
வித்யாவை வழியனுப்பி வைத்து, ஒரு வாரம் ஆனது. ஆனாலும், திருமண சுவடுகள் அந்த இல்லத்தில் இன்னும் ஆட்சி செய்தபடியே இருக்கின்றன.
அப்பாவுக்கு வேதனையாக இருந்தது. அவரை பொறுத்தவரை, வித்யா இல்லாத வீடு, வீடாக இல்லை.
ஓர் ஆணுக்கு தரவேண்டிய சுதந்திரத்துடன், நிறைய சலுகைகளும் தந்து, வித்யாவை வளர்த்தார். சம வயது சினேகிதரிடம் பேசிக் கொள்கிறார் போல், பல செய்திகளை மனம் விட்டு பேசுவார், விவாதிப்பார்.
அப்போதெல்லாம் அம்மா குறுக்கிட வேண்டியிருக்கும்.
'நல்லாதான் இருக்கிறது, பெண்ணை வளர்க்கிற லட்சணம். நாளைக்கே ஒரு வீட்டுக்கு விளக்கேத்த போகணும். எந்த வேலைக்கும் துப்பில்லாமல் வளர்த்திருக்கீங்க. சுயமா ஒரு ரசம் வைக்க தெரியுமா, அப்பளமாவது சுடுவாளா... இவள் போகிற இடத்தில், என் தலை தான் உருளும். உங்களுக்கென்ன...' என்று, மகளை அடக்குவதாக நினைத்து, அப்பாவை சாடுவாள்.
மேலும், 'அடேயப்பா... சாதாரண விஷயத்துக்கே, இந்த கத்து கத்துறாளே... இப்படிப்பட்டவள், ஒரு பிரச்னைன்னு வந்தால், என்ன பாடு படுத்துவாள். மாமியார், மாமனார் எல்லாம் சும்மா இருப்பாங்களா... கணவன், நாலு அறை விட்டு, 'போடி, உன் அப்பன் வீட்டுக்கு'ன்னு, சொல்லிட்டா என்ன செய்வது...' என, அஞ்சுவாள்.
'நீயும், உன் விபரீத புத்தியும். உனக்கு மட்டும் நல்ல விதமாகவே யோசிக்க தெரியாதா... போடி, போய் தேநீர் போட்டு எடுத்து வா...' என, விட்ட இடத்திலிருந்து விவாதத்தை துவங்குவார், அப்பா. வித்யாவும் மறக்காமல் தொடருவாள்...
பெருமூச்சு விட்டார், அப்பா.
வீடு முழுவதும் வெறுமை கவிழ்ந்திருப்பதாக ஓர் உணர்வு, அவரை மிரட்டுகிறது. வித்யாவை இப்போதே பார்த்தாக வேண்டும் என்கிற எண்ணம், நொடிக்கு நொடி வலிமை பெற்றது.
'அழகு தான்... யாராவது சிரிக்க போறாங்க... சம்பந்தி வீட்டிலே ஒரு மாதிரி நினைச்சுட மாட்டாங்களா... கொண்டு விட்டு, 10 நாள் கூட ஆகலே... அதுக்குள்ள நாம அங்கே போவதாவது...' என, எதிர்ப்பு தெரிவித்தாள், அம்மா.
'பத்து நாள் ஆகலேங்கிற... எனக்கு, 10 யுகமாய் தெரியுது... நீ ஒரு தாயே இல்லை... நீ, வராட்டி இழுத்து போர்த்தி துாங்கு; நான் போறேன். யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. என் குழந்தையின் அருமை எனக்கு தான் தெரியும்...' என, ஓங்கி முழங்கினார், அப்பா.
'வித்யாவுக்கு என்னென்ன பிடிக்கும்...' என, மனம் பட்டியல் போட்டது.
பால்கோவா, ஓமப்பொடி, அவல், சப்போட்டா, ரோஜா...
திருமணமாகி, புகுந்த வீடு சென்ற மகளை பார்க்க, கணவன் - மனைவி இருவரும் புறப்பட்டு விட்டனர்.
அம்மாவுக்கு மட்டும் நெஞ்சுக்குள் பயம்.
'வித்யா என்னவோ, 'மனையியல்' படித்திருந்தாள். ஆனால், நடைமுறைகள் தெரியாதே, செய்முறை பயிற்சி இல்லையே. ஏட்டுச் சுரைக்காய் எதற்கு உதவும்?
'உப்பை அள்ளிக் கொட்டி அல்லது அறவே உப்பில்லாமல், மிளகாய் பொடியை அளவுக்கு அதிகமாய் கலந்து, புளியை மிகுதியாய் கரைத்து... இனிப்பு செய்கிறேன் என்று பொருட்களை தீய்த்து...' - இந்த அடிப்படையில், மகளை பற்றிய சிந்தனைகள், அம்மா மனதில் எழுந்து சங்கடப்படுத்தின.
