
எஸ்.ராஜேஸ்வரி, மதுரை: ஒருவருக்கு உடல் கஷ்டம், மனக்கஷ்டம், பணக்கஷ்டம் வந்தால், ஜோசியரை நோக்கி ஓடுகின்றனரே... அங்கு போனால் பிரச்னை தீர்ந்து விடுமா?
உடல் கஷ்டம் - 'கொரோனா'விற்கு ஜோசியரிடம் சென்றால், தீங்கு விளைவதை தடுக்க முடியுமா? இதே போல் தான் மற்றவையும்; ஜோசியரிடம் செல்வதால் உங்கள், 'பர்ஸ்' தான் காலியாகும்!
நேரத்தை வீணாக்காதீர்கள்!
லட்சுமி ஹேமமாலினி, சென்னை: குற்றால சீசன் தொடங்கி விட்டதே... 'வாரமலர்' நடத்தும் குற்றால சீசன் போட்டி இந்த ஆண்டு உண்டா?
கிடையாது... காரணம் தான் உங்களுக்குத் தெரியுமே!
என்.ஆசைத்தம்பி, சென்னை: 'கொரோனா'வைக் காரணம் காட்டி, குடியிருப்போர் வாடகை தர மறுப்பது நியாயமா?
அவர்கள் இடத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள்; நியாயம் புரியும்!
* வி. தேவசகாயம், சென்னை: கனிமொழிக்கு, கடைசி வரை, துாத்துக்குடி தானா?
ஒருவேளை, ஸ்டாலின் தமிழகத்தைப் பிடித்தாலும், உதயநிதிக்கு இங்கே இடம் உள்ளதே தவிர, கனிமொழிக்கு, டில்லி தான்! அவருக்கு தான், ஹிந்தி நல்லா தெரியுமே!
டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: திரைப்படக் காமெடிகளை, 'டிவி'யில் கண்டு ரசிப்பீர்களா?
இப்போதெல்லாம் இல்லை; ஒளிபரப்பிய காட்சிகளே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். அந்த காமெடிக் காட்சிகளின் வசனங்களே மனப்பாடமாகி விட்டன!
லெ.நா.சிவகுமார், சென்னை: வயதாகி, கிழடு தட்டின நிலையிலும், ரஜினி, கமலுக்கும் ரசிகர் கூட்டம், 'ஸ்டிராங்'காக உள்ளதே!
அவர்களது இளவயது ரசிகர்களுக்கும், இவர்கள் வயது, இப்போது ஆகியிருக்கும் தானே!
* கருணைவள்ளல், சென்னை: இப்போது, வாய்ப்பூட்டு யாருக்கு தேவைப்படுகிறது?
காங்கிரஸ், தி.மு.க., - கம்யூனிஸ்டுகள் மற்றும் தமிழக, அகில இந்தியாவில் உள்ள மாநில, 'லெட்டர் பேட்' கட்சிகளுக்கு, நீங்கள் சொல்வது தேவைப்படுகிறது.