
அடுத்த எம்.ஜி.ஆர்., விஜய்?
இதுவரை, விஜயை, வருங்கால முதல்வர், நாளைய முதல்வர் என்று, 'போஸ்டர்' வெளியிட்டு வந்த, அவரது ரசிகர்கள், தற்போது, அடுத்த எம்.ஜி.ஆராக சித்தரித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரைக்கார விஜய் ரசிகர்கள், தலைமை செயலக பின்னணியில், எம்.ஜி.ஆர்., 'கெட் - அப்'பில் அவரது, 'போஸ்டர்'களை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி விஜய் ரசிகர்களும், அதேபோன்ற, 'போஸ்டர்'களை வெளியிட்டு, 'அடுத்த எம்.ஜி.ஆர்., எங்கள் தளபதி தான்...' என்று, உரக்க குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, இந்த விவகாரம், ஆளும் கட்சி வட்டாரங்களில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
— சினிமா பொன்னையா.
மனைவிக்கு, ஆர்யா கொடுக்கும் பயிற்சி!
ஆர்யாவின் மனைவியான, நடிகை சாயிஷா, 'சோஷியல் மீடியா'வில், தான் உடற்பயிற்சி செய்வது, நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபத்தில், ஆர்யாவுடன் சேர்ந்து, 'பாக்ஸிங்' பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டு அதிர வைத்துள்ளார். காரணம், அடுத்தபடியாக, 'ஆக் ஷன்' கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். சாயிஷாவின் இந்த வீடியோவால், திருமணத்திற்கு பிறகும், அவரிடம் வெளிப்பட்ட, 'பவர்புல் எனர்ஜி'யைப் பார்த்து, சக நடிகையர், மிரண்டு நிற்கின்றனர். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா
குஷ்பு நிராகரிப்பு!
ரஜினியுடன், அண்ணாத்த படத்தில் நடித்து வரும், குஷ்பு, வேறு சில இயக்குனர்களிடமும், நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டபோது, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத, 'டம்மி'யான வேடங்களில் நடிக்க அழைத்தனர். அதையடுத்து, அந்த இயக்குனர்களுக்கு, தன் கடந்த கால சினிமாவை, 'ரிப்பீட்' செய்து காட்டிய, குஷ்பு, 'தமிழக ரசிகர்கள், எனக்கு கோவிலே கட்டினர். அப்படிப்பட்ட என்னைப் போய் கொசுறு கேரக்டர்களில் நடிக்க சொல்றீங்களே... புலி பசித்தாலும் புல்லை தின்னாது...' என்று, தம் கட்டி பேசி, அந்த படங்களை நிராகரித்து விட்டார். ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனை புளியங்காய் அறிய வேண்டும்!
— எலீசா
நிவேதா பெத்துராஜை உரிக்கும், டோலிவுட்!
ஆந்திரா ஆவக்காய் ஆகிவிட்ட, தமிழக நடிகையான, நிவேதா பெத்துராஜை, அங்குள்ள இயக்குனர்கள், படத்துக்குப் படம் தோலுரிக்கின்றனராம். ஆனால் அம்மணிக்கோ, உடம்பைக் காட்டுவதை விட, நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது தான், கொலப் பசியாக உள்ளதாம். அதனால், தன்னை, 'பிராய்லர்' கோழியாக உரிக்க வரிந்து கட்டும் இயக்குனர்களிடம், 'உரிக்கிறதெல்லாம் சரி, அப்படியே கொஞ்சம் நடிக்கிறதுக்கும் வாய்ப்பு கொடுத்தா நல்லாருக்கும்...' என்று நாசுக்காக கேட்டுள்ளார், நிவேதா. ஆனபோதும், 'நீயெல்லாம், அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே... இதுக்குத்தான் சரிப்பட்டு வருவே...' என்று, அவரை, உரிப்பதிலேயே குறியாக இருக்கின்றனராம், டோலிவுட் இயக்குனர்கள்! அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!
