sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கை வைத்தியம்!

/

கை வைத்தியம்!

கை வைத்தியம்!

கை வைத்தியம்!


PUBLISHED ON : ஜூலை 26, 2020

Google News

PUBLISHED ON : ஜூலை 26, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரின்ட் எடுத்து கையில் வைத்திருந்த, 'ஸ்டேட்மென்டு'களுக்கு, 'வவுச்சர்'களை வைத்து சரிபார்த்துக் கொண்டிருந்தான், சரவணன். கணக்கில், ௧,௦௦௦ ரூபாய் உதைத்தது. அதனால், கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி, ஒவ்வொரு, 'டிரான்ஷாக் ஷனை'யும் ஆரம்பத்திலிருந்து சரி பார்த்தான்.

'கொரோனா'வால், 50 நாட்களாக, 'லாக் டவுனில்' இருந்ததால், பேப்பர்கள் எல்லாம் எங்கே வைத்தோம் என்பது கூட மறந்து விட்டிருந்தது. ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தபோது, சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல், அவனை கூப்பிட்டது.

'சுனாமி காலிங்' என்று வந்தது. அது, மனைவி உமாவிற்கு, அவன் வைத்திருக்கும் செல்ல பெயர்.

'இவ ஒருத்தி, நேரம் காலம் தெரியாம கூப்பிடுவா...' என்றபடி, எரிச்சலில் போனை, 'ஆன்' செய்து, காதருகே எடுத்து சென்றான்.

''என்னங்க, நான் உமா பேசறேன். நம் பையனுக்கு, காலையிலருந்து இதுவரைக்கும் ஏழெட்டு தடவ வயித்தால போயிட்டுதுங்க... என்ன பண்றதுன்னு தெரியலங்க... உடனே வாங்க,'' என்று, படபடப்புடன் கூறினாள்.

பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே கட்டி வைத்து, 'லீவ்' சொல்லி கிளம்பி விட்டான்.

வீட்டில், வாடிய கீரைத்தண்டாக கிடந்தான், இரண்டு வயது மகன், விக்னேஷ். உடனே, பக்கத்திலிருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்தார். தெம்புக்கு, உப்பு, சர்க்கரை கரைசலுக்கான பொடியும் கொடுத்தார், டாக்டர்.

ஆனால், கொஞ்சம் கூட சரியாகவில்லை. மறுபடியும் அவரிடம் அழைத்துச் சென்றனர். வேறு மருந்து, மாத்திரை கொடுத்தார். நிறைய நீர் இழப்பு இருப்பதால், குழந்தைக்கு, 'டிரிப்ஸ்' ஏற்ற கூறினார். கையில் நரம்பு சரியாக கிடைக்காமல், குத்திய ஊசியால், குழந்தை துடிப்பதை கண்டு இருவரும் துடித்தனர்.

இரண்டு நாள் ஆகியும், வயிற்றுப்போக்கு நிற்கவே இல்லை.

குழந்தையை பார்க்க வந்தவர்கள், 'இனியும் இவரிடம் காட்ட வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்...' என்றனர்.

குழந்தை நல மருத்துவர், குழந்தைக்கு ஊசி போட அடிக்கடி குத்தி காயப்படுத்த வேண்டாம் என்று, கையில் ஊசியை ஏற்றி நகராமல் இருக்க, 'பேண்டேஜ்' போட்டு விட்டார். 'யூரின் கல்சர்' மற்றும் 'மோஷன் கல்சர் டெஸ்ட்'டுக்கு எழுதி கொடுத்தார். 'ஸ்கேன்' எடுக்க கூறினார்.

பணம்தான் தண்ணீராக செலவானதே தவிர, குழந்தையின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு வாரமாக, அழக்கூட தெம்பில்லாமல் சோர்ந்து போனான், விக்னேஷ்.

காலையில், உமா எழுந்திருக்கும்போதே, எழுந்து விடுவான், விக்னேஷ். அதன்பின், சமையலுக்கு துருவி வைத்த தேங்காயை துாக்கி தண்ணியிலே போடுவான். நறுக்கி வைத்திருக்கும் காயை எடுத்து, குப்பை கூடையில் போடுவான்.

