
பா-கே
பேராசிரியர் அர்த்தநாரி என்பவர், பிரபலமான இதய நோய் நிபுணர்; அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்; தற்போது, தனி, 'கிளினிக்' நடத்தி வருகிறார்.
அவரை, சமீபத்தில் சந்தித்தேன். சந்திப்புகளின்போது, நாம் பேச அவசியமே இருக்காது; அவர் பிடித்துக் கொள்வார்; பேசித் தீர்த்து விடுவார்.
சமீப சந்திப்பின்போது, அவர் கூறியது...
'நல்ல குடும்பம், ஒரு பல்கலைக் கழகம்' என்பர்... இது உண்மை!
பல ஆண்டுகளுக்கு முன், என் திருமணத்துக்கு முன், நான் மருத்துவம் படித்து, விடுமுறையில் சேலத்திலிருந்த வீட்டுக்கு சென்றேன்.
அன்று காலை, வீதியில் காய்கறி விற்கும் பெண்ணிடம், காய் வாங்கினார், என் அம்மா.
கத்தரிக்காய் அரை கிலோவுக்கு பேரம் பேசி, விலை குறைத்து வாங்கி, பின், கொசுருக்கு இரண்டு கத்தரிக்காயை வாங்கி, காசு கொடுத்தார்.
எனக்கு கோபம்... ஏன் இப்படி என்று!
நடை பயிற்சி முடித்து, குளித்து, பிறகு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு வெளியே கிளம்ப ஆயத்தமானேன்.
அப்போது, காலை டிபனை பாத்திரத்தில் போட்டு, அந்த காய்கறி விற்கும் பெண்ணிடம் கொடுத்தார், அம்மா. அது, அவர் வாங்கிய காய்கறி விலையை விட அதிகம்.
'ஏன்?' என்று, அம்மாவிடம் கேட்டேன்.
அதற்கு அம்மா கூறினார்:
அவர் கர்ப்பிணியாம்பா. பசியோடு தொழில் செய்கிறார். நான் கொடுக்கும் உணவு, அவளுக்கு மட்டுமல்ல... அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்...
நான் தினமும், தவறாமல் பணம் கொடுத்து பொருள் வாங்குவது வழக்கம். அதனால், பணத்தை கணக்கு பார்க்காமல் கொட்ட முடியாது.
பேரம் வேறு; தானம் வேறு!
இவ்வாறு, அம்மா கூறினார்; நான் பூரித்துப் போனேன்!
அடுத்த விஷயம் சொல்ல ஆரம்பித்தார்...
திருமணமான புதிதில், சென்னை புரசைவாக்கத்தில் வாடகைக்கு குடியிருந்தேன். அப்போது, நிறைய உறவினர்கள், சேலம், பவானியிலிருந்து வருவர்.
அந்நேரங்களில், ஒரு கிலோ சக்கரையும், காபி துாள் பாக்கெட்டும் வாங்கி வரச் சொல்வார், மனைவி.
நானும் வாங்கி வருவேன்.
அன்று மாலை, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவியும், அம்மாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
நான் காபி போட்டு குடிப்பதற்காக, சமையலறை சென்றேன்.
அப்போது, அங்கு, இரண்டு பாத்திரம் நிறைய சர்க்கரை இருந்தது. அதை பார்த்து கோபமடைந்து, என் மனைவியை திட்டினேன்.
'பாருப்பா, உனக்கு இப்ப தான் திருமணம் ஆகியிருக்கு. நீ மருத்துவமனைக்கு போன பிறகு, உறவினர் யாரேனும் வந்தால், உன் மனைவி வெளியே போய் எப்படி வாங்க முடியும். அவர், நகரத்துக்கு புதிது...' என்று கூறி, 'தேவையானவைகளை சேமித்து வைக்க வேண்டும். உறவினர் வந்த பிறகு, பொருட்கள் வாங்க வெளியே போகக் கூடாது...' என்றார், அம்மா.
அடுத்த விஷயம்...
நான் இதய நோய் பேராசிரியராக இருந்தபோது, கார்ப்பரேட் மருத்துவமனைகளில், நிறைய நோயாளிகளை, 'அட்மிட்' செய்து, 'ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன்' செய்துள்ளேன். அந்த மருத்துவமனைகளின் மூலம், எனக்கு ஒரு நோயாளியையும் பார்ப்பதற்கு அனுப்பி வைத்ததில்லை.
