தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

அன்று காலை, 11:30 மணி.

சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக, முதல்வர் அறிவித்திருந்தார்.

ஆட்டோவில் அலுவலக வாசலில் வந்திறங்கினார், லென்ஸ் மாமா.

'என்னாச்சு மாமா, உங்க வண்டி...' என்றேன்.

'மணி... தபால் ஆபீசிலிருந்து இன்றைய தபால்களை எடுத்து வந்து விட்டாயா... எல்லாருக்கும் டீ கொடுத்து விட்டாயா...' என்றார்.

'எல்லாம் ஆச்சு மாமா...' என்றேன்.

'சரி... சரி... கிளம்பு, சின்னதா, 'சிட்டி ரவுண்டு' போய்ட்டு வருவோம்...' என்றார்.

'ஐயோ மாமா, 'கொரோனா' பரவல் அதிகரிச்சிருக்கு. இப்ப எதுக்கு, 'ரிஸ்க்' எடுக்கறீங்க...'

'அனைத்து முன்னெச்சரிக்கையோட தான் போறோம். சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி இருக்காங்க இல்லையா... வா... போய் ஊர் எப்படி இருக்கிறது என்று பார்த்துட்டு வருவோம்...' என்றார்.

'இனி மறுத்தால் விடப் போறதில்லை...' என்று, 'மாஸ்க்' மற்றும் கையுறை அணிந்து, அவருடன் புறப்பட்டேன்.

அவர் வந்த ஆட்டோ வாசலில் நின்றிருந்தது. தன் கேமரா பை

சகிதம் ஆட்டோ ஏறினார், லென்ஸ்;

நானும் தான்.

ஆட்டோ, 'சானிடைசர்' தெளித்து, சுத்தமாக இருந்தது. சின்ன, 'சானிடைசர்' பாட்டில் ஒன்றும், ஆட்டோவின் உள் கம்பியில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. டிரைவர் சீட்டுக்கும், பின்புறம் இருக்கும் சீட்டிற்கும் இடையில், மெல்லிய, 'பிளாஸ்டிக் ஷீட்' கட்டப்பட்டிருந்தது. டிரைவரும், 'மாஸ்க்' மற்றும் கையுறை அணிந்திருந்தார்.

நாங்கள் ஏறி அமர்ந்ததும், ஆட்டோவை கிளப்பினார். அண்ணாசாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி பயணித்தது, ஆட்டோ. வழியெங்கும் மக்கள் வெள்ளம், பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

'மணி... இவர்களில் எத்தனை பேர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர் என்று பார்...' என்றார்.

பெண்களில், 99 சதவீதம் பேர், 'மாஸ்க்' அணிந்திருந்தனர். தங்களுடன் வந்த குழந்தைகளுக்கும், 'மாஸ்க்' அணிவித்து அழைத்து சென்றனர். ஆண்களில், வயதானவர்கள், 'மாஸ்க்' உடன் கையுறையும் அணிந்து இடைவெளி விட்டு நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

ஆனால், 25 - 50 வயதுடைய ஆண்களில் பெரும்பாலோர், 'எனக்கு எதுவும் வந்துவிடாது...' என்ற அலட்சியத்துடன் இருப்பது தெரிந்தது. அதில் சிலர், 'மாஸ்க்' அணிந்திருந்தாலும், கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

கூட்டமாக இருந்த டீக்கடை ஒன்றின் முன், ஆட்டோவை நிறுத்த சொன்னார், லென்ஸ்.

எங்களுக்கு டீ வாங்கி வர, ஆட்டோ டிரைவர் எழுந்து சென்று விட, அங்கிருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன்.

பெஞ்ச் மீது அமர்ந்திருந்த, நடுத்தர வயதுடைய ஒருவர், பக்கத்தில் இருந்தவரிடம், 'கொரோனாவில் இருந்து தப்பிக்க, அரசு எவ்வளவு சொன்னாலும், இந்த ஜனங்க, கேட்கற மாதிரி இல்லை. இத பாரு... ஒரே பைக்கில் மூன்று விடலைகள் நெருக்கி அடித்தபடி வர்றாங்க. இதுகளுக்கு யார் அறிவுரை சொல்றது?' என்று புலம்பினார்.

