PUBLISHED ON : அக் 11, 2020

''என்னாம்மே... எப்படி கீரே... நல்லா இருக்குரீயா?'' கீரை விற்கும், தனம் கேட்க, பதிலே சொல்லாமல், முகத்தை திருப்பிப் போனாள், பூக்காரி கனகம்.
''உன்னத்தாமே கேக்குறேன்... இன்னா, காதுல வாங்காம போய்கினேகீரே,'' திரும்பவும் வலிய பேச்சுக் கொடுத்த, தனத்தை, கொஞ்சமும் மதிக்காமல், வீம்பாக நடந்து சென்றாள், கனகம்.
''ஏம்மா தனம்... அதுதான் உன்னாண்ட பேசாம மூஞ்ச திருப்பிக்கிட்டு போவுதே... நீ எதுக்கு சொம்மா கூவிக்கினு கீரே,'' என்று, தன் கரகரப்பான குரலில் அதட்டினார், இரண்டு கடை தள்ளி காய் விற்றுக்கொண்டிருந்தவர்.
''அண்ணாத்தே... நீயே சொல்லு, நாம பொழப்பு ஓட்டுறதே, இந்த ரோட்டோர கடையை நம்பிதானே... இந்த லட்சணத்துல, நாலு பேருக்கு ஒதவி பண்ற நெலமையிலா நாம இருக்கோம்...
''அவளோட அக்கா மவளுக்கு, அடுத்த வாரம் கன்னாலமாம். அவ மவனை அனுப்பி, என்னாண்ட துட்டு கேட்டா... ஏங்கிட்ட ஏது துட்டு, நானே வூட்டு வாடகை கட்ட துட்டு இல்லாம, என் வூட்டுக்காரன் ஜோபிலேருந்து, 50 - 100 பொறுக்கி, வூட்டு வாடகைய கட்டிட்டு வர்றேன், அண்ணாத்தே...
''இந்த வாரம், என் சின்ன பய சேர்த்து வச்சிருந்த உண்டியல ஒடைச்சு, வார தண்டலை கட்டி முடிச்சேன். என் நெலமை இப்படி இருக்க, நான் காசு கொடுக்கலேன்னு என்னாண்ட பேச மாட்டாளாம்.
''ஆத்ர அவசரத்துக்கு உதவுறவளாச்சேன்னு, மனசு கேட்காம, மூக்குத்தியை அடமானம் வச்சு, 1,000 ரூபா எடுத்துட்டு வந்தேன்; அத கொடுக்கலான்னு கூப்புட்டா, காதுல வாங்காம போய்கினேகீரா.''
''டீ... டீ... மசாலா டீ...'' என்ற படி, தனத்தின் கடைக்கு எதிரில் சைக்கிளை நிறுத்தி, பிளாஸ்கில் இருந்த சூடான டீயை கப்பில் ஊற்றி வந்து நீட்டினான், டீ விற்பனை செய்யும் கோபால்.
''கோபாலு, எனக்கு ஒரு டீ குடு... அண்ணாத்தே, உனக்கு டீ வேணுமா... அவருக்கு ஒண்ணு குடு,'' என்றாள், தனம்.
அந்த நேரத்தில், போலீஸ் வாகனம் ஒன்று செல்ல, அதன்பின்னே பைக்கில் சென்ற டிராபிக் கான்ஸ்டபிள், 'சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள், உடனடியாக அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...' என்று, 'மைக்'கில் அறிவித்தபடி சென்றார்.
''பேமானிக... எத செரியா பண்ணுறானுவளோ இல்லியோ... மாசமானா தவறாம மாமூல் வாங்க வந்துடுறானுங்க... ஹும்... இந்த போலீஸ்காரங்க தொல்லை தாங்க முடியல... என்னிக்கு தான் இதுக்கெல்லாம் விடிவு காலம் பொறக்குமோ...
