PUBLISHED ON : ஜூன் 05, 2011

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பணியில் உள்ள நண்பர் ஒருவர், அயர்லாந்தில் நான்கு மாத, 'அசைன்மென்ட்' முடித்து சென்னை திரும்பி இருந்தார். அன்று, தொலைபேசி அழைப்பு விடுத்து, 'அந்து... லென்ஸ் மாமாவையும் கூட்டிக்கிட்டு வந்துடு... அயர்லாந்தின் விசேஷ சரக்கான, 'ஜெமிசன்' அவருக்காக வாங்கி வந்திருக்கிறேன்
என்பதையும் அவரிடம் சொல்...' என்றார்.
இங்கிலாந்துக்குப் பக்கத்தில் உள்ள நாடு அயர்லாந்து. நீண்ட காலம் நம்மை போல் இங்கிலாந்திற்கு அடிமையாக இருந்த நாடு அது. அவர்களது தாய்மொழி ஐரிஷ் என்றாலும், ஆங்கிலேயர் அவர்களை ஆண்டதால், கடித்துக் குதறி ஆங்கிலம் பேசுவராம்.
ஆங்கிலேயர்கள் மீது அவர்களுக்கு இன்னும் வெறுப்பு இருக்கிறது. ஐரிஷ்காரர்களுக்கு அமெரிக்கர்களை மிகவும் பிடிக்குமாம். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் வம்சாவழியினர், அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள்தானாம்.
நண்பர் இது போன்ற விஷயங்களைச் சொல்லி, 'மாமா... ஜெமிசன் சாப்பிடுறீங்களா... ஸ்காட்டிஷ் சரக்குகளான ஜானிவாக்கர், ஷிவாஸ் ரீகல், ஹேக் சரக்கை எல்லாம் மிஞ்சி விடும் ஜெமிசன்... அவ்வளவு, 'ஸ்மூத்...' அயர்லாந்து
காரர்களிடம், 'ஜெமிசன் சாப்பிட்டேன்...' என்று சொன்னால், நம்மை அவர்களது சொந்தக்காரர்கள் போல எண்ணி, தலையில் தூக்கி வைத்து ஆடி விடுவர்...' என்று கூறியபடியே ஜெமிசனை தனக்கும், மாமாவுக்கும், 'பிக்ஸ்' செய்து கொண்டார். எனக்கு பிரிஜ்ஜில் இருந்து ஆஸ்ட்ரேலியன் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றிக் கொடுத்தார்.
அவர் ஒண்டிக்கட்டை என்பதால், தானே சமையலறைக்குச் சென்று, ஏற்கனவே, தயார் செய்து வைத்திருந்த எறாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தார். அதன் பெயர், 'பிரான்ஸ் ஷெஷ்வான்' — சீன முறை தயாரிப்பு என்றார். எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
பீங்கான் பவுல் ஒன்றில் எறாலை எடுத்து வைத்து, குட்டி குட்டியா இரண்டு முள் கரண்டிகளை அதனுள் குத்தி வைத்தார்.
அவற்றை சுவை பார்த்த லென்ஸ் மாமா, 'உன்னை கட்டிக்கப் போறவ கொடுத்து வச்சவப்பா... எவ்வளவு டேஸ்ட்டா செஞ்சிருக்க இதை...' என, பாராட்டியபடியே சுவைத்தார்.
'அவங்க கலாச்சாரம் எப்படி இருக்கு? ஆண்-பெண்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?' எனக் கேட்டேன்.
ஆரம்பித்தார்:
அங்கே மதுரை ஆட்சி தான். பெண்களின் கைதான் அயர்லாந்தில் ஓங்கியிருக்கிறது.
நம்மூரில் பெண்களை, ஆண்கள், 'ஈவ்-டீசிங்' செய்வது போல, அங்கே ஆண்களை, பெண்கள், 'ஆடம் டீஸ்' செய்கின்றனர். பெண்கள்தான், ஆண்களை, 'சைட்' அடிக்கின்றனர்.
