/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (11)
/
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (11)
PUBLISHED ON : ஜூலை 19, 2020

எம்.ஜி.ஆரை வைத்து, ஒரு பிரமாண்ட படம் எடுக்க நினைத்த, ஸ்ரீதர், அன்று சிந்திய ரத்தம் என்று, பெயர் வைத்து, அதற்கான வேலையை ஆரம்பித்து விட்டார்.
முதல் நாள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல, கதாநாயகன் மேடையில் பேசும் காட்சி. நிஜமாக, 500 மாணவர்கள் சூழ்ந்து நிற்க, 'உங்கள், 'யூனிட்' ஆட்கள் பரவாயில்லையே... நிஜமான மாணவர்கள் இவ்வளவு பேரை திரட்டி விட்டனரே...' என்று, பாராட்டவும் செய்தார், எம்.ஜி.ஆர்.,
அந்த, 'ஷூட்டிங்' அந்த ஒரு நாளோடு நின்று போனது. அதன்பின், உரிமைக்குரல் மற்றும் மீனவ நண்பன் போன்ற படங்களில் நடித்துக் கொடுத்து, ஸ்ரீதருக்கு பெரும் உதவியாக இருந்தார், எம்.ஜி.ஆர்., ஆனால், அன்று சிந்திய ரத்தம் படம் மட்டும் தொடர முடியாமல் போய்விட்டது.
பிரமாண்ட கனவில் இருந்த, ஸ்ரீதர், அதில் இருந்து மீள முடியாமல், உடனே சிவாஜிக்காக ஒரு கதை எழுதி, படப்பிடிப்பு வேலையில் இறங்கி விட்டார். அந்த படம் தான் சிவந்த மண். தமிழில் நன்றாக ஓடி, நல்ல வசூலைக் கொடுத்தது. தர்தி என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகியது; சரியாகப் போகவில்லை, பெருத்த நஷ்டம்.
சர்வாதிகாரியை எதிர்த்து ஜெயிக்கும், புரட்சி வீரன் சிவாஜி, அவருக்கு துணையாக, முத்துராமன், காதலியாக, காஞ்சனா நடித்திருப்பர். படத்தின் பாடல் காட்சிகள் ரோம், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டது.
இந்தப் படத்திற்காக தான், நான் முதன்முதலில் வெளிநாட்டுக்கு சென்றேன். வேட்டி, சட்டைக்கு விடை கொடுத்து, 'கோட் - சூட்' போட்டு, ஷூ மாட்டிக் கொண்டேன். ஆனால், எனக்கு அது, 'செட்' ஆகாததால், பாரதியாரைப் போல வேட்டி, சட்டை போட்டு, சட்டை மேல், 'கோட்' மட்டும் போட்டுக் கொள்வேன். ஓட்டலின் வாசலில் இருப்பவர்கள், ஏற இறங்க பார்ப்பர்.
'திஸ் இஸ் அவர் இன்டியன் கல்சர் ட்ரஸ்...' என்று, அவனை குழப்பிவிட்டு ஓட்டலுக்குள் சென்று விடுவேன்.
நான் சுத்த சைவம். போன இடங்களில் சைவத்திற்கு மிகவும் சிரமம். கஸ்டம்சை எப்படியோ சமாளித்து, ஊறுகாய் எடுத்து வந்திருந்தார், நடிகை காஞ்சனா. அந்த ஊறுகாயை பாக்கெட் போட்டு, 'கோட்' பாக்கெட்களில் போட்டுக் கொள்வேன். ஓட்டலில் சாப்பிடும் போது கொஞ்சம் சாதம் மட்டும் வாங்கி, அதில் ஊறுகாயை பிசைந்து சாப்பிடுவேன்.
அதை பார்த்து விட்டு, 'கோபு... 'டேபிள் மேனர்ஸ்' வேணும். இப்படியா ஊறுகாயை போட்டு சாப்பிடுவது...' என்றார், சிவாஜி.
ஒருநாள்-
ஒரு ஓட்டலில், பெரிய மீனை அப்படியே எடுத்து வந்து வைத்தனர். கொஞ்சம் சாப்பிட்டு, முகத்தை சுளித்தார், சிவாஜி. காரணம், அதில் உப்பு, உறைப்பு எதுவுமில்லை. ஆனால், அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும்.
'கோபு... கொஞ்சம் ஊறுகாய் கொடேன். அதை வைத்து இந்த மீனை உள்ளே தள்ள பார்க்கிறேன்...' என்றார்.