''ஒர்த்தன், ரெண்டு பேருக்கா தெண்டம் அழுவுறோம்... கவுன்சிலர்க, கார்ப்பரேஷன் ஆபீசருங்க, அப்புறம் இந்த டிராபிக் போலீஸ், லா அண்ட் ஆர்டர் போலீஸ்ன்னு, எல்லாருக்குமுல்ல மாமூல் கொடுக்க வேண்டியிருக்கு,'' என, தள்ளுவண்டியில், பலாப் பழம் விற்றுக்கொண்டிருந்தவர், வேதனையோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
''அண்ணே... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... மாசா மாசம் மாமூல் வாங்க வருவாரே, ஏரியா இன்ஸ்பெக்டர், அவரை, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்; இன்னிக்கு, புது இன்ஸ்பெக்டர் வந்திருக்காராம்... ஆளப் பாத்தா, நல்ல மனுஷனா தெரியறாராம்; மாமூல் வாங்கற ஆள் மாதிரியில்லியாம்...
''அது மட்டும் நெசமாயிருந்துட்டா, இனிமே, நாம மாசா மாசம் மாமூல் கொடுக்கணுங்குற அவசியம் இல்லை... அதுக்கோசரம் கவலைப்படணுங்குற அவசியமும் இல்லை...'' கோபால் சொல்லச் சொல்ல, அந்த செய்தியை காதில் வாங்கிய அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
'ஏண்டாப்பா நெசமாலுமா சொல்றே... அப்போ, மாசா மாசம், போலீஸ்காரருக்கு மாமூல் கொடுக்க தேவையில்லையா... அப்பாடா, இப்ப தான் நிம்மதியா இருக்கு. எங்க ஒளிச்சு மறைச்சு வைத்திருந்தாலும் புடுங்கிட்டு போயிடுவாரு, அந்த இன்ஸ்பெக்டரு.
'ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வேற வழி இல்லாம துட்டு குடுத்தோம். இனி, அந்த துட்டை மிச்சப்படுத்தி, வீட்டு செலவுக்கு வெச்சுக்கலாம்...'
ஆளாளுக்கு தங்கள் மனக்குறையை சொல்லி ஆறுதல்படுத்திக் கொண்டனர்.
அடுத்த நாள் -
எப்போதும் போல கடை மூடும் நேரத்திற்கு, போலீஸ் ஜீப் ஒன்று
வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், அங்கிருந்த அனைவரையும் கையை காட்டி, அருகில் வருமாறு அழைத்தார்.
கடைக்காரர்களெல்லாம் குழப்பத்தோடு வந்து குனிந்தவாறு நின்றனர். ஒரு சிலர், கடையை ஏறக் கட்டிக் கொண்டிருந்தனர்.
''ஏய்... கடையெல்லாம் அப்புறமா ஏறக் கட்டிக்கலாம்... எல்லாரும் இப்படி கொஞ்சம் வாங்க... த பாருங்க, ஏற்கனவே இருந்த இன்ஸ்பெக்டர் மாற்றலாகி போயிட்டாரு; இனிமே, இந்த சரகத்திற்கு நான் தான் இன்ஸ்பெக்டர்,'' என்று சொல்லி, எல்லார் முகத்தையும் உற்றுப் பார்த்தார், புது இன்ஸ்பெக்டர்.
மந்திரித்து விட்டது போல, எல்லாரும் அவரையே நிலைக்குத்தி பார்த்தனர்.
''நீங்க, இதுவரைக்கும், அந்த இன்ஸ்பெக்டருக்கு என்ன கொடுத்தீங்க, எப்ப கொடுத்தீங்க அதெல்லாம் எனக்கு தெரியாது; தெரிய வேண்டிய அவசியமுமில்லை... மாசத்துக்கு ரெண்டு முறை, கரெக்டா எனக்கு துட்டு வந்துடணும்...
''அஞ்சாம் தேதி ஒரு தபாவும், 15ம் தேதி ஒரு தபாவும். கான்ஸ்டபிளை அனுப்புவேன். அப்ப, பழைய இன்ஸ்பெக்டருக்கு எவ்வளவு கொடுத்தீங்களோ அது கூட, 500 ரூபா சேர்த்து கொடுக்கணும்... என்ன?''
அதிர்ந்து போன அந்த ஏழை மக்கள், வேறு வழியின்றி சோகமாய் தலையாட்டினர்.
