PUBLISHED ON : ஏப் 05, 2020

பா - கே -ப
நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற, போது அவரது இல்லத்தில் நுாலகத்திற்கு என்றே ஒரு அறை இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.
அவரிடம் இதுபற்றி பேசிக் கொண்டிருந்தபோது, காபி எடுத்து வந்தார், அவர் மனைவி.
காபியை அருந்தியபடியே, 'நுால்களின் மீது, இப்படி ஆர்வம் வந்தது எப்படி?' எனக் கேட்டேன்.
'தாத்தாவிடம் இருந்து, என் அப்பாவுக்கும் ஒட்டிக் கொண்டு விட்டது...
'அப்பா, புது வீடு... அதாவது, இந்த வீடு கட்டும்போது, நுாலகத்திற்காக தனி அறை கட்டி, அதில் கண்ணாடி பீரோக்களை அமைத்து, நுாலகமாக்கினார். அவரிடமிருந்தே எனக்கு நுால்கள் மீது, ஆர்வம் அதிகமாகியது; நானும் புத்தகப் புழுவாகி விட்டேன்; என் மகனும் இப்போது...' என்றார்.
'சரி சார்... நான் அதனுள் நுழைந்து, எனக்கு தேவையானவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளலாமா?' எனக் கேட்டேன்.
'ஓ... தாராளமாக... நான், 'டிஸ்டிரப்' செய்ய மாட்டேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்... தேவையானால், அவ்வப்போது காபி கேளுங்கள்... தரச் சொல்கிறேன்...' என்றார்.
நல்லவேளை, நம்முடன் லென்ஸ் மாமா வரவில்லை... 'அவ்வப்போது காபி தருகிறேன்...' என்றவரிடம், உற்சாக பானத்தை கேட்டுத் தொலைத்து விடுவாரே என்று எண்ணியபடி, நுாலகத்தில் நுழைந்தேன்.
அங்கு, முதலில் கண்ணில் பட்டது, ஒரு புத்தகம். அதில், 'கல்கி' வார இதழின், கல்கியின் மகள், ஆனந்தியின், 'என் தந்தையார்' என்ற கட்டுரை, கண்ணில் பட்டது. அவர் எழுதி இருந்ததாவது:
'ஆனந்த விகடன்' இதழில் இருந்த வரை, அப்பாவுக்கு பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார், அதன் அதிபர்,
எஸ்.எஸ்.வாசன். ஆனந்த விகடனில், குறுக்கெழுத்து போட்டி இடம்பெறுவதை விரும்பவில்லை, அப்பா. இவ்விஷயத்தில், அப்பாவுக்கும், வாசனுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில், காந்திஜியின், தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினார், அப்பா. ஆனால், வாசனுக்கு அதில் சம்மதமில்லை.
எனவே, விகடனிலிருந்து ராஜினாமா செய்து, சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, திருச்சி சிறையில், மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.
சதாசிவமும், அப்பாவும், விகடன் இதழில் ஒன்றாக பணியாற்றியவர்கள்; இருவரும், சிறையிலிருந்து விடுதலை ஆகினர்.
சதாசிவத்திடம், 'பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கணும்...' என்ற யோசனையை முன் வைத்தார், அப்பா. அவரும், அதை வரவேற்றார். ஆனால், முதலீடு செய்ய பணம் வேண்டுமே.
சதாசிவத்தின் மனைவி, எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம், சாவித்திரி படத்தில், நாரதராக நடிக்க வேண்டும் என, கேட்டு வந்தனர், தயாரிப்பாளர்கள்.
'ஆண் வேடம் ஏற்று நடிக்க விருப்பமில்லை...' என, மறுத்து விட்டார், எம்.எஸ்.சுப்புலட்சுமி.
புதிய பத்திரிகைக்கு, முதலீடு தேவை என்றதும், நாரதர் வேடம் ஏற்று நடிக்க ஒப்புக் கொண்டதுடன், நடித்தும் கொடுத்தார். அதன் மூலம் கிடைத்த தொகையில், துவங்கப்பட்டது தான், 'கல்கி' இதழ்.
- இதை குறிப்பெடுத்துக் கொண்டேன். இன்னொரு காபியை எடுத்து வந்தார், நண்பர்.
'என் தொந்தரவு எதுவும் இருக்காது... நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்...' என்று கூறிச் சென்றார்.
அடுத்து -
பாரதியார் பற்றி, ஆக., 3 1939ல் வெளியான, 'நகர துாதன்' என்ற வார இதழில், பாரதிதாசன் எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. அதில்:
ஒருநாள், நண்பர் ஒருவர் சகிதம், ஐயரிடம் (பாரதியைக் குறிக்கும் சொல்) சென்றேன். பல ரூபத்தோடும், பல காரணம் கூறியும், ரகசிய போலீஸ் நாய் நுழையக் கூடும். அதனால், வழக்கம்போல் என் நண்பரையும் உற்றுப் பார்த்தார், ஐயர்.
