தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'லாங்குவேஜஸ் ஸ்போக்கன் அட் ஹோம் அண்ட் எபிலிட்டி டு ஸ்பீக் இங்கிலீஷ் பார் யுனைட்டட் ஸ்டேட்ஸ், ரீஜன்ஸ் அண்ட் ஸ்டேட்ஸ் 1990'—என்னென்ன மொழிகள் அமெரிக்காவில் பேசப்படுகின்றன? மற்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறமை எப்படி உள்ளது என்பது குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது; ஆங்கிலத்தில்தான்! உ.ஆ., உதவியுடன் அதைப் படித்த போது, கிடைத்த தகவல்கள் இவை.

ஆங்கிலம் தவிர, மற்ற ஐம்பது மொழிகள் குறித்து ஆய்வு நடந்துள்ளது. இந்த, ஐம்பது மொழி பேசுபவர் களில், 14வது இடத்தில் இந்தி உள்ளதாக ஆய்வு கூறுகிறது. குஜராத்தி மொழி, 26வது இடத்தையும், பஞ்சாபி, 39வது இடத்தையும், பெங்காலி, 44வது இடத்தையும், மலையாளம், 48வது இடத்தையும் பிடித்துள்ளன. இது, அமெரிக்க நாட்டின் ஒட்டு மொத்த கணக்கு. இக்கணக்கில் தமிழ், இடம்பெறவே இல்லை. மாநிலவாரியாக எடுக்கப்பட்ட கணக்குகளில், தமிழ் இடம் பெற்றுள்ளது.

முதல் இடத்தை பிடிக்கும் மொழி ஸ்பானிஷ்; அடுத்து பிரெஞ்ச். இதன் பின்னே வரிசைக் கிரமமாக வரும் மொழிகள்: ஜெர்மன், இத்தாலியன், சைனீஸ், போலீஷ், கொரியன், வியட்நாமீஸ், போர்த்துகீஸ், ஜப்பனீஸ், கிரீக் மற்றும் அரபிக்!

பத்து ஆண்டுகளில் மலையாளம் பேசுபவர்களின் அளவு, அமெரிக்காவில், 198.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, அவ்வளவு மலையாளிகள் அமெரிக்கா சென்று குடியேறி உள்ளனர் எனப் பொருள். இதே போல பெங்காலிகள், 189 சதவீதம், குஜராத்தியினர், 178 சதவீதம், பஞ்சாபியர், 159 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

மொத்தத்தில், பத்து ஆண்டுகளில் இந்தியர் களின் ஜனத்தொகை, அமெரிக்காவில், 125 சதவீதம் அதிகரித்துள்ளது!

***

நண்பர்களுடன் சென்னை கடற்கரை மீட்டிங்... மசாலா பொரியை ரொம்ப சுவாரசியமாக அரைத்துக் கொண்டிருந்த பெரியசாமி அண்ணாச்சி, 'பூனைக்கி எத்தனை கால்?' என சம்பந்தா, சம்பந்தம் இல்லாமல், திடீரெனக் கேட்டார்.

'நாலு கால்!' என்றார் அன்வர் பாய்.

'நோ... நோ... எயிட் லெக்ஸ் - எட்டு கால்...' என்றார்.

'என்னடா இது... லென்ஸ் மாமா அருகே நிற்பதாலேயே, அண்ணாச்சி, 'மப்பாகி'ட்டாரா?' என நினைத்து, அவரையே பார்த்தேன்.

'புரியலே... பூவில் இருக்கும் தேனை நக்கி குடிக்கிற, 'பூ நக்கி'யாகிய வண்டுக்கு எட்டு கால்... எம் பேரன் சொன்னாமுல்லா இத...' என விளக்கம் சொல்லி, அவரே சிரித்துக் கொண்டார்.

கடுப்பாகிப் போன அன்வர் பாய், 'பொறாவுக்கு எத்தினி கால்?'' என அண்ணாச்சியிடம் கேட்டார்.

'வே... பாயி... எங்கிட்டயா புதிரு போடுதீரு... புதிரு... புறாவுக்கு ரெண்டு காலுவே... ரெண்டு காலு...' எனக் கூறி, சரியான விடையைச் சொல்லி விட்ட நினைப்பில், தொப்பையைத் தள்ளிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நின்றார்.

'மாட்டுனீங்க அண்ணாச்சி... பொறாவுக்கு ஒன்பது கால்... எப்படி தெரியுமா? ஒன்பது கால் (1/4) இரண்டே கால்' எனத் தன் பங்குக்கு, 'கடி'த்தார் அன்வர் பாய்.

'பெரிசுகளே... ரெண்டு பேரும் மாத்தி, மாத்தி ரம்பம் போடுறீங்க... தாங்க முடியலே... அப்பாலே, நா இங்கே வர மாட்டேன்... எடத்த மாத்திப் புடுவேன்...' என்றேன்.

'கோவப்படாதேப்பா... நாங்க ரம்பம் போடல... பிளேடு தான் போடுதோம்...' என்றார் அண்ணாச்சி!