இன்று, நகரத்தில் உள்ள எந்த ஸ்பொஷாலிட்டி மருத்துவமனையும் எனக்கு உதவியதில்லை. என்னால், மருத்துவமனைக்கு வருமானம். இதை நான், என் மனைவியிடம் கூறினேன்.
அவர், 'நீங்கள், ஒரு அப்பாவி... ஏமாளி என்பது அவர்களுக்கு தெரியும்...' என்றார்.
ஒருசமயம், கார்ப்பரேட் விழாவில், பி.ஆர்.ஓ., 'இவரால், நம் மருத்துவமனைக்கு இத்தனை லட்சம் லாபம்...' என்று, மருத்துவமனையின், எம்.டி.,யிடம் கூறினார்.
அதற்கு, நான் என் மனைவியின் பாணியில், 'இந்த ஆண்டு, நான் நிறைய வருமானம் ஈட்டி தந்துள்ளேன். இதனால், மருத்துவமனைக்கு லாபம். ஆனால், மருத்துவமனையால் எனக்கு ஒன்றுமில்லை...' என்றேன்.
அதற்கு, அவர்கள் சிரித்து விட்டு சென்றனர்.
இது தான் உலகம்.
- இவ்வாறு அவர் கூறி முடித்தார்.
இதற்கிடையில், நான் விடைபெறுவதற்காக, டாக்டரிடம், 'நான் கிளம்புகிறேன்' என்பதை நாசுக்காக, 'எஸ் டாக்டர்... எஸ் டாக்டர்...' என, பலமுறை சொல்லிப் பார்த்தேன்; விடவில்லை!
நல்லவேளை, நமக்கு மேட்டராவது கிடைத்ததே... என, எண்ணியபடி, பெரிய கும்பிடு போட்டு விடை பெற்றேன்!
ப
தமிழக உளவுத் துறையில், பல ஆண்டுகள், நான்கு முதல்வர்களிடம் பணியாற்றி ஓய்வு பெற்றவர், அடிஷனல் சூப்பிரண்டென்ட் ஆப் போலீஸ், வே.ராமநாதன்.
அவர், தன் அனுபவங்களை, 'மாண்புமிகு உளவுத்துறை' என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
அதிலிருந்த சுவையான தகவல் இது:
உளவுத்துறையின் முக்கிய வேலையே, வி.ஐ.பி.,களுக்கு பாதுகாப்பு மற்றும் உளவு பார்த்தல் போன்றவற்றின் மூலம், மாநில அரசுக்கு உதவுவது தான். மூளையும், அதிர்ஷ்டமும் இணைந்து செயல்பட்டால், இந்த துறையில் ஜொலிக்கலாம்; பெரும் புள்ளிகளின் நட்பும் எளிதாக கிடைக்கும்.
ஒருமுறை, ராஜாஜிக்கு, சற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.
'மருத்துவமனைக்கு போய், அவருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுங்கள்...' என, மேலிடத்திலிருந்து தகவல் வந்தது.
உடனே, சில கான்ஸ்டபிள்களுடன், அங்கு சென்றேன். டாக்டர்கள் சுற்றி நின்று, ராஜாஜியை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அதையும் மீறி, அங்கு, 'தாம் துாம்' என, குதித்துக் கொண்டிருந்தார், அவருடைய மகன், நரசிம்மன்.
'என்ன ஆச்சு... ஏன் லேட்...' என, அடிக்கடி டாக்டர்களை பார்த்து, உறுமினார்.
ஒரு கட்டத்தில் மிக சத்தமாக, 'அப்பாவுக்கு, என்ன நோயென்று சொல்லுங்கள்...' என, ஆங்கிலத்தில் கேட்டார்.
டாக்டர்கள் பதில் சொல்ல, வாயெடுக்கும் முன், 'நீ தான், என் நோய்...' என்று, ஒரு குரல் ஆங்கிலத்தில் ஒலித்தது; அப்படி கூறியது, ராஜாஜியே தான்.
எல்லாரும் ஒரு கணம், மின்தாக்குதலுக்கு உள்ளானவர்கள் போல் நின்றனர். கனத்த அமைதி நிலவியது.
சில நிமிடங்களுக்கு பின், பெரிதாக சிரித்தார், நரசிம்மன்.
அனைவரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டனர்.
ராஜாஜி முகத்தில் மலர்ச்சி