PUBLISHED ON : அக் 11, 2020

* கே. சஞ்சீவிபாரதி, அவ்வையார்பாளையம், ஈரோடு: ரஜினிக்கு விழும் ஓட்டு யாருடையதாக இருக்கும்?
ஊழலற்ற ஆட்சியை விரும்புவர்களின் ஓட்டாகவும், திராவிட கட்சிகளை வெறுப்பவர்கள் ஓட்டாகவும், அக்கட்சிகளின் கூட்டணி கட்சிகளை தீண்டாதவர்களின் ஓட்டாகவும் இருக்கும்!
சி. ரகுபதி, திருவண்ணாமலை: தனக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என, ஆண்கள் விரும்புகின்றனர்?
அழகானவளாக, அமைதியானவளாக, எதிர்த்து பேசாதவளாக, தன் பேச்சை மட்டுமே கேட்பவளாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். ஆனால், எல்லா ஆண்களுக்கும் இவ்வாய்ப்பு கிடைப்பதில்லையே!
வி. மகாதேவன், சென்னை: சீனா - பாகிஸ்தானுடன் தகராறு, சண்டை... இந்த உலகத்தில் பயம் இல்லாத இடம் எது?
பயமே இல்லாத இடம் தாயின் மடி! சிறு வயதில் தவழ்ந்து மகிழ்ந்தோமே அதே இடம் தான் பயம் இல்லாத இடம்!
* கே.கே. வெங்கடேசன், செங்கல்பட்டு: காமராஜரைப் போன்ற முதலமைச்சரை விரும்பும் மக்கள், அவர் காலத்தில் இருந்த வாக்காளர் போல், நியாயமாக வாக்களிப்பார்களா?
கொடுப்பதை ஏன் மறுக்க வேண்டும்? அதை வாங்கிக் கொண்டு, ஒழுக்கமுள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாமே!
முருகு. செல்வகுமார், சென்னை: 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' எனப் பேசும் தமிழக காங்கிரசின், எதிர்காலத் திட்டம் தான் என்ன?
தி.மு.க.,வின் வாலைப் பிடித்துக் கொண்டு, '10 சீட் தா... 20 சீட் தா...' என்று அலைவது தான் அவர்கள் தலையெழுத்து. இனி, தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை!
*எஸ். கதிர், புதுச்சேரி: 'நுாறு நாள் வேலைத் திட்டத்தால் தான், ஆட்கள் கிடைக்காமல் விவசாயம் அழிந்தது...' என்று, நண்பர் ஒருவர் கூறுகிறாரே...
நுாற்றுக்கு நுாறு உண்மை. இத்திட்டங்கள் செயல்படும் இடங்களைச் சென்று பாருங்கள்... இத்திட்டத்தில் வேலை செய்வோர், வேலை செய்யாமல், அத்திட்டத்தின் அருகே உள்ள மர நிழலில் அரட்டை அடிப்பதும், துாங்குவதுமாக இருப்பதைக் காணலாம். இதனால், அத்திட்டமும் செயல்படாமல், விவசாயத்திற்கும் ஆள் கிடைக்காமல் போய் விட்டது. இத்திட்டத்தின் அதிகாரிகள் பாக்கெட்டில் பணம் கொட்டுகிறது.
இந்த நிலையில், '100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 200 நாள் ஆக்க வேண்டும்...' என, பா.ம.க., ராமதாஸ் போன்றோர் கோரிக்கை வைப்பது அநியாயமாக இருக்கிறது!
எஸ். சுந்தர், திருச்சி: தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதே!
நல்ல புத்தி போகும் வரை! அப்புத்தி இல்லாதவர்கள் இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டனரே... இவர்கள் அழியப்போவதும் இல்லை; பிச்சை நிற்கப்போவதும் இல்லை!
