PUBLISHED ON : மார் 22, 2020

பணத்தை எண்ணி, படுக்கையை சுருட்டிய போது, மெத்தை அடியிலிருந்து, 'பர்ஸ்' விழ திடுக்கிட்டாள், பத்மினி.
'யாருடையதாய் இருக்கும்...' என்ற யோசனையுடன் எடுத்து, பிரித்தாள். கருப்பு - வெள்ளை புகைப் படத்தில், சிரித்துக் கொண்டிருந்தான், இளைஞன் ஒருவன்.
இப்போது சென்ற ஆளுக்கும் முதல் ஆள். உடனே அடையாளம் தெரிந்து விட்டது, பத்மினிக்கு.
'மறதியாக விட்டு போய் விட்டானோ...' என, எண்ணியபடி, பணம் இருக்கும் பக்கத்தை விரித்தாள். உள்ளே, ஆறு, 500 ரூபாயும், இரண்டு, 100 ரூபாயும், படுக்கவாட்டில் பத்திரமாக இருந்தன. அடுத்து, ஒரு வெளிர் நீல நிறத்தில், உள்நாட்டு கடிதம்; ஓரம் கிழிந்து பிரிக்கப் பட்டிருந்தது.
பெறுநர் முகவரியில்,
'ரா.பார்த்திபன், ... ... ... காரைக்கால் - 609 602' என்று, விலாசம் தெளிவாக இருந்தது. விடுநர் முகவரியில், 'சாந்தி, சேலம்' என்று மொட்டையாக இருந்தது.
பெண் எழுதி இருக்கிறாள். பிரிக்கலாமா, கூடாதா என்ற மன போராட்டத்திலேயே விரித்தாள்.
அன்புள்ள அண்ணாவிற்கு —
உன் தங்கை எழுதிக் கொண்டது. இங்கு, நான் நலம். ஆனால், என் கணவர், சிறுநீர் கழிக்க சிரமப்படுகிறார்; சிறுநீரக பாதையில் அடைப்பு. அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகும். 10 ஆயிரம் ரூபாய் ஆகுமென்று, டாக்டர்கள் கூறுகின்றனர். இதுவரை, 7,000 ரூபாய் சேர்த்துள்ளேன். உடன், 3,000 ரூபாய் அனுப்பினால் குணமாக்கலாம்.
தயவுசெய்து தாமதமின்றி அனுப்பவும்.
—இப்படிக்கு,
சாந்தி.
'இதற்காகவா இந்த பணம்...' படித்த பத்மினிக்கு, அதிர்ச்சியாக இருந்தது.
இன்னும் ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்தாள். அகப்பட்டது, அடகு சீட்டு. செயின், 8 கிராம், 200 மில்லி. கடன் தொகை, 3,500 என்று எழுதியிருந்தது.
நகையை அடகு வைத்து, இங்கு வந்து மறந்து விட்டிருக்கிறார் என்பது, எளிதாக புரிந்தது.
'பார்த்திபன் வருவாரா, இல்லை, எங்கே விட்டோமென்று இடம் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறாரா... போய் கேட்டால், 'பணத்திற்காக படுப்பவள்தானே... எடுத்து வைத்துக் கொண்டு இல்லையென்று சாதித்தால் என்ன பண்ணுவது... இது, சுடுகாட்டு பிணம். தொலைந்த பணம் வீடு திரும்பாது. கைக்கு கிடைக்காது என்று போய் விட்டாரா...' என, யோசனை சுழன்றது, பத்மினிக்கு.
'இதை, அவன் தங்கைக்கு அனுப்பினாலென்ன...' என நினைத்து, மீண்டும் ஒருமுறை விலாசம் பார்த்தாள். சாந்தி, சேலம் என்றிருந்தது. பணமோ, கடிதமோ அனுப்ப, இந்த விலாசம் போதாது, என்ன செய்வது, விழித்தாள்.
'வராமலா போவான்...' என்ற எண்ணத்தில், அதை, மெத்தைக்கு அடியில் வைத்து வேலையை பார்த்தாள்.
வாசல் கதவை யாரோ தட்டினர்.
பார்த்திபனோ என்று, மலர்ந்து திறந்தவளுக்கு, அதிர்ச்சி. வாசலில், ஆள் அனுப்பும், மாமா.
''எ... என்ன மாமா.''
''பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு... அனுப்பட்டா,'' என்றார்.
''வேணாம்.''
''ஏன் புள்ள,'' திகைப்புடன் பார்த்தார்.
''நான் பணத்துக்கு படுக்கிறவ இல்ல... பசிக்கு படுக்கிறவள்னுதான் உங்களுக்கு புரியுமே... இன்னைய வயித்துப்பாட்டுக்கு ரெண்டு ஆள் வந்தாச்சு... போதும்.''
''வயசு இருக்கும்போதே சம்பாதிக்கணும், பத்மினி.''
''வேணாம் மாமா,'' கையெடுத்து கும்பிட்டாள்.
''என்ன பொண்ணோ போ,'' அலுப்புடன் முணுமுணுத்து, அகன்றார்.
இறுக்கி தாழ்ப்பாள் போட்டாள்.
'இது, ஆபத்திற்கு உதவும் பணம். முகவரி இருக்கிறது. நாமே தேடிப் போய் கொடுக்கலாம்...' என, மனதில் பட்டது.
