடையாமல், பிறரின் அனுபவங்களை செவிமடுத்து கேட்க வேண்டும்.

'நான் மிகப்பெரிய டாக்டர். எனக்கு தெரியாதது இந்த கம்பவுண்டருக்கு என்ன தெரிந்துவிட போகிறது...' என்று நினைப்பர். ஆனால், அந்த கம்பவுண்டருக்கு அனுபவம் அதிகம் என்பதை உணர மாட்டார்கள்.

டாக்டர்களால் முடியாதவற்றை, நர்ஸ்களும், கம்பவுண்டர்களும் செய்து கொடுப்பதை பல மருத்துவமனைகளிலும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம்.

மலையில் பெய்த மழையால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்தது. அங்கிருந்த ஒரே மாதிரியான மரங்கள் சில, ஆற்றில் மிதந்து வந்தன. இதைக் கண்ட தச்சர் ஒருவர், சிலர் உதவியுடன், அவற்றை தடுத்து நிறுத்தி, தட்டி பார்த்தார். நிறைய மரங்களை ஆற்றிலேயே விட்டு விட்டு, குறைவான மரங்களை மட்டுமே, தன் இடத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதை கவனித்த ஒரு பொறியாளருக்கு வியப்பு.

'அத்தனை மரங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் தெரிகிறது. ஆனால், நீங்களோ சில மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தீர். அதிகமான மரங்களை ஆற்றோடு விட்டு விட்டீர். ஏன் அப்படி...' என்று, கேட்டார்.

'வேண்டாம் என்று நிராகரித்த மரங்கள் அனைத்தும், மலை பகுதிகளில் மிகுந்த பாதுகாப்புடன் வளர்ந்தவை. அவை, அடுப்பு எரிக்க மட்டும் தான் பயன்படும்.

'தேர்ந்தெடுத்த மரங்கள் அனைத்தும், மலை உச்சியில் வளர்ந்தவை. அங்கு, பலத்த காற்று, கன மழை, புயல், சூறாவளியையும் சந்தித்திருக்கும். அவற்றோடு போராடி போராடி, நல்ல வலிமையை பெற்றிருக்கும். அதனால், அடி மரம் வைரம் பாய்ந்திருக்கும்.

'இதுபோன்ற மரத்தில், கதவு, கட்டில் போன்றவற்றை செய்தால், அவை, நீண்ட காலம் உழைக்கும் திறனை பெற்றிருக்கும். அதை பார்த்து தான் இந்த மரங்களை தேர்ந்தெடுத்தேன்...' என்றார், தச்சர்.

இந்த உண்மையை, அவரது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறார், தச்சர்.

இதுபற்றி தெரிந்து கொள்ள அவருக்கு பல நாட்கள், பல மாதங்கள் ஆகியிருக்கலாம்.

இதுதான், அனுபவம்.

படித்தவர்கள், இந்த அனுபவத்தை பெறுகிறபோது தான், அவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us