sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (9)

/

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (9)

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (9)

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (9)


PUBLISHED ON : ஜூலை 05, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 05, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலாட்டா கல்யாணம் படத்திற்கு பிறகு, எனக்கு கொஞ்சம் பெயரும், புகழும் வந்தது போல, எதிர்பாராத வம்பு ஒன்றும் வந்தது.

திருவல்லிக்கேணி குப்பத்தை சேர்ந்த, துரைக்கண்ணு என்பவன், நடு ரோட்டில் மறித்து, 'நீதான் கோபுவா... நீ, ஸ்ரீதரோட சோத்துக்கையாமே... அவராண்டை சொல்லி, என்னை சினிமாவிலே இஸ்து விடேன்...' என்றான்.

அவன், இன்ஸ்பெக்டரையே வெட்டினவன் என்ற, பூர்வாசிரம கதை எல்லாம் கேள்விப்பட்டதால், 'பார்க்கலாம்...' என்று சொல்லி, பயத்துடன் சமாளித்தேன்.

கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வழிமறித்து, 'நான் குப்பத்துல ஒரு நாடகம் போடறேன்... தலைமைக்கி, சிவாஜியை இட்டுக்கினு வர்றியா...' என்றான்.

அவர் எவ்வளவு பெரிய ஆள். 'ஈசி'யா கேட்டுட்டான்... என்ன செய்யிறது, அவன், 'லெவல்' அவ்வளவு தான் என்று முடிவு செய்து, 'சிவாஜி, வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார், வரமாட்டார்...' என்றேன்.

'அப்ப, உன் ஸ்ரீதரு இருக்காருல்ல அவரை வரச்சொல்லு...'

'அவர், நாடகத்திற்கு எல்லாம் தலைமை தாங்குறது இல்ல...'

'அப்ப ஒண்ணு செய்... நீ, நம்ம பேட்டை ஆளா இருக்கே, உம் பேரச் சொன்னா, நாலு பேருக்கு தெரியுது... அதனால, நீயே தலைமை தாங்கிடு...' என்றான்.

'சரி... நாடகத்துக்கு தலைப்பு என்ன...' என்று கேட்க, 'வராவிட்டால் கொலை' என்று, துரைக்கண்ணு கூறவும், பயத்தில் குரல் நடுங்கியது.

'நாடகம் எத்தனை மணிக்கு...' என்று, ஈனசுவரத்தில் கேட்டேன்.

'கரீகட்டா, 6:00 மணிக்கு...' என்றான்.

குறிப்பிட்ட நாளில், 5:00 மணிக்கே, சேரில் போய் உட்கார்ந்து விட்டேன்.

ஒரு மரியாதைக்காக, துரைக்கண்ணுவின் நடிப்பை புகழ்ந்து வைக்க, 'பாத்தியா... நீயே பாராட்டிட்டே, அப்ப எப்ப நமக்கு சினிமா வாய்ப்பு...' என்று கேட்டு, மறுபடி முருங்கை மரத்தில் ஏறியது, வேதாளம்.

இயக்குனர் தாதா மிராசியிடம் கெஞ்சி கேட்டு, ஒரு படத்தில், வில்லனின் தோழனாக, துரைக்கண்ணுவை நடிக்க வைத்தேன்.

'என் குருநாதன், கோபு வாழ்க...' என்று, மாட வீதிகளில் கருப்பு தார் வைத்து எழுத, அல்லோலகல்லோலப்பட்டது, திருவல்லிக்கேணி.

ஆனால், என்ன ஒரு துரதிர்ஷ்டம்... நீளம் அதிகமாகி விட்டதென்று, படத்தின் இயக்குனர், நிறைய காட்சிகளை வெட்டி விட்டார். அவர் வெட்டிய காட்சிகளில், துரைக்கண்ணு நடித்ததும் ஒன்று.

விஷயம் தெரிந்ததும், வயிற்றைக் கலக்கியது. இதற்கிடையே அந்த படம் வெளியாவதாக விளம்பரம் வர, கதிகலங்கிப் போனேன்.

வெளியாவதற்கு முதல் நாள், ரொம்ப குஷாலாக வந்த, துரைக்கண்ணு, 'நாளைக்கு, நம் குப்பத்திற்கே டிக்கெட் எடுத்துருக்கேன். மொத்தம், 200 டிக்கெட்... படத்துல நான் வரும்போது, நம் ரசிகனுங்க, பூத்துாவி, பிகிலடிக்கிறாங்க...' என, செய்துள்ள ஏற்பாடுகளை விலாவாரியாக சொல்லிச் சென்றான்.