'பரபர'வென்று வேறு சேலையை மாற்றி, 'பர்சை' எடுத்து கிளம்பினாள். பேருந்திலிருந்து இறங்கி நடக்கையில், 'வீட்டில் பார்த்திபன் இருந்தால் கொடுக்கலாம். இல்லாவிட்டால், மனைவி, மக்கள் வேறு ஆட்கள் இருந்தால் என்ன செய்வது...' என்ற யோசனை வர, 'திக்'கென்றது.
'ஆண்டவா... எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சேர்ப்பிக்க வேண்டும்...' என, வேண்டியபடி நடந்தாள்.
பழக்கப்பட்ட ஊர் என்றாலும், காந்தி நகர் தெரியவில்லை.
''ஐயா... காந்தி நகர் எங்க இருக்கு,'' என, எதிர்பட்ட முதியவரை கேட்டாள்.
''இடப்பக்கம் திரும்பி, கொஞ்ச துாரம் நடந்து, வலப்பக்கம் திரும்பினா, காந்தி நகர்,'' என்றார்.
சொன்ன வழி நடந்தாள். ஆனாலும், ஊர் பலகையில், போஸ்டர் ஒட்டி, சாணி அடித்திருந்ததால்,
என்ன பெயர் என,
படிக்க முடியவில்லை.
''என்ன தாயி... பாக்குறே,'' என, குடத்துடன் ஒரு அம்மா எதிரே நின்றாள்.
''காந்தி நகர்.''
''இது தான்... என்ன விஷயம்?''
''பார்த்திபன், 14 நம்பர் வீடு.''
அதிசயமாக, பத்மினியை ஏற இறங்க பார்த்தாள்.
''என்ன மாமி?''
''ஒண்ணுமில்ல.''
''பார்த்திபன் வீடு.''
''இதே சாரியில, 10வது வீடு.''
இவள் குடிசையை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது, வீடு. நடுக்கத்துடன் கதவை தட்டினாள், பத்மினி. நடுத்தர வயது பெண் திறந்தாள்.
ரொம்பவும் களைத்து, தொங்கிய முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான், பார்த்திபன்.
''தம்பி,'' பொன்னி அழைத்தாள்.
''என்னம்மா,'' நாற்காலியில் சரிந்தான்.
''இந்தா...'' பர்சை நீட்டினாள்.
''ஏதும்மா இது,'' துணுக்குற்று நிமிர்ந்து, பரபரப்பாக வாங்கினான்.
''ஒரு பொண்ணு எடுத்து வந்து கொடுத்தா.''
''பொண்ணா...''
''ஆமாம்ப்பா... பேரு, பத்மினின்னு சொன்னா.''
''அம்மா...'' அலறினான்; கை நடுங்கியது.
''ஏதும்மா... எப்படி உன் கைக்கு கிடைச்சது,'' என்றான்.
''நீ அவ வீட்டுக்கு வந்ததா சொன்னா.''
''அ... அம்மா.''
''பார்த்தாளாம், பணம் கூடவே லெட்டரும் இருந்துச்சாம்... எடுத்துகிட்டு வந்தேன்னா.''
''வேற ஏதாவது?''
''சொன்னா... தான் ஒரு நடத்தை கெட்டவள்ன்னு.''
''அம்மா,'' பார்த்திபனுக்கு எண்சாண் உடம்பும் ஒரு சாணாக குறுகி நடுங்கியது.
''அவளை பார்த்தா நல்லவளா தெரியுதுடா.''
அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
''சேத்துல செந்தாமரை மாதிரி, இப்புடி ஒரு நல்ல மனசு இருக்கே.''
அம்மா என்ன சொல்கிறாளென்று புரியவே இல்லை, பார்த்திபனுக்கு.
''அவ, எனக்கு மருமவளா வந்தா கூட, நல்லா இருக்கும்ன்னு தோணுது, பார்த்தி,'' என்றாள்.
''அம்மா...'' அதிர்ச்சியின் எல்லையில் எழுந்து நின்றான், பார்த்திபன்.
''பதறாதே, பார்த்தி... அவ உண்மையை சொன்னா... ஒளிக்காம பணத்தை எடுத்து வந்து கொடுத்தா... சேத்துல, முத்து கெடக்குறா மாதிரி தோணுது. குனிஞ்சு நாம ஏன் எடுக்க கூடாதுன்னு, மனசுக்கு படுது. நீ பொண்டாட்டிய இழந்தவன். அப்புடி இப்புடி இருக்கலாம்; தப்பில்ல.
''அதனால, கெட்ட சகவாசம் வெச்சிருக்கிறியேன்னு வெறுத்து, உன் தலையில கெட்டவளை கட்டி வைக்கிறது என் எண்ணமில்ல... எந்த தாயும், தன் பிள்ளைக்கு அந்த துரோகம் செய்ய மாட்டா. பத்மினி, நல்லவளா என் மனசுக்கு படுறா. இன்னும் ஏன் அங்கேயே கெடந்து, அவ சீரழியணும்ன்னு மனசு துடிக்குது.''
''உன் விருப்பம்மா,'' என, நிமிர்ந்தான், பார்த்திபன்.
பொன்னி முகத்தில், மலர்ச்சி பரவியது.
ரகு. பாலமுருகன்
