
பட்டிமன்றங்களில் கலக்கும், திருநங்கையர்!
பொதுவாக, திருநங்கையர் என்றாலே, ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்படுகின்றனர்.
தற்சமயம், சமூகத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம், பரவலாக கிடைக்கத் துவங்கி விட்டது. இதனால், தடைகளை உடைத்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சாதனையாளர்களாக வெளிவர துவங்கியுள்ளனர்.
அந்த வகையில், எங்கள் பகுதியில் உள்ள, படித்த திருநங்கையர் சிலர், பட்டிமன்ற குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். முத்தாய்ப்பான தலைப்புகளை தேர்ந்தெடுத்து, கோவில் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில், சிரிக்கவும், சிந்திக்கவும்படியான கருத்துக்களோடு பேசி வருகின்றனர்; கை தட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்று, புகழடைந்து வருவதோடு, வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
பிச்சை எடுக்காமல், முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடாமல், முன்னோடி திருநங்கையர்களாக கலக்குகின்றனர். இவர்களை போன்றே, மற்ற திருநங்கையரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் அள்ளலாமே!
எச். சண்முகசுந்தரம், சேலம்.
சிறுமிகளே உஷார்!
எங்கள் குடியிருப்பில், சிறிய மளிகை கடை ஒன்று உள்ளது. அதன் உரிமையாளர், வயது, 60. உதவிக்கு இருக்கட்டுமென்று, சகோதரியின் மகனான இளைஞனை, உடன் வைத்திருந்தார்.
வியாபாரம் சுறுசுறுப்பாக இல்லாத மதிய வேளையில், அருகில் உள்ள, அவர் வீட்டிற்கு, ஓய்வெடுக்க சென்று விடுவார், உரிமையாளர்.
அவர் சென்ற பின், தனியாக இருக்கும் இளைஞன், அந்த நேரத்தில் கடைக்கு வரும் சிறுமியருக்கு, சாக்லேட் ஆசை காட்டி அழைத்து, 'சில்மிஷ'த்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
ஒருநாள், அந்த இளைஞன், ஒரு சிறுமியிடம், 'சில்மிஷ'த்தில் ஈடுபட, அது கத்தி கூச்சலிட்டதில், கூட்டம் கூடியது. அவனை, நையப்புடைத்து, காவல் நிலையத்திற்கு அனுப்ப முயல, சிறுமியின் எதிர்காலம் கருதி, அவள் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க, கடையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டான்.
என்னதான் கடுமையான சட்டங்களின் மூலம், அரசு தண்டித்து வந்தாலும், இப்படிப்பட்ட காமுகர்கள் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
இதை உணர்ந்து, பெண் பிள்ளையை பெற்றவர்கள், எங்கும், எப்போதும், எவரிடத்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை, எடுத்துக் கூறி வளர்ப்பது நல்லது.
- வி. சங்கர், சென்னை.
நுாலகரின் சேவை!
எங்கள் பகுதி நுாலகர் ஒருவர், தன் பணி நேரம் போக, வீடு வீடாக சென்று, படித்து, வேலை தேடும் இளைஞர்களையும், இளைஞிகளையும் சந்திக்கிறார்; அரசு போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான வழிகாட்டி புத்தகங்களை, தன் சொந்த செலவில் அவர்களுக்கு வாங்கி தந்து, ஊக்குவித்து வருகிறார்.
அவ்வாறு படித்து, அரசு வேலை பெற்றவர்களை, நுாலகத்திற்கு அழைத்து, அனைவரின் முன் பாராட்டி, பரிசுகளை கொடுப்பார். அத்துடன், இவர்களை போலவே, மற்றவர்களும் சாதிக்க, மறைமுகமாக துாண்டி விடுகிறார்.
அவரின் தன்னலமற்ற முயற்சியின் காரணமாக, இன்று, எங்கள் பகுதியில், பலரும் அரசு பணியில் உள்ளனர்.
இவர் போலவே, அரசு பணியில் இருக்கும் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் வேலை தேடுவோருக்கு உதவிடும் வகையில், வழிகாட்டி உதவலாமே!
சி. அருள்மொழி, கோவை.

