
பா - கே - ப
இந்த வாரம், சின்னச் சின்ன செய்திகள் மட்டுமே!
ஒருமேடையில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேச ஆரம்பித்தார். மேடையில் இருந்த ஒலி வாங்கி, அண்ணாதுரையை விட உயரமாக இருந்தது. அவரது பேச்சு யாருக்கும் கேட்கவில்லை.
இதை கவனித்த தொண்டர் ஒருவர், வேகமாக சென்று, மரத்தாலான உயரமான ஒரு பலகையை எடுத்து வைத்து, அண்ணாதுரையை அதன் மீது ஏறி நின்று பேசச் சொன்னார்.
பேச ஆரம்பித்தவர், 'நான் தொண்டர்களால் உயர்ந்தவன் என்று சொல்வர்; அது, உண்மையாகி விட்டது...' என்றவுடன், அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.
***
அமெரிக்க முன்னாள் அதிபர், ரொனால்ட் ரீகன், நடிகராக இருந்து, அமெரிக்க அதிபராக ஆனவர்.
அவர் நடிகராக இருந்தபோது, ஒரு படத்தில், அமெரிக்க அதிபர் வேடத்தில் நடிக்க, ஆட்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்திற்கு சென்ற ரீகன், 'அதிபராக நான் நடிக்கிறேன்...' என்று சொல்ல, 'நீ அதிபர் வேடத்திற்கு லாயக்கில்லை...' என வெளியேற்றியது, அந்த நிறுவனம்.
பின்னாளில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார் என்பது, வரலாறு.
***
நம் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர், இந்திய முன்னாள், பிரதமர், ராஜிவ்.
அவர் பயன்படுத்திய பேனாவின் பெயர், 'மான்ட் பிளாங்க்!' அதன் விலை ஒன்றும் அதிகமில்லை, நான்கு லட்சம் ரூபாய் தான்!
***
கடந்த, 1947ல், இந்திய பிரிவினையின்போது, 'இந்தியாவின் பூகோள அமைப்பு விசித்திரமாக இருக்கிறது. இரண்டு நாடுகளாக இருக்கும் இவை இன்னும், 25 ஆண்டுகளுக்குள், மூன்று நாடுகளாக பிரிந்து போவதற்கு வாய்ப்பு அதிகம்...' என்றாராம், மவுண்ட் பேட்டன் பிரபு.
அதன்படியே, 24 ஆண்டுகளில், மூன்றாவது நாடாக பங்களாதேஷ் உருவானது, சரித்திரச் சான்று.
***
ஒருமுறை, கல்லுாரியின் முத்தமிழ் விழாவுக்கு சென்றிருந்தார், கவிஞர் கண்ணதாசன்.
மாணவர் கூட்டம் அலைமோதியது.
'பெரியோர்களே, ஆசிரியர்களே, கல்லுாரி நிர்வாகத்தினரே மற்றும் பத்திரிகை யாளர்களே...' என, பேச்சை துவங்கினார், கண்ணதாசன்.
மாணவர் மத்தியிலோ, 'விழாவுக்கு அழைத்தது, நாம். நம்மை பற்றி சொல்லவில்லையே கண்ணதாசன்...' என்பதால், திடீர் சலசலப்பு.
காரணத்தை புரிந்துகொண்ட கண்ணதாசன், 'நான் முதலில் துவங்கும்போது சொன்னேனே, 'பெரியோர்களே' என்று, அது, மாணவர்களாகிய உங்களைத்தான்...' என்றார்.
பிறகு என்ன, அந்த அரங்கமே கண்ணதாசன் பேச்சுக்கு கட்டுண்டு கிடந்தது.
***
நாம் தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். ஆனால், எதையும், 'குடி' என்று சொல்வதில்லை.
மதுவை மட்டும் தான், 'குடி' என்கிறோம். காரணம், இது ஒன்று தான் உயிரை குடிக்கிறது; குடியை கெடுக்கிறது.
***
பெப்சி என்ற பெயர், 'டைஜஸ்ஷன்' - செரிமானம் என்ற, கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது.
ஹாஜிமூலா என்ற வர்த்தகப் பெயர், 'டைஜஸ்ஷன்' - செரிமானம் என்ற அர்த்தம் தரும், உருதுச் சொல்லிலிருந்து பிறந்தது.
