
சபாஷ்!
என் நண்பருக்கு இரு மகன்கள். மூத்தவன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்ததால், அவன் விருப்பப்படியே, இன்ஜினியரிங் சேர்த்து விட்டார்.
இளையவனுக்கு, படிப்பு சரியாக வரவில்லை. அதை நினைத்து, கவலைப்படாமல், அவனிடம், 'உனக்கு எதில் அதிக விருப்பம்...' என்று கேட்டார்.
சமையலில் ஆர்வமாக இருப்பதாக சொன்னான். அவன் விருப்பப்படியே, 'கேட்டரிங்' படிப்பில் சேர்த்து விட்டார்.
அதில் படித்தபடியே, ஒரு சமையல்காரரிடம் உதவியாளராக சேர்ந்து, விடுமுறை நாட்களில், அவருடன் போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். படிப்பு முடிந்ததும், அவனே, நேரடியாக திருமண சமையல், 'கான்ட்ராக்ட்' எடுத்து, அருமையாக செய்து அசத்துகிறான்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இன்ஜினியரிங் முடித்த அண்ணனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்க, இளையவனோ, கை நிறைய சம்பாதித்து கொண்டிருக்கிறான்.
படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று நம்பாமல், பிள்ளையின் மனநிலை, விருப்பம் அறிந்து, ஆர்வமான தொழிலில் ஈடுபடுத்திய நண்பரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எஸ். சதீஷ்குமார், சிவகாசி.
தேவை கொஞ்சம் மனிதாபிமானம்!
பக்கத்து வீட்டில், வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி பெண் பணிபுரிகிறார். வயது, 45 இருக்கும். அவர் குறையை, சுற்றத்தார் அனைவரும் பெயராக்கி, 'ஊமைச்சி' என்று அழைப்பர். எனினும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்து வருவார்.
ஒருமுறை, எங்கள் மேல் வீட்டு குடியிருப்பில் வசித்த ஒருவர், தன் குழந்தையை பயமுறுத்தி மிரட்ட, விளையாட்டாக, 'ஊமைச்சி உன்னை பிடித்துச் சென்று விடுவாள்...' என்று கூறினார். பின், அனைவரும் தங்கள் குழந்தைகளை மிரட்ட, இதையே கூறத் துவங்கினர்.
ஒருநாள், அவர் காதில் இவர்கள் பேச்சு விழ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அன்று, அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரில், நானும் கரைந்தேன்.
உடனடியாக, மேல் வீட்டாரிடம், 'ஒரு துளி மனிதத்தையாவது அந்த ஊமை சகியிடம் காட்டுங்கள்; மீண்டும் ஒருமுறை, இதுபோன்ற சம்பவம் நடந்தால், வீட்டை காலி செய்ய வைப்பேன்...' என்று, கண்டிப்புடன் கூறி வந்தேன்.
அதன்பின், அவர்கள் அப்படி சொல்வதே இல்லை; தெருவாசிகளும் திருந்தினர்.
மெத்த படித்தவர்கள் தான் இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர். இத்தகையோர், இனி திருந்தினால் நல்லது.
- மோ. கலைமணி, பொள்ளாச்சி.
கடன் கொடுப்பவர்களே, உஷார்!
தோழியின் மகள், கல்லுாரியில் படித்து வருகிறாள். அவள், தன் ஆண் நண்பருக்கு உதவுவதாக நினைத்து, அவனது அவசர தேவைக்கு கணிசமான பணம் கொடுத்துள்ளாள்.
கடன் பெற்றவன், மாதந்தோறும், ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பி தருவதாக கூறி, சில மாதங்கள், தோழியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளான்.
இதற்கிடையில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது, தோழி தான், தன்னிடம் கடன் வாங்கி பணம் கொடுக்கவில்லை என்று, புகார் அளித்துள்ளான்.
என் தோழி, அவனுக்கு பணம் தந்ததற்கு எந்தவித ஆதரமும் இல்லை. ஆனால், இவளது வங்கி கணக்கில், அவன் பணம் கட்டியதற்கான, 'சலான்'களை ஆதாரமாக வைத்துள்ளான். அதனால், அந்த தொகையை வட்டியோடு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கடன் கொடுப்பவர்களே, உதவி செய்வதாக நினைத்து, உபத்திரவத்தை வரவழைத்துக் கொள்ளாதீர். வேண்டுமானால், நம் அந்துமணியாரின், 'அட்வைஸ்' படி, கடன் கேட்பவர்களுக்கு, உங்களால் முடிந்த தொகையை தானமாக கொடுத்து உதவுங்கள். கடன் கொடுத்து, கஷ்டப்படாதீர்.
ஜிஜி, மதுரை.