''நல்லா மனசுல வச்சுக்கோங்க, மீறி எவனாவது கொடுக்க மாட்டேன்... அது, இதுன்னு முரண்டு பிடிச்சா, தயவு தாட்சண்யம் பார்க்காம, எல்லா கடைகளையும் அடிச்சு நொறுக்கி துவம்சம் பண்ணிருவேன் ஜாக்கிரதை,'' என்றார், புது இன்ஸ்பெக்டர்.
'நமக்கெல்லாம் விடிவு காலம் பொறந்திடுச்சு... புது இன்ஸ்பெக்டர் லஞ்சம், மாமூல் வாங்க மாட்டார். ரொம்ப நல்லவர்...' என, நினைத்து கொண்டிருந்த, அந்த ரோட்டோர வியாபாரிகள் அனைவரும், புது இன்ஸ்பெக்டரின் பேச்சைக் கேட்டு, சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
'இதுக்கு பழைய இன்ஸ்பெக்டரே தேவலாம் போலிருக்கே... அவரு, மாசம் ஒரு தரம் தான் மாமூல் வசூல் பண்ணினார்; இவரு, ரெண்டு தரம்ல்ல கேட்கறாரு...' என்று, தங்களுக்குள் முணுமுணுக்க துவங்கினர்.
அதன்பின், தலைவிதியை நொந்தபடியே, மாதம் இருமுறை, மாமூலை தவறாமல் கொடுத்தனர்.
புது இன்ஸ்பெக்டர் அனுப்பும் கான்ஸ்டபிள், மனசாட்சியே இல்லாமல் கை நிறைய வாங்கி, யார் எவ்வளவு கொடுத்தனர் என, ஒரு நோட்டு போட்டு எழுதி, எடுத்துப் போய் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.
இப்படியே, யாதொரு மாற்றமும் இன்றி கடந்து சென்றது, மாதங்கள்.
இதற்கிடையே இரண்டு கட்சிக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டதால், கடையடைப்பு. தொடர்ந்து நாலைந்து நாட்களாக கடையை திறக்க முடியவில்லை.
ஆறாவது நாள், கடை திறக்க போன போது தான், அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது.
பக்கத்திலிருந்த பெரிய துணிக்கடை ஒன்றில், மின் கசிவு ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் தீக்கிரையாகி இருந்தது. அதில், இவர்களுடைய சின்ன சின்ன கடைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இருந்தன.
'எல்லாமே போயிடுச்சு... ஒரு ரூபாய்க்கு கூட வழியில்லை... இனி, எப்படி பொழப்பு நடத்துறது, குடும்பத்தை எப்படி காப்பாத்துவது...' என்று, தவிப்போடு தெருவில் நின்றனர்.
அப்போது, புது இன்ஸ்பெக்டரின் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி, அவர்களை நோக்கி வந்தார், இன்ஸ்பெக்டர்.
''அடப்பாவி... இந்த நெலமையிலும் நம்மகிட்ட மாமூல் கேட்டு வந்திருக்கான்னா, இவனெல்லாம் மனுஷனா... இல்லை, பணத்தாசை பிடிச்ச பிசாசா...'' தன் ஆதங்கத்தை பெரிய குரலில் சொன்னார், காய் விற்றவர்.
மற்றவர்கள், அவரை அடக்கி, பயத்தோடு நின்றனர்.
எதிரில் வந்து நின்ற புது இன்ஸ்பெக்டர், அவர்களையும், எரிந்து சாம்பல் மேடாய் கிடக்கும் கடைகளை பார்த்து, உதட்டைச் சுளித்தார்.
கூட்டத்தின் முன் பகுதியிலிருந்த பூக்காரி, கனகம், பொசுக்கென்று அழ ஆரம்பித்தாள்.
''ஏம்மா... எதுக்கு அழறே, இந்த நேரத்துல தான் எல்லாரும் தைரியமா இருக்கணும். இது மாதிரி எதிர்பாராத விபத்து நடக்கதான் செய்யும். எல்லாத்துக்கும் நாம தயாரா இருக்கணும். அதுக்காக மனசை தளர விடக்கூடாது. நம்மளால முடியும்ன்னு, தைரியமா நிமிர்ந்து நிற்கணும்.