கிவி என்ற ஷூ பாலிஷ் கம்பெனியின் உரிமையாளர், வில்லியம் ராம்சே. இந்த பெயர் வரக் காரணம், அவரது மனைவி, நியூசிலாந்துகாரர் (நியூசிலாந்து நாட்டு தேசியப் பறவை, கிவி).
ஜார்ஜ் ஈஸ்ட்மென், தன் போட்டோ பிலிம் கம்பெனிக்கு, தனக்கு பிடித்தமான பெயர் வரவேண்டுமென, ஆங்கில எழுத்தான, 'கே'ல் துவங்கி, 'கே'ல் முடிய வேண்டும் என்று நினைத்தார். அப்படி வைத்த பெயர் தான், கோடக் - KODAK.
'எக்ஸலன்ட் ஆக்சைட்' என்பதன் சுருக்கமான பெயரே, 'எக்சைட் பேட்டரி!'
***
கட்லெட் செய்யும்போது, காய் கலவையை உருட்டி, கரைத்த மைதா மாவில் தோய்த்து, பிறகு, ரஸ்க் அல்லது ரொட்டித் துாளில் பிரட்டி, சற்று நேரம் கழித்து காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். கட்லெட் உடையாமலும், ரஸ்க் துாள் உதிராமலும்
அழகாக வரும்.
* குடைமிளகாய், கத்திரிக்காய், கோவைக்காய்களில் பொடியை அடைத்து கறி செய்யும்போது, மசாலா பொடியுடன், மூன்று தேக்கரண்டி பொட்டுக் கடலை மாவை கலந்துவிட்டால், சுவையும் கூடும்; மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
***
ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழ்படுத்தி மேடை ஏற்றினார், நாடகத் தந்தை, சம்பந்த முதலியார். அவற்றுள், 'ஏஸ் யூ லைக் இட்' என்ற நாடகமும் ஒன்று. அதற்கு தமிழில், 'விரும்பிய விதமே' என்று பெயரிட்டார்.
'ரோமியோ ஜூலியட்'டுக்கு, 'வாணிபுரத்து வணிகன்' என்றும், 'மர்சென்ட் ஆப் வெனிஸ்'க்கு, 'சாரங்கி' என்றும், 'ஹாம்லெட்'க்கு, 'அமலாதித்தன்' என்றும் பெயரிட்டு, ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழில் நடத்தினார்.
***
'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே...' என்ற பழமொழிக்கு, விளக்கம் என்ன தெரியுமா?
குறுகிய மனமும், சிந்தனையையும் உடையவர்களை விட, திருடர்களே மேலானவர்கள் என்பதை, இப்பழமொழி உணர்த்துகிறது.
இங்கு, குள்ளன் என்பது, உருவத்தில் குள்ளமானவர்களைக் குறிக்கவில்லை. உள்ளத்திலும், செய்கையிலும் குறுகிய எண்ணம் கொண்டவர்களைக் குறிக்கிறது.
***
'தருமம் தலை காக்கும்ங்கிறதை, நான் அனுபவப்பூர்வமா புரிஞ்சுக்கிட்டேன்...' என்றார், ஒருவர்.
'எப்படி...' என்றார், இன்னொருவர்.
'நேத்து ராத்திரி, ஒரு முகமூடி திருடன், எங்க வீட்டுக்கு வந்தான். ஒரு விறகு கட்டையை எடுத்து, என் தலையில அடிக்க வந்தான்.
'அதுக்கு முன், நான் என்கிட்ட இருந்ததையெல்லாம் எடுத்து அவன்கிட்டே தருமம் பண்ணிட்டேன். அந்த தருமம் தான், என் தலையை காப்பாத்திச்சு...' என்றார்.
ஹி... ஹி...
***
அழகாய் தலை விரித்து, அடுக்களையில் புகுந்து, விதவிதமாய் தாங்கி நின்று, பலர் முன்னே இருக்கும். அது, அடுத்த நொடி குப்பைமேட்டில் அம்போன்னு கிடக்கும்.
அது என்ன?
இந்த விடுகதைக்கான விடையை, இடமின்மை காரணமாக, வேறு பக்கம் எதிலோ நுழைத்து விட்டிருக்கிறார், பக்க வடிவமைப்பாளர். சரியான விடையை கண்டுபிடித்தவர்கள், தேட வேண்டாம். கண்டுபிடிக்க முடியாதவர்கள், ஒவ்வொரு பக்கமாக கவனமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
***