— எலீசா
'சிக்ஸ்பேக் ஹீரோ' ஆகும், புரோட்டா சூரி!
வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், 'ஹீரோ' அவதாரம் எடுக்கிறார், புரோட்டா சூரி. அதுவும் சாதாரண, 'ஹீரோ' அல்ல, 'சிக்ஸ்பேக் ஹீரோ!' இதற்காக, பயிற்சியாளர் மூலம், சில மாதங்களாக கடினமான பயிற்சி எடுத்து, இப்போது, 'சிக்ஸ்பேக் கெட் - அப்'பில் புரூஸ்லியாக உருமாறி நிற்கிறார். அதோடு, 'ஹீரோவாக, 'என்ட்ரி' கொடுக்கும் முதல் படத்திலேயே, 'மாஸ் ஹீரோ'கள் அளவுக்கு, கைக்கு, பத்து பேரை அலாக்காக துாக்கி அடித்து, பந்தாடி அதகளப்படுத்தப் போகிறேன்...' என்கிறார், சூரி.
— சினிமா பொன்னையா.
கறுப்புப்பூனை!
உச்ச நடிகரை விமர்சித்தவர்களுக்கு, காஞ்சனா நடிகர் தக்க பதிலடி கொடுத்து வந்ததால், மேற்படி நடிகர் துவங்கவிருக்கும் அரசியல் கட்சியில், அவரும் இடம்பெறுவார் என்று தான் கருதப்பட்டது. ஆனால், உச்ச நடிகரோ, தன்னைத் தேடி வந்து, பல நடிகர்- - நடிகைகளும் கட்சியில் பதவி கேட்டு நச்சரித்ததால், கடுப்பாகி விட்டார். அதையடுத்து, 'எந்த திரையுலகினருக்கும் கட்சியில் இடமில்லை...' என்று, கதவை இழுத்து மூடி விட்டார்.
இதனால், காஞ்சனா நடிகருக்கும் கட்சியில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 'சினிமாவைத் தொடர்ந்து, அடுத்து அரசியலிலும் பெரிய அளவில் கோலேச்சப் போகிறேன்...' என்று, 'பில்ட் - அப்' கொடுத்து வந்த காஞ்சனா நடிகர், தற்போது, அரசியல் என்று யாராவது பேச்செடுத்தாலே, 'கப்சிப்' ஆகி விடுகிறார். அதோடு உச்ச நடிகர் மீதும், மனதளவில் அதிருப்தியில் இருக்கிறாராம்.
'டேய், ராகவா... நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இருக்கிறத விட்டுட்டு, எதுக்குடா வேண்டாத வேலை பார்க்கிற... கல்லுாரி தேர்தலில், மாணவ தலைவனாக, உன்னோடு படிக்கும் மாணவன் நிற்கிறான் என்பதற்காக, அவனுக்காக பிரசாரம் செய்ய போகணுமா... அவன் உன்னையே எடுத்தெரிஞ்சு பேசிட்டு போறான்... இனியாவது உஷாரா இருந்துக்க...' என்று, தன் மகனுக்கு அறிவுறுத்தினார், அப்பா.
சினி துளிகள்!
* காஞ்சனா படத்தை ஹிந்தியில், லட்சுமிபாம் என்ற பெயரில், 'ரீ - மேக்' செய்துள்ள, ராகவா லாரன்ஸ், அடுத்தபடியாக, தமிழில் தான் இயக்கிய, 'ஹிட்' படங்களை, ஹிந்தியில், 'ரீ - மேக்' செய்யப் போகிறார்.
* தன் சம்பளத்தை, 100 கோடி ரூபாயாக உயர்த்தி, இந்திய நடிகர்களை அதிர வைத்துள்ளார், பாகுபலி நாயகன், பிரபாஸ்.
அவ்ளோதான்!