தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



சென்னிமலையிலிருந்து, கணேஷ் என்ற வாசகர் எழுதிய, 'இ - மெயில்' கடிதம்:

இந்த, 'கொரோனா' வைரஸ் என்னையும் தாக்கும் என, நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்திருப்பேன், 'சானிடைசர்' பயன்படுத்துவேன்.

கடந்த மாதம், முதல் வாரம், காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது. சரி, இரவு துாக்கம் இல்லை போல என, என்னை நானே தேற்றி, அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன்.

நேரம் செல்லச் செல்ல, ஒருவிதமான குளிர் ஊடுருவ துவங்கியதையும், உடல் அடிக்கடி பதற்றப்படுவதையும் உணர முடிந்தது. மதியம், 3:00 மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்து, வீட்டிற்குள் அடைந்து விட்டேன்.

அடுத்த நாள் காலை, லேசான காய்ச்சல் இருந்தது. தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர்ந்தேன். என் நிலை கண்டு, மனைவி பதற்றம் அடைவதை பார்க்க முடிந்தது.

எனக்கு, கழிப்பறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். காய்ச்சல்: 99 டிகிரி.

அடுத்த நாள், சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை, முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இருமல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டேன், நான் பிரச்னையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நண்பர்களுக்கு, என் நிலையை விளக்கினேன்.

யாரும் என்னை பயமுறுத்தவில்லை; மாறாக, உற்சாகப்படுத்தினர். தைரியமூட்டி, உணவு முறைகளை பரிந்துரைத்தனர்; எனக்காக, அக்கறை எடுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள், தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி.

அந்த நேரத்திலும் என்னுடைய மிக கடினமான செயல் என்னவென்றால், படுக்கையிலிருந்து எழுந்து வெந்நீர், உணவு எடுத்துக் கொள்வது. சிறுநீர் கழிக்க செல்வது.

அடுத்த நாள், உடல் சோர்வடைய துவங்கியது. படுக்கையில் திரும்பி படுப்பது என்பது, ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமல் இருந்தது. என் உடல், தன்னுடைய தேவையான பசி, தாகம், குளிர், வெப்பம் இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

நானே மிகவும் சிரமப்பட்டு, ஒவ்வொன்றாக புரிந்து கொண்டேன். என் சகோதரன், 'ஆக்சி மீட்டர்' என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில், ஆக்சிஜன் அளவு, 92 என்று காட்டினால், உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்லவேளை, எனக்கு, 95 முதல் 99 வரை மாறி மாறி ஆக்சிஜன் அளவு இருந்தது.

அதன் பிறகு, உடல் வலி குறையத் துவங்கியது. ஆனால், உடல் பதற்றப்படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும், வெளியே வியர்வையும், ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின், என் மருத்துவ நண்பர், அதை, பயம் என்றார்.

நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என, முடிவெடுத்து, பரிசோதனை செய்து கொண்டேன்.

அதுவரை, நான் மருத்துவமனை செல்லவில்லை. அதற்கு காரணம், என்னால் இந்த நோயை வெற்றிகொள்ள முடியும் என்றிருந்த நம்பிக்கை; மற்றொன்று, மருந்தில்லாத ஒரு நோய்க்கு, மருத்துவர் என்ன செய்வார்?

வயிறு புண்ணானது போன்ற ஒரு உணர்வு தோன்றியதால், கபசுர குடிநீர் பருகுவதை நிறுத்தி விட்டேன்.

மறுநாள், காலை, 11:00 மணி.

மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்து விட்டது. ஆம், நான் ஒரு, 'கொரோனா' நோயாளி. இப்போது, என் குடும்பம் மிகவும் பதற்றம் அடைந்தது. அரசாங்கம் வந்து, என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்று விடுவர் என, மிகவும் பயந்து, தன் தம்பியை, உதவிக்கு அழைத்தாள், என் மனைவி.

சென்னையின் மிக பிரபலமான, மருத்துவமனையில், அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு, 'அப்பாயின்மென்ட்' வழங்கப்பட்டது.

என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின், அந்த மருத்துவர், என் மனைவியிடம், மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார்:

'உங்கள் கணவர், அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இனி, அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை...'

தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும், 10 நாட்களுக்கு தொடர சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தார். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது, அதை காட்டச் சொன்னார்.

அந்த மருத்துவர், என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்.

அந்த மருத்துவரிடம், என்னை, அரசாங்கம் கூட்டிச் செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை, என் மனைவி பெற்றுக்கொண்டு, விடைபெற்றோம். இப்போது, காய்ச்சல் இல்லை.

மறுநாள், உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை, தாகம் இல்லை. நானாகவே உணவும், தண்ணீரும் எடுத்துக் கொண்டேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருந்தது. இந்த சுய சிறைக்குள் எதிர் வரும் நாட்களை ஓட்ட வேண்டும்.

என்னை காப்பாற்றியதாக நான் கருதும் நான்கு விஷயங்கள்...

1.ஆக்சிஜன் அளவு குறையும்போது, எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது.

2.ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, ஆவி பிடித்தது... மூன்று நாட்கள் மட்டும்!

3.சூடாக ஏதாவது ஒரு பானத்தை, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை உட்கொண்டது, ஐந்து நாட்கள்.

4.என்னை, வெளியிலிருந்து கவனித்துக் கொண்ட, என் மனைவி.

- இவையே என்னை காத்தது என, நான் உறுதியாக நம்புகிறேன்.

தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை, நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும், நம் கையில் தான் உள்ளது.

கிருமி, நுரையீரலுக்கு சென்றால், அது, உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். வயிற்றுக்கு சென்றால், நீங்கள், அதை வென்று விட்டீர்கள் என்று பொருள்.

வயிற்றுக்கு அனுப்பும் வேலையை, நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ளத் தேவையில்லை.

மூச்சு விட மிகவும் சிரமமானால், இரண்டு கைகளையும் மேலே துாக்கிக் கொண்டால், நன்றாக மூச்சு விட முடியும்.

மனிதனால் வெல்ல முடியாத நோயல்ல, 'கொரோனா!' நாம் வாழப் பிறந்தவர்கள். கண்ணுக்கு தெரியாத ஒரு நோயிடம் தோற்றுப் போவர்கள் அல்ல.

என் குடும்பம், நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த, மைத்துனனின் நண்பர்கள், அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

- இவ்வாறு எழுதியுள்ளார்.

உங்களுக்கெல்லாம் இவரைப் போல மனத் துணிச்சல் வர வேண்டாம்; சந்தேகம் வந்தால், மருத்துவரை உடன் அணுகுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us