'வீட்டை பெருக்கி துடைப்பது, கோலம் போடுவது, தண்ணீர் பிடிப்பது, துணி துவைப்பது என்று, வித்யா, எப்படி எல்லாம் சிரமப்படுகிறாளோ... பழக்கம் இல்லாததால், உடம்பு நோகுமோ... சமைக்கிறபோது, கையை, காலை சுட்டுக் கொண்டிருப்பாளோ...'- இப்படியாக அவதிப்படுகிறார், அப்பா. வாய்விட்டு சொல்லி, அம்மாவின் கிண்டலுக்கு இலக்காகிறார்.
''வித்யா... யார் வந்திருக்காங்க பார்,'' சந்தோஷமாக வரவேற்கிறாள், சம்பந்தியம்மாள்.
''வாங்கப்பா... வாங்கம்மா...''
பிரம்மிப்பாக பெண்ணை பார்த்தார், அப்பா.
அவள், மஞ்சளும், பூவுமாக புதுமையாக இருக்கிறாள். முகத்தில் ஒரு லட்சுமிகரம் தெரிகிறது.
''இருங்கப்பா, காபி எடுத்து வரேன்.''
''நீ, இரும்மா... நான் காபி எடுத்து வரேன்,'' என, மருமகளை அமர்த்தினாள், மாமியார்.
''இல்லைங்க அத்தை, நான்...''
''பரவாயில்லம்மா... ஆசையாக இவ்வளவு துாரம் வந்திருக்காங்க... நீ, அப்பா - அம்மாவுடன் பேசிட்டு இரு... நான் காபி போட்டு எடுத்து வரேன்,'' என்றார், மாமியார்.
''எப்படிப்பா இருக்கீங்க...'' புன்னகையுடன் விசாரித்தாள், வித்யா.
''ஏதோ இருக்கேம்மா...'' கலங்கினார், அப்பா.
''அப்பா... என்ன இது, அம்மாவை பாருங்க... இவங்க மாதிரி எதார்த்த உலகை புரிஞ்சுக்கணும்; ஏத்துக்கணும்.''
அதற்குள் காபியுடன் வந்தாள், சம்பந்தியம்மா.
''சும்மா சொல்லக் கூடாது. வித்யா மாதிரி ஒரு மருமகள் வர, நான் ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்.'' கிண்டலோ என, அம்மாவை போலவே, அப்பாவுக்கும் சந்தேகம்.
குழப்பமாக, வித்யாவின் மாமியாரை பார்த்தனர்.
''வெறுமையாய் இருந்த வீட்டில், வெளிச்சமாய் வளைய வருகிறாள்... எனக்கு ஒரு வேலையும் கிடையாது... மிரட்டி, உருட்டி, நானே சில வேலைகளை வலிய செய்ய வேண்டியிருக்குது... என்னமோ ஒண்ணுமே தெரியாதுன்னீங்களே... என்னமாய் ருசிக்க ருசிக்க சமைக்கிறாள் தெரியுமா...''
''வித்யா... நீ, நீயா?''
அப்பாவின் ஏக்கம், துயரம், வலி யாவற்றுக்கும், சம்பந்தியம்மாவின் சொற்கள் மருந்தாகின.
''என்னால் நம்பவே முடியல, வித்யா,'' என்றாள், அம்மா.
''ஒரு நல்ல பெண், சலுகைங்க இருக்கும்போது அனுபவிக்கிறா... பொறுப்புங்க வரும் சமயம், இயல்பா ஏத்துக்கறா... இதிலே ஆச்சரியம் என்னம்மா,'' என்கிறார், சம்பந்தியம்மா.
இந்த முறை விடை பெறும்போது, அப்பா கலங்கவில்லை.
வீட்டுக்கு வந்த பின், வித்யாவின் பிரிவு உறுத்தினாலும், முன்போல் உணர்ச்சிவசப்படவில்லை.
'அம்மாவை பாருங்க... இவங்க மாதிரி எதார்த்த உலகை புரிஞ்சுக்கணும்; ஏத்துக்கணும்...' என்கிற வித்யாவின் குரல், இனி, அவள் உலகம் வேறு என்பதை உணர்த்தியது.
உள்ளத்தில் ஊமை வலி இருந்தாலும், அதையும் மீறிய ஒரு நிறைவு, அவர் நெஞ்சுக்கு சுகம் தந்தது.
வாசுகி பத்ரிநாராயணன்