அது, அந்த இளைஞர் ஒருவர் காதில் விழுந்து விட, நேராக அந்த பெரியவரிடம் வந்து, 'கருத்து கந்தசாமி மாதிரி, அறிவுரை சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, நீங்க கழுத்தில் தொங்க விட்டிருக்கிற, 'மாஸ்க்'கை எடுத்து மூக்குக்கும், வாய்க்கும் சேர்த்த மாதிரி இழுத்து மூடுங்க...'

என்று சொல்ல, அங்கு, 'கொல்'லென சிரிப்பொலி எழுந்தது.

அங்கிருந்து கிளம்பி, ஆலந்துார் நோக்கி கிளம்பினோம்.

வழியில் ஆங்காங்கு தெருவோரம் சிறுநீர் கழித்தபடியும், மொபைல் போனில் பேசியபடியும், இடை இடையே, தெருவில் எச்சில் துப்பிக் கொண்டும் சென்றனர், பொதுமக்கள்.

அரசு துறை சார்ந்த, அலுவலகம் ஒன்றின் முன், மக்கள் கூட்டம், கையில் பைலை வைத்தபடி உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தனர். அங்கிருந்த இருக்கையில், இடைவெளியின்றி சிலர் அமர்ந்தும், மரத்தடியில் கூட்டம் கூட்டமுமாக நின்றிருந்தனர்.

'போதும் மாமா... திரும்பிடலாம். மக்களுக்கு இன்னும் போதிய விழிப்புணர்ச்சி ஏற்படலையோன்னு தோணுது...' என்றேன், வருத்தத்துடன்.

மாமாவும் இறுகிய முகத்துடன் காணப்பட, அலுவலகம் நோக்கி திரும்பியது, ஆட்டோ.



நம் அலுவலக நுாலகத்திலிருந்து, எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய, 'ஜூலியஸ் சீசர்' என்ற நுாலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து ஒரு பகுதி இதோ:

ரோமானிய சட்டமுறை, உலகின் பல நாடுகளின் இன்றைய நீதி, நியாய முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இதற்கு ஆரம்பப் புள்ளி வைத்தது, ரோமானிய சக்கரவர்த்தி சீஸர்.

சீஸர் வகுத்த, 12 சட்ட விதிகளில் உள்ள, முக்கிய ஷரத்துக்கள் சுருக்கமாக:

1.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு வந்தால், நீங்கள் கட்டாயம் போயே ஆகவேண்டும். தவறினால், நீங்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுவீர்கள்.

2. உங்கள் வழக்கில் சாட்சிகளாக யாரேனும் தேவைப்பட்டு, அவர் வராவிட்டால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் அவர் வீட்டின் முன்னால் போய், குரல் எழுப்பி, அவரை அழைக்கலாம்

3. கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய, 30 நாட்களுக்கும் கடன் தொகையை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

4. உடல் ஊனத்தோடு பிறக்கும் குழந்தைகளை கொன்று விடவேண்டியது, பெற்றோரின் கடமை.

5. வயது வந்தாலும், ஆண்களின் பாதுகாப்பில் தான், பெண்கள் இருக்க வேண்டும்.

6. கணவனிடமிருந்து விடுதலை பெற விரும்பும் பெண், ஒரு ஆண்டில், மூன்று நாட்களாவது அவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும்.

7. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மரம், காற்றடித்து, உங்கள் பகுதியில் விழுந்தால், அந்த மரத்தை அவர்தான் எடுக்க வேண்டும். அவர் அப்படி செய்யாவிட்டால், நீங்கள், நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.

8. இரவு நேரங்களில் கூட்டங்கள் நடத்தும் உரிமை யாருக்கும் கிடையாது.

9. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை பெறுவர்.

10. இறந்தவர்களின் உடலை நகர எல்லைக்கு வெளியே தான் புதைக்கவோ, எரிக்கவோ செய்யலாம்.

11. குடிமக்கள் இரண்டு ஜாதிகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். பிரபு குடும்பத்தினரும், நிலச்சுவான்தார்களும், பெட்ரீஷியன்கள் என்று அழைக்கப்பட்டனர். எஞ்சிய அனைவரும், அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், ப்ளீபியன்கள் என்று குறிப்பிடப்படுபவர், ஜாதி மாறி திருமணங்கள் செய்து கொள்ளக் கூடாது.

12. பெரும்பாலான மக்களின் கருத்து, சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.

- பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன், சட்ட திட்டங்களை வகுத்துள்ளார், சீசர். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us