
கே
குணசேகர் என்பது அவரது பெயர்;
நல்ல நண்பர்! மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயதில் பெரியவர் என்பதால், அவரது பெயருடன், 'ஜி' சேர்த்து, குணாஜி என்று அழைப்போம். அவர், தன் அனுபவங்களை அவ்வப்போது எங்களுடன் பகிர்ந்து கொள்வார்; சிரிக்க, சிரிக்க பேசுவதில் வல்லவர். அவற்றிலிருந்து சில:
குணாஜியின் சொந்தக்காரர் ஒருவர் இறந்து விட, பலரும் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அதில் ஒரு பெண்மணி நீண்ட நேரம் இறந்தவரின் உடல் அருகிலேயே பெரிதாக அழுதபடி நின்றிருக்கிறார். இறந்தவரின் மனைவிக்கோ சந்தேகம்.
தன் மகனை கூப்பிட்டு, 'யாருடா அது, என்னை விட அதிகமாக அழுகிறாளே...' என்று வினவினார். விசாரித்ததில், அப்பெண்மணி, இறந்தவரின் கிராமத்தில், அவருடன் பள்ளியில் படிக்கும்போது, 'மிகவும் சினேகமான தோழி' என்று தெரிந்ததாம்.
இளம் வயதில், நண்பர்களுடன், குட்டி சுவரில் அமர்ந்து அரட்டை அடிப்பது, குணாஜியின் வழக்கம். அந்த பகுதிக்கு, புதிதாக ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பம் குடியேறியது. அவர்கள் வீட்டு இளம்பெண், காலை - மாலையில், ஒரு உயர் ரக நாயுடன், நடை பயிற்சி செல்வார். யாரையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். நண்பர்களுக்குள் பந்தயம், யார் முதலில் அப்பெண்ணிடம் பேசுவது என்று.
அடுத்த நாள் காலை, குணாஜி, ஒரு தெரு நாயை பிடித்து, கயிறை கட்டி இழுத்தபடி, அப்பெண்ணிடம் சென்று, 'ஹாய்' என கூற, அந்த உயர் ரக நாய், தெரு நாயை துரத்த, இவர்களும் அவற்றுடன் ஓட, அப்பெண், தன் நாயை இழுத்துப் பிடித்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.
இதனால், இருவரும் நண்பர்களாகி, தினமும் ஒன்றாக நடை பயிற்சி செல்ல, மற்ற இளவட்டங்கள் எல்லாரும் காதில் புகையுடன் பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
குணாஜியின் அலுவலகத்தில், இவர் துறை சார்ந்த தேர்வு. இவர் பின் அமர்ந்திருந்த பெண் அதிகாரி, இவரை விட மேதாவி. தேர்வில், ஒரு கடிதம் எழுத வேண்டிய கேள்விக்கு, குணாஜி, 'குணா, த/பெ.க.கோவிந்தராஜ்' என, எழுத, அப்பெண்ணும், அப்படியே காப்பியடிக்க, இருவரும் மாட்டிக் கொண்டனர்.
அடுத்த தேர்வு, கணினி பாடத்தில். அப்போது, குணாஜிக்கு வயது, 50க்கு மேல். எங்கு சென்று கணினி கற்பது...
நேராக கடைக்கு சென்றார். 20 கிலோ உயர் ரக அரிசியை வாங்கி, அவரது விடைத்தாளை திருத்தப்போகும் அதிகாரியிடம் சென்று, 'மேடம்... இது, மிக உயர் தர அரிசி. எங்கள் வயலில் விளைந்தது. உங்களுக்காக வரவழைத்தேன்...' என கொடுக்க, அந்த தேர்வில் இவருக்கு தான் முதலிடம்.
ஒருமுறை, தன் நண்பரின் காரில், சேலத்திலிருந்து வந்திருக்கிறார், குணாஜி. நண்பரின் இல்ல, 'கார் பார்க்கிங்'கில், 'டிக்கி'யை திறந்து, தன் பெட்டியை எடுக்க குனிந்திருக்கிறார். அந்நேரம் அவ்வீட்டின் செல்ல நாய், குணாஜியின் பின்புறம் இரண்டு முன்னங்கால்களை பதித்து, ஆக்ரோஷமாக குலைத்திருக்கிறது.
பயந்து போன, குணாஜியிடம், 'அப்படியே நில்லுங்கள் ஜி, இல்லையென்றால் பிடுங்கிவிடும்...' என்று, நண்பர் கூறினார். பாதுகாவலர் வந்து, நாயை அழைத்துச் செல்லும் வரையில், குனிந்தவாரே நின்றிருந்த குணாஜி, பின்னர் ஓட்டம் எடுத்திருக்கிறார்.
- இவ்வாறு, பல சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் வல்லவர், குணசேகர் என்ற குணாஜி!