அடுப்பு பக்கத்தில் வந்து சூடான பாத்திரங்கள் எதையாவது இழுத்து, தன் மீது போட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தால், உமாவால் நிம்மதியாக சமையல் பண்ணவே முடியாது. வழக்கமாக அவனை கவனிப்பதே பெரிய வேலையாக இருக்கும்.

முன்பெல்லாம், காலை, 8:00 மணி வரை, நிதானமாக துாங்கி எழுந்து ஆபீசுக்கு போவான், சரவணன். இப்போது, விக்னேஷை கவனிப்பதற்காகவே, தன் காலை துாக்கத்தை தியாகம் செய்தான். அதற்கு தயங்கினால், அன்றைக்கான சாப்பாட்டையும் தியாகம் செய்ய வேண்டுமே...

அதனால், காலையில், விக்னேஷை கவனிக்கும் வேலை அவனுடையது. சரவணன் வேலைக்கு கிளம்பும் முன்பே, சமையல் பண்ணி, பாத்திரம் தேய்த்து வைத்து விடுவாள், உமா. பகலில், விக்னேஷ் துாங்கும்போது, 'மிஷினில்' துணியை போட்டு எடுத்துவிடுவாள்.

மற்றபடி, பகல் முழுவதும் அவனை மேய்ப்பதே பெரிய வேலையாக இருக்கும். ஒரு நிமிஷம் ஒரு இடத்தில் உட்கார மாட்டான். துறுதுறு என, வீடு முழுக்க சுற்றிக் கொண்டே இருப்பான்.

அப்படிப்பட்ட பையன், போட்ட இடத்தில், போட்ட மாதிரி படுத்துக் கிடப்பதை பார்க்கும்போது, ஈரக்குலையை பிசைவது மாதிரி இருக்கிறது.

என்ன செய்வது என்றே தெரியவில்லை. கண்ணில் நீர் வழிய, சோகத்தோடு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

'இந்த ஊரில், குழந்தைகளுக்கென்று புகழ்பெற்ற டாக்டர், இவர் தான். இவரிடம் வந்து, இரண்டு நாட்களாகி விட்டது. ஆனால், குழந்தை நிலை அப்படியே தான் இருக்கிறது. இனி, என்ன செய்வது, எங்கே துாக்கிட்டு போவது...' என்று நினைத்தபடி, துாங்கும் குழந்தையை பார்த்தவாறு இருந்தான், சரவணன்.

பக்கத்து அறையில், 'அட்மிட்' ஆகியிருந்த பேத்தியை பார்த்துக் கொள்ள வந்த பாட்டி, இரண்டு நாட்களாக, இவர்களை பார்த்து விட்டு, குழந்தைக்கு என்னவென்று விசாரிக்க வந்தாள்.

அந்த காலத்து மனுஷி, அந்த பாட்டி. யாருக்காவது எதாவது என்றால், ஓடிப்போய் உதவும் கிராமத்து மனுஷி. அதனால், இவர்கள் கூப்பிடாமல் வந்துவிட்டார்.

''என்ன தாயி... பிள்ளைக்கு உடம்பு சரியில்லையா, என்ன பண்ணுது...'' என்று கேட்டு விட்டு, அவராகவே தொடர்ந்தார்...

''எம் பேத்திக்கு ரெண்டு நாளா காய்ச்சல்னு, இங்க சேர்த்துருக்கோம். நிலவேம்பு கஷாயம் வச்சு குடிச்சா போதும், எப்பேர்பட்ட காய்ச்சலும் சரியாயிடும். ஆனா, படிச்ச

பசங்க அதக் கேட்டாதானே... அவங்களுக்கு, மருந்து, மாத்திரை சாப்பிட்டா தான், சரியாகும்கிற நினைப்பு.

''நம்ம பேச்சை யார் கேக்கப் போறா... சரி, அவுங்க இஷ்டப்படியே பண்ணட்டும்ன்னு விட்டுட்டேன். ஆமா, நீங்க, ரெண்டு நாளா இங்க இருக்கீங்க போலிருக்கு. ஆனா, உங்க ரெண்டு பேரு முகமும் ரொம்ப வாடிக் கிடக்குதே. என்னப்பா விஷயம்,'' என்று, வாஞ்சையுடன் கேட்டார்.

