
எஸ்.விஜயகுமார், சென்னை: தமிழகத்தில், காங்கிரஸ் தலை நிமிர ஏதேனும் வாய்ப்பு உண்டா?
இந்த மாதத்தில், 50 வயதை அடைந்த ராகுல் அல்லது அவரது தங்கை பிரியங்கா, தமிழக தலைவர் பொறுப்பேற்று, தமிழகத்திலேயே தங்கி, கட்சிப் பணியாற்றினால், ஒருவேளை தலை நிமிர வாய்ப்பு கிடைக்கலாம்! இதெல்லாம் நடக்கக் கூடியதா?
* ஜி. கோபாலகிருஷ்ணன், திருவாரூர்: கேரள முதல்வருக்கு, சொந்த பெயரில் கார் கூட கிடையாதாமே...
ஏன்... ஏமாற்றாத மனைவி, மகன், மகள் இல்லையா... அவர்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார் போலும்... இருந்து விட்டுப் போகட்டுமே... வெறும் கார் தானே!
கே.காளீஸ்வரி, நீர்விளங்குளம், புதுக்கோட்டை: பேசப்படும் பெண் எழுத்தாளராய் வலம் வர ஆசைப்படுகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
சினிமாவின் முன்னாள் கதாநாயகி, கஸ்துாரியிடம் சில மாதங்கள், 'டிரெயினிங்' எடுத்துக் கொள்ளுங்கள்... உங்கள் ஆசை நிறைவேறும்!
ஆர். சூர்யா, எஸ்.புதுார், தஞ்சை: 'கொரோனா'வால் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு, வேலை இல்லாமல், அரசு சம்பளம் வழங்குவது சரிதானா?
ஆசிரியர்களா, 'லீவு' போட்டுள்ளனர்; அவர்கள் என்ன வேலைக்கு வரமாட்டோம் என்றா கூறினர்; அரசுதானே, 'லீவு' கொடுத்துள்ளது! அதனால், சம்பளம் வழங்குவது, நுாற்றுக்கு நுாறு சரிதான்!
* என். சொக்கலிங்கம், விருதுநகர்: உலகில் குற்றவாளி, மிகக் கொடிய குற்றவாளி என, எவர் எவரைப் பிரிக்கின்றனர்?
'பிக் - பாக்கெட்' செயின் பறிப்பு, 'மொபைல் போன்' திருட்டு, பைக் லபக் போன்றவற்றை செய்பவர்களை, குற்றவாளிகள் என்றும், நம் நாட்டு வைர வியாபாரி, நிரவ் மோடி, 14 ஆயிரம் கோடி ரூபாயும், 'சரக்கு' தயாரிப்பாளர், விஜய் மல்லைய்யா, 9,000 கோடியும், வங்கிகளிடம் அடித்து, நாடு தப்பி விட்டனரே... இவர்கள், மிகப்பெரிய குற்றவாளிகள்!
ஆனால், இவர்களை இதிலிருந்து காப்பாற்ற, வக்கீல்களும், பணமும் இருக்கின்றனவே!
மை. சத்தியபாரதி, துாத்துக்குடி: சில பிள்ளைகள் பெற்றோரை பார்த்து, 'எனக்கு என்ன செய்தீர்கள்' என, கேட்கின்றனரே... என்ன பதில் சொல்வது?
'உன்னை உலகிற்கு கொண்டு வந்ததே, நாங்கள் தான். 10 மாதம் கஷ்டப்பட்டு சுமந்து, பால் கொடுத்து வளர்த்தவள் நான் தான்... உன்னுடைய நம்பர் 1, நம்பர் 2வை துடைத்து விட்டது நான்...' என, தாயும், 'பள்ளிக்கூடம் அழைத்து போய் விட்டது முதல், உனக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததும் நான் தான்...' என, தந்தையும் சொல்லலாம்.

