PUBLISHED ON : மார் 22, 2020

* எஸ். பிரேமாவதி, சென்னை: நகரத்தில், 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி அவதிப்படுவதை விட, கிராமத்தில், 10 ஆயிரம் கிடைத்தாலே சொகுசு வாழ்க்கை என்று நினைக்கிறேன்... என்ன சொல்கிறீர்கள்?
முதலில் பெட்டியைத் துாக்குங்கள்... நீங்கள் கூறிய இரண்டாவது வாழ்வே இன்பகரமானது! நாங்கள், நகரத்தில், நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
* கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: 10 பசு மாடுகள் இருந்தால், படிப்பே தேவையில்லை என்கிறாரே, என் நண்பர்...
எம்.பி.பி.எஸ்., - இன்ஜினியரிங், சட்டம் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் தேவையில்லை தான். இவற்றை படித்தவர்கள், வேலையில்லாமலும், குறைந்த சம்பளத்திலும் அவதிப்படுகின்றனர். 10 பசு மாடுகள் இருந்தால், ராஜா வாழ்க்கை வாழலாம். ஆனால், குறைந்தது, 10ம் வகுப்பாவது முடித்திருப்பது நல்லது!
ஆர். ரேவதி, பள்ளிநேலியலுார், விழுப்புரம்: எப்போதும், சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் உண்டா?
ஓ... உண்டே! எது பற்றியும் கவலைப்படாதவர்கள் அவர்கள். அவர்களிடம் சந்தோஷத்திற்கு குறைவு ஏது?
என்.ஜே. கனகேஷ்வரி, திருப்பூர்: நாளிதழ்களை விட, வார, மாத இதழ்களுக்கு மவுசு இருப்பது ஏன்?
இன்று, வார இதழ்களில் முன்னணியில் இருப்பதாக கூறப்படும் இதழுக்கு,ஏ.பி.சி., எனப்படும், 'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' கொடுத்துள்ள பத்திரிகை விற்பனை, 35 ஆயிரம் தான்! மாத இதழ்கள் பற்றி சொல்லவே வேண்டாம். நாளிதழ்கள், தினமும், 10 லட்சம் முதல், 15 லட்சம் வரை விற்பனை ஆகிறது; இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!
பி. சாந்தி, மதுரை: சரளமாக ஆங்கிலப் பேச்சு வரவில்லை என்றால், அது, முன்னேற்றத்திற்கு தடையாகுமா?
இல்லவே இல்லை! கொலை வழக்கு ஒன்றில் மாட்டி, கம்பி எண்ணி, சமீபத்தில் இறந்தாரே... ஒரே பெயரில் உலகம் முழுவதும் ஓட்டல் உள்ள அதிபராக இருந்தாரே அவருக்கு, 'எ, பி, சி, டி...'யே வராது. அவ்வளவு ஏன், இன்று, 'டிவி' விளம்பரங்களில், மாடல்களாக வருகின்றனரே, ஜவுளி, நகை, மசாலா அதிபர்கள்... அவர்களும் ஆங்கிலத்தில் தடுமாற்றம் உள்ளவர்களே! ஆங்கிலம் தெரியாதது, முன்னேற தடை அல்ல!