யாரிடமாவது சொன்னால், கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என நினைத்து, ''ஒரு வாரமா, பிள்ளைக்கு வயத்தால போயிகிட்டு இருக்கு. என்ன மருந்து கொடுத்தும் சரியாகலை. எப்ப பார்த்தாலும் துறுதுறுன்னு விளையாடிகிட்டு இருக்கிற பையன், இப்படி வாடி வதங்கி கெடக்கிறதை பார்க்க, மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்று, கண்ணில் நீர் வழிய சொல்லி முடித்தாள், உமா.

குழந்தையின் அருகே வந்த பாட்டி, வயிற்றை தொட்டு, லேசாக தட்டி பார்த்தாள்.

''குழந்தைக்கு ஒண்ணுமில்ல, லேசான குடலேத்தம் தான். இப்ப என் பையனும், மருமகளும் வந்துடுவாங்க. அவங்க வந்த பிறகு, வீட்டுல போய் நான் ஒரு மருந்து எடுத்து வர்றேன். அதை கொடுத்தா, நாளைக்கே எழுந்திரிச்சு விளையாடுவான் பாரு,'' என்று சொல்லி சென்றவர், ஏதோ மருந்து எடுத்து வந்தார்.

குழந்தையை துாக்கி, வயிற்றை லேசாக நீவி விட்டு, எடுத்து வந்த மருந்தை, சங்கில் புகட்டி விட்டார்.

அந்த பாட்டி வைத்தியத்தின் மீது, கொஞ்சமும் நம்பிக்கை இல்லை, உமாவிற்கு.

'ஊரிலேயே பெரிய டாக்டர். அவராலயே என்ன பிரச்னைன்னு கண்டுபிடிக்க முடியலை. கையெழுத்து போட தெரியாத இவுங்க கொடுக்குற மருந்துல குணமாயிடுமாம்...' என்ற, அலட்சிய மனப்பாங்கு இருந்தது. இருப்பினும், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருந்ததால், அவர் மருந்து கொடுப்பதை தடுக்கவில்லை.

ஆச்சரியம். அதன்பின், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நின்று விட்டது. மறுநாள், உடல் கொஞ்சம் தளர்ச்சியாக இருந்தாலும், முகத்தில் தெளிவு ஏற்பட, விளையாட ஆரம்பித்தான்.

''பாட்டி... என்ன மருந்து கொடுத்தீங்க... பெரிய பெரிய டாக்டரெல்லாம் பார்த்து சரியாகாத வியாதி... நீங்க கொடுத்த மருந்துக்கு உடனே சரியாகி விட்டதே,'' என்றாள், ஆச்சரியத்துடன் உமா.

''பெரிய மருந்து ஒண்ணும் கொடுக்கல. குழந்தைக்கு, லேசா குடல் ஏறியிருந்தது. அதை நீவி சரி பண்ணினேன். அப்புறம் ஓமத்தை பொடி பண்ணி, நீர் மோரில் போட்டு கொடுத்தேன். நாங்களெல்லாம் சொன்னா நீங்க கேட்க மாட்டீங்க.

''பெரிய பெரிய டாக்டர்கிட்ட போய் துட்டை கொட்டினாதான் உங்களுக்கு நிம்மதியா இருக்கும். ஆனாலும், குழந்தை வாடி, வதங்கி கெடக்கிறதை பார்க்க மனசில்லாம தான், இந்த மருந்தை கொடுத்தேன்,'' என்று, கிளம்பினார், பாட்டி.

'இவங்க மாதிரி பெரியவங்ககிட்ட, இந்த மாதிரி எவ்வளவோ பொக்கிஷங்கள் மறைஞ்சு கெடக்குது. அருமை தெரியாம, இவங்களை நாம முதியோர் இல்லத்துல தள்ளி விட்டுடுறோம். 'கொரோனா' முடிஞ்சு, பஸ்செல்லாம் ஓட ஆரம்பிச்ச பிறகு, ஊரில் இருக்கிற, மாமியாரை அழைத்து வந்து வெச்சுக்கணும்'ன்னு, முடிவெடுத்தாள், உமா.

அழகர்






      Dinamalar
      Follow us