'வாலிபப் பசங்க அறுத்தா, அது ரம்பம்; வயசானவன் அறுத்தா, அது பிளேடு... காரணம், ரம்பத்துக்கு பல் இருக்கு; பிளேடுக்கு கெடயாதுல்லா...' என்று, வியாக்கியானம் வேறு அளித்தார்.

தலையைப் பிடித்துக் கொண்டு, குந்த வைத்து சாலையில் உட்கார்ந்து கொண்டேன்.

'அண்ணாச்சி... வெயில் கொளுத்தறது... இதுல உம்ம, '...வு' வேறா?' என்று சலித்துக் கொண்ட லென்ஸ் மாமா, 'அது சரி... திரும்பவும் பூன கதக்கே வர்றேன்... பூனைக்கு, 'நைட்'ல கூட சரியா கண் தெரியுதே... ஓசப்படுத்தாம, வீட்டுக்குள்ளே புகுந்து, உருட்டல், பிரட்டல் பண்ணிட்டு போயிடறது... தினமும் ராத்திரி ரெண்டு மணிக்கி, எங்கிருந்தோ ஒரு பூனை எங்காத்துக்குள்ளே புகுந்து, ரகளை பண்ணீட்டுப் போயிடறது... இது எப்படின்னு தெரியலே...' என்று முடித்தார்.

அடுத்த நாள், ஆபீசில், பூனைகளைப் பற்றிய புத்தகத்தை எடுத்துப் படித்தேன்.

அதில் —

இருட்டில் பூனைக்கு கண் தெரிவதன் காரணம், அதன் கண்ணின் அமைப்பு, அதிக வெளிச்சத்தில் குறுக்கிக் கொள்ளவும். குறைந்த வெளிச்சத்தில் விரிவுப்படுத்திக் கொள்ளும் விதத்திலும், அதன் விழி லென்ஸ் அமைந்திருக்கிறது. பாதம், 'மெத்' என்று இருப்பதால், சப்தமில்லாமல் நடக்கிறது. தேவைப்படும் போது நீட்டவும், மற்ற நேரங்களில் உள் இழுத்துக் கொள்ளவும் கூடிய, 18 கூரிய நகங்களும் இருக்கின்றன...

— இப்படிக் கூறப்பட்டு இருந்தது.

மாமாவிடம் விஷயத்தை சொல்லி, ஜன்னல் கதவுகளை மூடி வைக்கச் சொன்னேன்!

***

அரேபிய நாட்டிற்கு முல்லா — நமக்கு தெனாலிராமன் — துருக்கி நாட்டிற்கு ஹோஜா. அவரது கதைகள் ரொம்ப பிரபலம். ஹோஜா புத்தகம் ஒன்றில் படித்து ரசித்த குட்டிக் கதைகள்...

துருக்கி நாட்டில் படித்தவர்கள் மட்டுமே அந்நாளில் பெரிய தலைப்பாகை அணிந்திருப்பர்.

ஒருநாள், 'இந்தக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று, தயவு செய்து படித்துச் சொல்லுங்கள்!' என்றான் ஒருவன்.

'இதில் எழுதியிருப்பது விளங்கவே இல்லை!' என்று சொல்லி, கடிதத்தை திருப்பிக் கொடுத்தார் ஹோஜா.

'தலையில் பெரிய தலைப்பாகை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... இந்தக் கடிதத்தை படிக்க முடியலியே...' என்றான் ஏளனமாக.

உடனே, தம் தலைப்பாகையை அந்த மனிதன் தலையில் வைத்து விட்டு, 'அப்பனே... நீ தான் இப்போது தலைப்பாகை வைத்துக் கொண்டிருக்கிறாய்... உன்னால் படிக்க முடிகிறதா என்று பார்!' என்று கூறிவிட்டு, போய் கொண்டே

இருந்தார் ஹோஜா.

***

ஒருநாள் தன் வீட்டு மாடியில் உட்கார்ந்திருந்தார் ஹோஜா. அப்போது யாரோ வாயிற் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

'யார் அது?' என்று கேட்டார் ஹோஜா.

'கதவைத் திறங்கள், சொல்கிறேன்...' என்று பதில் வந்தது.

மாடியில் இருந்து சிரமத்துடன் கீழே இறங்கி வந்து, கதவை திறந்தார் ஹோஜா.

'ஐயா... மிகவும் பசியாக இருக்கிறது. பிச்சை போடுங்கள்!' என்று சொன்னான்.

'என்னுடன் வா...' என்று, அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார் ஹோஜா. மேலே போன பிறகு, தம் நாற்காலியில் அமர்ந்தபடி, 'பிச்சை போட முடியாது... போய் வா...' என்றார்.

'இந்த பதிலை கேட்கவா என்னை மாடி ஏறி வரச் சொன்னீர்கள்!' என்று பிச்சைக்காரன் முணுமுணுத்தான்.

'நீ மட்டும் பிச்சை வேண்டும் என்பதைச் சொல்ல, என்னை மாடியில் இருந்து கீழே அழைக்கவில்லையா?' என்றார் ஹோஜா.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us