
ப
பெயர் வெளியிட விரும்பாத, சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை வாசகி எழுதிய கடிதம்:
ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு...
* இரவு நேரங்களில், தன்னந்தனியாக பயணம் செய்ய நேர்ந்தால், உங்கள் கைப்பையில் மிளகாய் துாள், 'பெப்பர் ஸ்ப்ரெ' மற்றும் குண்டூசி, இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்து செல்லுங்கள்
* 'ஏய் ஆட்டோ...' என்றோ, 'நீ, வா, போ...' என்றோ, ஓட்டுனரை அழைக்காதீர்; இதனால், உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம். 'அண்ணா, தம்பி...' என்றோ, முடிந்தால், 'சார்...' என்றோ அழைக்கவும்; இதனால், உங்கள் மீது நல்ல அபிப்ராயமும், உடன்பிறந்த சகோதரி என்ற எண்ணமும் ஏற்படலாம்
* ஆட்டோவில் ஏறும் முன், நாம் போகும் இடத்தை தெளிவாக கூறி, அதற்கான வாடகை பேசிக் கொள்ள வேண்டும். இதனால், வாடகை தகராறு ஏற்படுவதை தவிர்க்கலாம்
* நீங்கள் ஏறும் முன், ஆட்டோ டிரைவரின் பெயரையோ அல்லது பதிவு நம்பரையோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால், நாம் ஏதாவது பொருளை விட்டுச் சென்றால், அந்த ஆட்டோ நம்பரை வைத்து கண்டுபிடித்து விடலாம்
* ஆட்டோவில் ஏறிய பின், ஓட்டுனரின் காது கேட்கும்படி சத்தமாக, உங்கள் நெருங்கிய உறவினருக்கோ, உறவினர் இல்லாதபட்சத்தில், 'டயல்' பண்ணாமல், போனில், 'நான் இந்த பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறி விட்டேன்; இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவேன்...' என்று கூறவும்.
* பயணம் செய்யும்போது, ஓட்டுனரிடம், குழைந்தோ அல்லது தேவையற்ற விஷயமோ ஏதும் பேசாமல் இருப்பது நல்லது. ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல், நடு பகுதியில் இருக்க வேண்டும்
* உங்கள் அரைகுறை ஆடையே, ஆபத்தை விளைவிக்கும். ஆதலால், ஆடைகளை ஒழுங்கான முறையில் உடுத்திக் கொள்ளுங்கள். புடவை உடுத்திய பெண்கள், முந்தானையை சரி செய்து, காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கண்ணாடி வழியாக, பின்னால் வரும் வாகனத்தை, ஓட்டுனர் பார்க்க முயற்சிக்கும்போது, புடவை காற்றில் பறந்தால், அவரின் கவனம் திசை திரும்பும்; அதுவே, மிகப்பெரிய பிரச்னை ஆகிவிடும்
* நீங்கள் போய் சேரும் வரை, உங்கள் கவனம் எப்போதும் ஓட்டுனரை நோக்கியே இருக்க வேண்டும். அவரின் சிறு சிறு நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்
* முதல் முறையாக போகும்போது, நமக்கு அதன் வழி தெரியாது. ஆதலால், மொபைல் போனை எடுத்து, 'நான் இந்த இடம் வந்தாகி விட்டது...' என்று, ஓட்டுனரின் காதில் விழும்படி, உறவினரிடம் பேச வேண்டும் அல்லது பேசுவது போல், 'பாவ்லா' காட்ட வேண்டும்
நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தவறான வழியில் சென்றால், பதற்றப்படாமல் நிதானமாக, ஏன் என்று காரணம் கேட்க வேண்டும்
ஓட்டுனர் கூறும் காரணம் (சாலை வேலை அல்லது சாலை மூடல்) சரியாக இருக்கும் என்று, நம்பிக்கை வந்தாலோ அல்லது வராவிட்டாலோ, மறுபடியும் மொபைல் போனை எடுத்து, 'இந்த, 'ரூட்' சரியில்லை; வேறு வழியாக வருகிறேன்...' என்று, உறவினருக்கு பேசுவது போல், 'பாவ்லா' காட்ட வேண்டும்
அதையும் மீறி, தவறான பாதையில் போகிறது என்றால், எந்த காரணம் கொண்டும், பதற்றப்படாமல், சமயோஜித புத்தியை உபயோகித்து, சில வழிமுறைகளை கையாள வேண்டும்
தங்கள் இருக்கையின் கீழ் தான், பெட்ரோல் திறக்க, மூட, 'ரிசர்வ்' செய்ய, 'பைக்'கில் இருப்பது போல், 'நாப்' இருக்கும். அதை அடைத்து விட்டால் போதும். சிறிது துாரம் சென்றவுடன், அதுவே தானாக, 'ஆப்' ஆகி விடும். மீண்டும், 'ஸ்டார்ட்' செய்வதற்குள், நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அது, டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில், ஓட்டுனரின் வலது பக்கத்தில், சிவப்பு கலரில், 'ஆப் சோக்' உள்ளது; அதை இழுத்தால், 'ஆப்' ஆகிவிடும்