ப
மதுரை வானொலி நிலையத்தில், இயக்குனர் ஆக பணியாற்றி, ஓய்வு பெற்றவரும், எழுத்தாளருமான, இளசை சுந்தரம் எழுதிய, 'வாங்க,சிரிச்சுட்டுப் போகலாம்' என்ற புத்தகத்தை, 'திண்ணை' நாராயணன் கொடுத்தார். புத்தகம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் தான்.
அதிலிருந்து ஒரு பகுதி:
இந்த காலத்து பிள்ளைங்க, பெரியவர்களை விட வேகமா இருக்காங்க. அவங்க வேகத்துக்கு ஈடு கொடுக்காம போனா விபரீதமும் ஆயிடுது; நிறைய வேடிக்கையும் நடக்குது. இப்போ உள்ள பையன்களோட சிந்தனை ரொம்பவும் புதுமையா இருக்கு.
வகுப்பிலே, ஒற்றுமையை பற்றி, ஆசிரியர் பாடம் நடத்திட்டு இருந்தார்.
'நாம், நமக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வாழணும். 'நான்'னு சொல்லிப் பாருங்க, உதடு ஒட்டாது. 'நாம்'ன்னு சொல்லிப் பாருங்க, உதடுகள் ஒட்டும்...' என்றார்.
உடனே, ஒரு பையன் எழுந்து, 'நாம்ன்னு சொல்லும்போது மட்டுமில்லை, 'பாம்'ன்னு சொல்லும்போதும் உதடு ஒட்டுமே...' என்றான்; ஆடிப்போயிட்டார், ஆசிரியர்.
* சரித்திர வகுப்பில், 'இந்த உலகப் படத்தில், இந்தியா எங்கே இருக்கு காட்டுன்னார்...' ஆசிரியர்.
அவன், 'மேப்'கிட்டே வந்து, சோகமா தலை குனிஞ்சுகிட்டு நின்னான்.
'என்னடா... சீக்கிரம் காட்டு...' என்றார், ஆசிரியர்.
'என் தாய் நாட்டை காட்டிக் கொடுக்க, நான் விரும்பவில்லை...' என்றான்.
'அவனுக்கு தெரியாததை, எப்படி தனக்கு இருக்கிற தேச பக்தியா மாத்துறான் பாருங்க...' என்றார், ஆசிரியர்.
இதே கேள்வியை இன்னொரு பையன்கிட்ட கேட்டார், ஆசிரியர்.
அதுக்கு அவன், 'சார்... ஒரு சின்ன உதவி செய்யுங்க...' என்றான்.
'என்னடா...' என்றார்.
'இலங்கை எங்கே இருக்குன்னு காட்டுங்களேன். அதுக்கு மேல
தான் இந்தியா இருக்கும்...' என்றான்.
'இதையாவது அவன் தெரிஞ்சு வச்சிருக்கானே; அதுக்காக சந்தோஷப்படணும்...' என்றார்.
* அறிவியல் வகுப்பில், மெழுகுவர்த்தியை பொருத்தி வச்சுட்டு, ரொம்ப சிரத்தையா, 'இந்த மெழுகுவர்த்திக்கு ஒளி எங்கே இருந்து வந்ததுன்னு, சொல்ல முடியுமா...' என்றார், ஆசிரியர்.
ஒரு பையன் வேகமா எழுந்து வந்து, அதை ஊதி அணைச்சுட்டு, 'சார்... இப்போ, இந்த ஒளி எங்கே போச்சுன்னு சொல்லுங்க. ஒளி எங்கேருந்து வந்ததுன்னு நான் சொல்றேன்...' எனறான்.
தலையை சொறிந்தார், ஆசிரியர்.
* கட்டுரை எழுதுறதிலேயும் நம்ம பையன்க சாமர்த்தியசாலிகள் தான்.
'நான் அமைச்சரானால்'ன்னு ஒரு தலைப்பு கொடுத்து, உடனே, கட்டுரை எழுத சொன்னார், ஆசிரியர்.
எல்லா பையன்களும் வேக வேகமா எழுதினாங்க. ஒரு பையன் மட்டும் பேனா முனையை முகவாயிலே தட்டிக்கிட்டு யோசனை பண்ணிகிட்டிருந்தான்.
'ஏண்டா, நீ இன்னும் எழுத ஆரம்பிக்கலையா...'ன்னு கேட்டார், ஆசிரியர்.
'சார்... மரியாதையா பேசுங்க. நான் இப்போ அமைச்சராகிட்டு இருக்கேன்...' என்றான்.
'அப்படியா... சரி, அமைச்சர் அவர்களே, நீங்கள் கட்டுரை எழுத ஆரம்பிக்கலாமே...' என்றார்.
'அமைச்சரான பிறகு, நான் எப்படி எழுதுவேன். என், பி.ஏ.,வை வரச்சொல்லி இருக்கிறேன். அவர் வந்து எழுதுவார்...' என்று, ஒரு போடு போட்டான்.
- இது எப்படி இருக்கிறது!