மறுநாள் தியேட்டரில் படம் பார்க்கப்போகும், துரைக்கண்ணு, படத்தில், தான் இல்லாததை உணர்ந்ததும், நேரே அருவாளை துாக்கி, நம்மை தான் தேடி வருவான். ஆகவே, உடனடியாக ஊரை விட்டு சில நாள் ஒதுங்கி இருப்பது என, முடிவு செய்து, மனைவியிடம், 'உடனே புறப்படு... கொடைக்கானலுக்கு போறோம்...' என்றேன்.

அவளோ, 'சமய சந்தர்ப்பம் தெரியாமல், திருமணம் ஆன நாளிலிருந்து இப்படி ஒரு ஊரின் பெயரையே கூடச் சொன்னது இல்லையே... இன்னிக்கு என்ன மனுஷனுக்கு திடீர்னு பாசம்...' என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

'விளக்கம் சொல்ல நேரம் இல்லை...' என்று சொல்லி, அவளை கிளப்பி, கொடைக்கானல் சென்றேன்.

இப்ப அனேகமா, துரைக்கண்ணுவின் கோபம் தணிந்திருக்கும் என்று எண்ணி, நான்கு நாட்களுக்கு பின், ஊருக்கு திரும்பினேன். 10 நாட்களாகியும் வீட்டுப் பக்கம் வரவில்லை.

'துரைக்கண்ணு, ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை...' என்ற கவலை வந்து விட்டது.

ஒரு நாள், திடீரென்று வீட்டிற்கு வந்தான்.

அவன் பேசுவதற்குள் முந்திக் கொண்டு, 'மன்னிச்சுடு, துரைக்கண்ணு... இயக்குனர் தான் படத்தின் நீளம் அதிகம்ன்னு, உன் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டிட்டார்...' என்றேன்.

'சரி விடு, கோபு... இயக்குனருக்கு வாக்கு சுத்தம் இல்ல... என்ன, அன்னிக்கு தியேட்டர்ல தான், நம் ஜனங்க மத்தியிலே ரொம்ப பேஜாராப்பூடுச்சு... ஆனா, அப்பவே ஒரு முடிவு எடுத்துட்டேன். இந்த சினிமா கன்றாவியெல்லாம் நமக்கு வேணாம்ன்னு... அதச் சொல்லிட்டு போகத்தான் வந்தேன்... வர்ட்டா வாத்தியாரே...' என்று, என் வயிற்றிலும், மனதிலும் அன்று பால் வார்த்துச் சென்ற, துரைக்கண்ணு, அதன் பின், என் கண்ணில் படவே இல்லை.

இதை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில், 'நான் ஸ்டாப்'பாக, கோபு சொன்ன போது, பார்வையாளர்கள் பலர், கண்ணில் நீர் வர சிரித்தனர்.

'இப்படி எல்லாம் கூட, கோபு வாழ்வில் நிஜமாகவே நடந்ததா...' என்று, நிகழ்ச்சியின் முடிவில், அவரிடம் கேட்ட போது, பலமாக சிரித்தாரே தவிர, பதில் தரவில்லை.

ஆனால், நிஜமாக, சென்னை தமிழ் பேசும் ஒரு பெண்ணிடம் மாட்டி, படாதபாடு பட்டேன்... காரணம், அவர் தான் படத்தின் தயாரிப்பாளர்... யார் அந்த பெண், அவர் எடுத்த படத்தின் பெயர் என்ன?

கோபுவை கட்டிக்கொண்ட, சந்திரபாபு!

பிரிட்டிஷ் ஆங்கிலத்தை நுனி நாக்கில் பேசும் நடிகர், சந்திரபாபு, போலீஸ்காரன் மகள் படத்தில், சென்னை தமிழை பொளந்து கட்டி இருப்பார். கூடவே, 'பொறந்தாலும் ஆம்பிளயா பொறக்கக் கூடாது...' என்று, ஒரு பாட்டும் பாடி அசத்தி இருப்பார். அதற்கு காரணம், வசனகர்த்தா கோபு தான்.

ஒரு கட்டத்தில், சந்திரபாபு வியந்து போய், 'எந்த ஊரு...' என்று கேட்டார், கோபுவிடம்.

'நம் தில்லகேணி தான்...' என்று, சென்னை வட்டார மொழியிலே பதில் கொடுத்தார்.

'அதான் ஊத்து ஊத்துன்னு ஊத்துது வாத்யாரே...' என்று சொல்லி, கோபுவை கட்டிக் கொண்டாராம், சந்திரபாபு.

தொடரும்

-எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us