'சார்... ஊறுகாய் கேட்கிறீர்கள், 'டேபிள் மேனர்ஸ்' இப்ப வேண்டாமா...' என்றேன்.
'அட போய்யா...' என்றார், நொந்து போய்.
சிவாஜி செய்த ஒரு வேடிக்கை கலாட்டா பற்றி சொல்கிறேன்...
சுமதி என் சுந்தரி என்ற படத்தை, பார்த்து பார்த்து, எடுத்துக் கொண்டு இருந்தோம். ஆனாலும், பட தயாரிப்பாளர் கொஞ்சம் சிக்கனப் பேர்வழி.
'இது எதுக்கு, அது எதுக்கு...' என்று, கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை கவனித்த சிவாஜி, திடீரென கூப்பிட்டு, 'படத்தின், 'டைட்டில்' காட்சி எப்படி இருக்கணும்ன்னு, நான் முடிவு செஞ்சிருக்கேன். படத்துல, நான் ஒரு வேட்டைக்காரன் இல்லையா... அதனால், ஒரு யானையை விரட்டிப் போய் காட்டில் சுடுகிறேன். யானையை விலைக்கு வாங்கி, லாரியில் எடுத்து வாங்க...' என்று சொல்லிச் சென்று விட்டார்.
யானை வாங்கணும் என்பதை கேட்டதில் இருந்து, தயாரிப்பாளருக்கு சாப்பாடு தண்ணீர் இறங்கவில்லை.
'யானை வாங்கணும், அதை லாரியில எடுத்து வரணும்; 'ஷூட்டிங்' முடியற வரை தீனி போடணும்; பெரிய செலவாச்சே...' என்று நினைத்து, பித்து பிடித்தார் போல இருந்தார்.
என்னை கூப்பிட்டு, 'சிவாஜி சார் சொல்லிட்டா, வேறு வழி இல்லைம்பாங்க. ஆனா, கோபு சார்... கொஞ்சம் யோசியுங்க... வேறு வழி இல்லையா...' என்றார், அழாத குறையாக.
'சரி... சிவாஜிகிட்ட நான் பேசி சொல்றேன்...' என்றேன்.
'மேக் - அப்' அறையில் இருந்த, சிவாஜியை அணுகினேன்.
'அண்ணே... ஒரு விஷயம்...' என்று ஆரம்பித்தேன்.
'என்ன?' என்றார், சிவாஜி.
'ஒண்ணுமில்ல... நீங்களே கணேசன். நீங்க போய் ஒரு கணேசனை (யானையை) சுடலாமா?' என்றேன்.
கட கடவென சிரித்த, சிவாஜி, 'நான் நினைச்சேன், நீ வருவேன்னு. சினிமாவில செய்ய வேண்டிய செலவை செஞ்சு தான் ஆகணும். அதைச் செய்யும் போது, கஷ்டப்படாம இஷ்டப்பட்டு செய்யணும். அதை அந்த தயாரிப்பாளருக்கு புரிய வைக்கத்தான் அப்படி ஒரு புளிய கரைச்சேன்.
'மற்றபடி எனக்கு அப்படி ஒரு காட்சி தேவையில்லை; சும்மா தான் சொன்னேன். இனிமே பாரு, ஆள் நொய் நொய்ங்க மாட்டார்...' என்றார்.
அதன்பின், எந்த இடையூறும் இல்லாமல் படம் பிரமாதமாக வளர்ந்தது; வெளியாகி பிரமாதமாக ஓடியது.
இந்த படத்தை முடித்து, 'ஹாயாக' இருந்த ஒருநாள் காலைப்பொழுதில், போனில் பேசிய ஒருவர், எனக்கு ஒரு ஆச்சரியத்தை தந்தார்.
தேங்காய் சீனிவாசன் செய்த கலாட்டா!
சுமதி என் சுந்தரி படத்திற்கு, யானை தேவை இல்லை என்பதை அறிந்த பிறகு, கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டார், தயாரிப்பாளர். அந்த நேரம் அங்கு வந்த, தேங்காய் சீனிவாசன், 'அடுத்த வாரம், எம்.ஜி.ஆருடன் லண்டனில், 'ஷூட்டிங்!' நாளைக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துடுங்க...' என்றார்.
'இப்படி திடீர்னு சொன்னா எப்படி...' என்று, பதறிய தயாரிப்பாளரை, அமைதிப்படுத்தி, 'நானும் கொஞ்சம் கலாட்டா செய்தேன். பதட்டப்படாதீங்க...' என்று, சொல்லி சிரித்தார்.
— தொடரும்
எல். முருகராஜ்