பார்களுக்குள் நுழைந்ததும் ஆடைகளை எல்லாம் களைந்து, பொட்டுத் துணியுடன் டான்ஸ் ஆட ஆரம்பித்து விடுகின்றனர். குரூப், குரூப் ஆகவே பார்களுக்கு பெண்கள் வருகின்றனர். அந்த குரூப்பில், ஒரு பெண் மட்டும் உ.பா., சாப்பிடாமல், மற்ற பெண்களை கண்காணித்துக் கொள்கிறாள். உ.பா., தலைக்கு ஏறி ஏதாவது, 'மிஸ் பிகேவ்' செய்யாமல் இருப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்கின்றனர். அந்த பார்களில் உள்ள, 'டாய்லெட்'களில், 'பெர்பியூம்' முதல், 'காண்டம்' வரை காசு போட்டு எடுக்கும் மிஷின்கள் வைத்திருக்கின்றனர்.
ஒரே பாரில் உட்கார்ந்து முழுக்க, 'ஏற்றி'க் கொள்ளும் பழக்கம் அவர்களிடமில்லை. ஒவ்வொரு பாருக்கும் ஒரு,
'ரவுண்டு' என ஊர் சுற்றுகின்றனர்.
இந்த ஊர் பெண்கள் ஆண்களை டீஸ் செய்வதற்காக, ஆண் உறுப்புகள் போன்ற காற்றடித்த பலூன்களை தலையில் சூடிக் கொள்கின்றனர். அதே போன்ற வடிவமைப்புடைய ஸ்டிராக்களில் குளிர் பானங்களை உறிஞ்சுகின்றனர்.
அங்கு இரவு, 10:00 மணிக்கு மேல்தான், 'லைப்'பே ஆரம்பமாகிறது. சூரியன் அங்கே
மறைவதே விடிகாலை நேரத்தில்தான். இரவு, 2:00 மணி வரை பார்களில், உ.பா., சாப்பிட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
அங்கே எதற்கெடுத்தாலும், 'க்யூ'தான். டாக்சிக்காக, 'க்யூ'வில் காத்திருக்கும் நேரத்தில், பொழுது போக, இப்பெண்கள், 'க்யூ'வில் அருகில் நிற்கும் முன் பின் அறிமுகமில்லாத ஆணை கட்டி அணைத்து, இதழுடன் இதழ் பதித்து, டாக்சி வரும் வரை முத்தமிட்டு கொண்டே நிற்கின்றனர்.
'வாய் வலிக்காதா என்ன?' என, சந்தேகம் கிளப்பினார் லென்ஸ் மாமா. நண்பர் சிரித்துக் கொண்டே, 'எனக்கு அனுபவம் இல்லை...' என்றபடியே தொடர்ந்தார்:
டாக்சி வந்ததும் முன் பின் தெரியாத அந்த நபரிடம், 'பை...பை' சொல்லி கிளம்பி விடுவர் பெண்கள்...
சில நேரங்களில் அங்கு வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும், பிராட்டஸ்டண்டுகளுக்கும் தகராறு வெடித்து விடுகிறது. அப்போது, இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், சோடாபுட்டிகள் போன்றவற்றை வீசிக் கொள்ளும் அவலமும் அரங்கேறுகிறது. அந்த நேரங்களில் உயிரைக் காத்துக் கொள்ள, நாமெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு பிரச்னையைத் தவிர, மற்றபடி சுகமான நாடுதான் அயர்லாந்து என முடித்தார்.
ஜொள்ளு கொட்டி கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'பொறுப்பாசிரியரிடம் கேட்டு, 'அயர்லாந்துக்கு, 'விசா' வாங்கிடேன். பத்து நாள் அங்கு இருந்துட்டு வரலாம்...' எனக் கூறிய போது, அவருக்குத் தெரியாமல் நண்பரைப் பார்த்து, 'ஏன்யா இந்த ஆள்கிட்ட இதெல்லாம் சொன்ன?' என்பது போல் சைகை காட்டி, தலையில் அடித்துக் கொண்டேன்.