'இவர், என் நண்பர்...' என்று, ஜாமின் போட்டேன்.
'அப்படியா... நீங்கள் எங்கிருப்பது...' எனக் கேட்டார்.
'இந்த ஊர் தான். சுப்புரத்தினமும், நானும் ஒரே பாடசாலையில் வாசித்தோம்...' என்றார்.
'படித்திருக்கிறீர்களா?' எனக் கேட்டார்.
'கொஞ்சம் தெரியும்...' என்றார்.
இதற்கிடையில், 'இவர், கத்தி விளையாட்டில் சமர்த்தர். ஒரு நாளைக்கு விளையாட சொல்கிறேன்...' என்றேன், ஐயரிடம்.
அவ்வளவு தான். ஐயர் முகத்தையும், மார்பையும் பார்க்க வேண்டுமே.
தமிழரில் ஒருவர், கத்தி விளையாட்டு வீரராய் இருப்பதால், தேச விடுதலை நிச்சயம் என்று நினைத்து விட்டார் போலும்.
கத்தி வீரரை பார்த்து, 'அப்படியா, ஜமாயுங்கள்... எல்லாருக்கும் நீங்கள் அந்த வித்தையை கற்றுக்கொடுக்க வேண்டாமோ...' என்று, உற்சாகத்தால் என்னென்னவோ கூறினார்.
ஐயரின் குஷியை கண்டு, குஷாலாகிய நண்பர், ரகசியமாக, 'இப்போதே சென்று, கத்தியை எடுத்து வரட்டுமா...' என்றார், என்னிடம்.
அப்படியே தீர்மானிக்கப் பட்டது.
வந்தவர்களை யெல்லாம் இருக்க சொன்னார்; வராதவர்களை எல்லாம் அழைக்க சொன்னார், ஐயர்.
கத்தி விளையாட்டுக்காரர் வந்தார். ஐயரும், நானும், மற்றவர்களும் உட்கார்ந்தோம். பட்டா கத்திகளை இரண்டு கைகளிலும் எடுத்தார், வீரர்.
ஐயர் எழுந்தோடி, கீழே இருக்கும் மனைவியை நோக்கி, 'செல்லா... யாராவது வந்தால், மாடிக்கு அனுப்பு...' என்றார்.
வீரரின் இரு கைகளிலும் பட்டா கத்திகள் சுழன்றன. நானும், இன்னும் சிலரும், கத்தி விளையாட்டை பார்க்காமல் ஐயரையே கவனித்தோம். ஒரு நேரம், ஐயர் கண்கள் சிவக்கும்; மற்றொரு சமயம் சிரிக்கும்; மீசையை முறுக்கி விடுவார்; கை நொடிப்பார்; எங்களையெல்லாம் பார்ப்பார்.
கத்தி விளையாட்டை நிறுத்தி, உட்கார்ந்தார், நண்பர்.
'நீங்கள் வீரர்... நீங்கள் வீரர்... அடிக்கடி வந்து போகலாமே... இவ்விடத்தில், இப்புத்தகங்களை எல்லாம் வாசியுங்கள்...' என்று சொல்லி, சில புத்தகங்களை அவரிடம் கொடுத்தார், ஐயர்.
மறுநாள் காலை, மதியம், இரவு என, எந்நேரமும், ஐயருக்கு இதே நினைவு.
வருபவர்களிடம் எல்லாம், 'நேற்று, நீங்கள் கத்தி விளையாட்டை பார்க்கவில்லையே...' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தமிழன் ஒரு துறையில் கெட்டிக்காரனாக இருந்து விட்டால், ஐயர் அடையும் உற்சாகம் அளவிட முடியாதது. ஐயரிடம் தென்பட்ட பன்றி குட்டி கூட, அசல் சிங்கங்களாக ஆகாமல் போவதில்லை.
குறிப்பு எடுத்து முடித்தேன்; மூன்றாவது காபி வந்தது. எழுதிய களைப்பு தீர, அதைக் குடித்தேன்.
நண்பரிடம், 'அடிக்கடி நுாலகம் வரலாமா?' எனக் கேட்டேன்.
'ஏன்... தினசரி கூட வரலாம்...' என்றார்.
'குடிக்க, மூன்று காபிகள் கிடைக்கும் தானே!' எனக் கேட்டேன்.
'இது என்ன... ஐந்து நிமிடத்திற்கு ஒரு காபி தருகிறேன்...' எனக் கூறி, வழி அனுப்பினார்.