சில ஆட்டோக்களில், ஓட்டுனரின் முன் பகுதியில், சிகப்பு கலரில், 'லிவர்' உள்ளது; அதை இழுத்தால், 'ஆப்' ஆகிவிடும். இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால், உங்கள் துப்பட்டாவோ, புடவையின் முந்தானையோ வைத்து, ஓட்டுனரின் கழுத்தில் போட்டு பின்னால் இழுத்தால், நிச்சயமாக, ஆட்டோவை நிறுத்துவது, அவருக்கு பாதுகாப்பு இல்லையெனில், ஆட்டோ நிலைதடுமாறி கவிழும் வாய்ப்புள்ளது
அவ்வாறு, ஆட்டோ கவிழப் போகும் என்று தெரிந்தால், தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம். நடு பகுதியில் இறுக்கமாக பிடித்தபடி இருங்கள். அடி ஒன்றும் படாது; காயங்கள் இல்லாமல் உங்களால் எழ முடியாது
* இறுதியாக, இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானோர், படித்தவர்களாகவும், குடும்ப வறுமை காரணமாகவும், இத்தொழிலுக்கு வருவதால், பெண்களிடம் வரம்பு மீறாமல், கண்ணியமாகவே நடக்கின்றனர்.
மேலும், போலீசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால், மது அருந்தும் பழக்கமுள்ள ஓட்டுனர் கூட, பணி நேரத்தில் அருந்துவதில்லை.
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக, ஒட்டு மொத்த ஓட்டுனர்களும் குற்றவாளிகள் இல்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. உங்களை நம்பி தான், அவர்கள் வாழ்கின்றனர்.
- இவ்வாறு, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார், அந்த வாசகி; பின்பற்றுவீர்கள் தானே!
சென்னை வாசகி, கலா பாலு எழுதிய கடிதம்; அவர் ஒரு ஆங்கில ஆசிரியை! கடிதம் இதோ:
என் மனத்தாங்கலை இங்கு பகிர விரும்புகிறேன்.
தற்காலத்தில் மாணவர்கள், அகராதியை உபயோகிப்பது அறவே நின்று விட்டது போல் தெரிகிறது. இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களுக்கு அகராதி உபயோகிப்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சொல்லித் தருவதில்லை.
ஆங்கில அகராதியை உருவாக்குவதற்கு, டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்ற மேதை, அரும்பாடுபட்டு பல ஆண்டுகள் உழைத்து, மக்களுக்கு ஒரு பொக்கிஷமாக அதை அளித்தார். நாமோ, இன்று, வாசிக்கும் வழக்கத்தையே கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டோம்.
மாணவர்கள், தினமும் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் வரும் கடினமான பொருள் விளங்காத வார்த்தைகளுக்கு, அகராதியின் துணையுடன், கற்றுக்கொள்ள வேண்டும்.
இது, மாணவர்களை அந்தந்த மொழியின் மீதான திறமையை, அதன் உச்சரிப்பு மற்றும் வார்த்தை பயன்பாடுகளை மிகச்சரியாக பிரயோகிக்க உதவும்.
தற்போது பலர், கைபேசியில் வார்த்தைகளை, 'டைப்' செய்து, வார்த்தைகளை சுருக்கி, அதை அப்படியே பிரயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு, before என்பதற்கு B4 என்றும், tomorrow என்பதற்கு, 2morrow என்றும், வார்த்தையை சுருக்கி உபயோகிக்கின்றனர்!
இவ்வாறான எழுத்து தள்ளுபடி தேவையா... என் ஆதங்கம் இதுதான்...
இவ்வாறு வார்த்தை சுருக்கி உபயோகிப்பதால், அடுத்த தலைமுறைக்கு கடிதம் எழுதும் திறமை மற்றும் சரியான வார்த்தை பிரயோகம் அறவே போய் விடும்.
எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், அகராதியின் பயன்பாடுகளை, மாணவ செல்வங்களுக்கு விளக்கி, அவர்களின் மொழி திறமையை மேம்பட செய்து, மொழியின் வளர்ச்சிக்கு துணை புரிந்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
- இப்படி எழுதியுள்ளார்!
இனிமேலாவது, ஆசிரியர்களும், பெற்றோரும் இதை பின்பற்றுவரா!