***
குப்பண்ணா, அன்று, 'குஷி' மூடில் இருந்தார்; ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
திடீரென்று —
'நாம் காய்கறிகள் உண்பது நமக்குக் கேடான விஷயம்...' என்றார்.
இதென்ன... சுத்த சைவ ஆசாமி இப்படிப் பேசுகிறாரே என நினைத்து, பேச்சற்றுப் போய், அவர் வாயையே பார்த்தேன்.
குப்பண்ணா தொடர்ந்தார்:
ஆடு, கோழி ஆகிய மாமிசம் சாப்பிடும் மக்களை, மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்ய வேண்டும்... அது எளிதாகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும், ஜிப்பா போட வேண்டும். என் மனைவி கூட என் கருத்துப்படி ஒன்றரை மாதம் வரை லுங்கி கட்டினாள்; ஆனால், வெட்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே போகவில்லை.
உடைகளில், ஆண்-பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரி உடைகள் அணிய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் ஆண் பெயரையே வைக்க வேண்டும்.
பெண்கள் ஆறடி கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகம்; தேவையற்ற தொல்லை. ஆண்களைப் போல கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்...
— இப்படி சொல்லிவிட்டு நிறுத்தி, என்னையே உற்று நோக்கினார். நான் மயங்கிச் சாயாமல் இருக்க சுவரை பற்றிக் கொண்டேன்... குப்பண்ணாவே தொடர்ந்தார்...
'இப்படியான தூக்கி வாரிப் போட வைக்கும் ஆலோசனைகள் என்னோடது அல்ல... ஈ.வெ.ரா., வோடது... அவரோட பொஸ்தகம் ஒண்ணுல இதெல்லாம் சொல்லி இருக்கார்...' என்றார்.
— நல்லவேளை, குப்பண்ணாவுக்கு எடக்கு - மடக்கா ஏதும் ஆகல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்!
ஈ.வெ.ரா.,வைப் பற்றி குப்பண்ணா இப்படிக் கூறியதும், எப்போதோ, யாரோ அவரைப் பற்றி கூறிய இன்னொரு சம்பவம் நினைவில் வந்தது. அது:
ஆற்காட்டில், திராவிடக் கழக சார்பான பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஈ.வெ.ரா., வந்திருந்தார். ஆற்காடு தோல் தொழிலுக்குப் பேர் பெற்ற நகர் என்பது தான் தெரியுமே! கூட்டம் முடிந்த பிறகு, கழக அன்பர் ஒருவர், 'ஐயா... இது உங்களுக்காக என் கையால தயாரிச்சது. இங்கேயே இதை நீங்க போட்டுக்கணும்!' என்று, ஒரு ஜோடி மிதியடியை அவர் காலடியில் வைத்தார்.
ஈ.வெ.ரா, அதைப் போட்டுப் பார்த்தார்; அளவு சின்னதாய் இருந்தது. அன்பர் நெளிந்து, 'சைஸ் தப்பாப் போச்சு; இப்ப அளவு புரியுது. அடுத்த வாட்டி வர்றப்ப கரெக்ட் சைசா செய்து வைக்கிறேன்யா...' என்று எடுத்துக் கொள்ளப் போனார்.
ஈ.வெ.ரா., அவரை அவசரமாய் தடுத்து, 'வேணாம்... வேணாம்... இது இருக்கட்டும்; மணியம்மைக்குச் சரியா இருக்கும். நான் அடுத்த வாட்டி வர்றப்ப, என் சைசுக்குத் தச்சுக் கொடு...' என்று அதை எடுத்து வைக்கச் சொல்லி விட்டாராம்!
— கத்துக்கணும்!
***