''உங்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தேவையோ, அந்த பணத்தை நான் கொடுக்கிறேன். பற்றாக்குறைக்கு, அரசிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடா வாங்கித் தரேன். அதனால, திரும்பவும் நீங்க கடைகள் வைக்கலாம்; அதுமட்டுமில்ல, அரசிடமிருந்து, உங்களுக்கு கடை நடத்துவதற்கான உரிமம் வாங்கித் தரேன்,'' என்றார், புது இன்ஸ்பெக்டர்.
கூடியிருந்த மக்களின் முகங்களில் குழப்பமும், சந்தோஷமும் ஒருசேர எழுந்தது.
''நீங்க எல்லாரும் என்னை, லஞ்சம் வாங்குற போலீசுன்னு நினைச்சுட்டு இருக்கீங்க... ஆனா, நான் உங்ககிட்ட வாங்குன பணத்தை எல்லாம் அப்படியே, 'சேவிங்ஸ் அக்கவுண்ட்'ல போட்டு வச்சிருக்கேன். எதுக்காக... அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கத்தான்.
''நான் மட்டும் கண்டிப்போட மாமூல் வாங்காம இருந்திருந்தா, இந்த நஷ்டத்தை உங்களால ஈடு கட்டியிருக்க முடியாது. அதனால, நான் என்ன சொல்றேன்னா, ஒவ்வொரு முறையும் இதே மாதிரி என்னால உங்களுக்கு உதவி செய்ய முடியாது.
''இனிமேல் நீங்கள், உங்களுக்கென்று ஒரு, 'சேவிங்ஸ் அக்கவுண்ட்' ஆரம்பிச்சு, பணத்தை சேமிக்க துவங்குங்கள். சிறு தொழில் செய்பவர்களுக்கு, வங்கியில் கடனுதவி தர்றாங்க, அதை வாங்கி முறையா ஒரு கடையை அமர்த்தி, அதுல உங்க தொழிலை ஆரம்பிப்பது நல்லது.
''இந்த ரோட்டோர நடை பாதை கடைகள, கொஞ்ச நாள்ல அப்புறப்படுத்திடுவாங்க. அப்புறம் உங்க எதிர்காலம் என்ன ஆவுறது... நீங்க யாரை நம்பியும் வாழ முடியாது...
''அது மட்டுமில்ல, குடும்பம்ன்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும். ஆனாலும், கொஞ்சமாவது சேமிக்கணும். அப்ப தான் கஷ்ட காலத்துல அது நமக்கு கை கொடுக்கும்,'' என்று சொல்லவும், எல்லாரும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
மறுநாள் அந்த செய்தி, எல்லா பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளி வர, மக்கள் மத்தியில், காவல்துறை மீதிருந்த மதிப்பும், மரியாதையும் கூடியது.
அதே நேரம், அந்த செய்தியை தன் வீட்டு, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தார், 'டிரான்ஸ்பர்' ஆகிப்போன, முன்னாள் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.
அவருடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது மகள், 'பட பட' வென கை தட்டி, ''இன்ஸ்பெக்டர்னா இப்படி தான் இருக்கணும். இவர், சூப்பரான இன்ஸ்பெக்டர்,'' என்று கூவினாள்.
உள்ளுக்குள் வெட்கினார், கருணாகரன்.
டெய்சி மாறன்
வயது: 44. இளங்கலை கணிதம். சொந்த ஊர்: கொள்ளிடம். வசிப்பது, சென்னை.
பள்ளி, கல்லுாரி நாட்களில் சிறுகதை மற்றும் கவிதை எழுத ஆரம்பித்தேன். பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தற்போது, நாவல்களும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
'தினமலர் - வாரமலர், டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டி'யில், முதல் மூன்று பரிசுகளில் ஒன்றை பெறவேண்டும் என்ற, என் முயற்சி, தற்போது வெற்றியடைந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 'தினமலர்' நிறுவனத்துக்கும், ஆசிரியர் குழுவிற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்!