
பா - கே
சென்னை மெரினா கடற்கரை...
குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,வின் நினைவிடம் திறப்பு விழா என, 'கல கலத்து' போன, 'பீச்' அடுத்து வந்த ஞாயிறன்று, சகஜ நிலைக்கு திரும்பியிருந்தது.
நான், லென்ஸ் மாமா, குப்பண்ணா, நடுத்தெரு நாராயணன், ராமசாமி அண்ணாச்சி, இன்னும் இரு நண்பர்கள் சூழ, 'பீச் மீட்டிங்' களை கட்டியிருந்தது.
கேரட், மாங்காய் சேர்த்த பட்டாணி சுண்டலை, வீட்டிலேயே தயார் செய்து, பெரிய டிபன் பாக்ஸ் நிறைய எடுத்து வந்திருந்தார், குப்பண்ணா; செம, 'டேஸ்ட்!'
பாதி டப்பா காலியானதும், அதை அப்படியே பதுக்கி வைத்துக் கொண்டார், லென்ஸ் மாமா.
நான், நாராயணன் மற்றும் குப்பண்ணா தவிர்த்து மற்றவர்கள், தங்கள், 'வேலை'யில் மும்முரமாயினர்.
'அந்து... எனக்கு ஒரு சந்தேகம்பா... தேர்தல் வரப்போகுது. சமீபத்தில் நடந்து முடிந்த, அமெரிக்க அதிபர் தேர்தலில் கூட, முன்னாள் அதிபர் டிரம்ப்பும், இன்றைய அதிபர் ஜோ பைடனும் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
'வட மாநிலங்களில் எப்போதாவது அத்திப்பூத்தாற் போல், ஒரே மேடையில் விவாதம் நடந்ததை கேள்விப்பட்டிருக்கிறேன்.
'சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட, 'என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா...' என்று, இ.பி.எஸ்.,சுக்கு அறைகூவல் விடுத்தார். இ.பி.எஸ்.,சும், எதிர் சவால் விட்டார். ஆனால், அது அரங்கேறாது போலிருக்கே...' என்றார், குப்பண்ணா.
'இந்த சவால் எல்லாம் இன்று, நேற்றா நடக்கிறது... அண்ணாதுரை - காமராஜர், கருணாநிதி - எம்.ஜி.ஆர்., கருணாநிதி - ஜெ., ஸ்டாலின் - இ.பி.எஸ்., என்று தொடர்ந்தபடிதானே இருக்கிறது. அதெல்லாம் சும்மா, மக்களை திசை திருப்ப...' என்றார், நாராயணன்.
'ஏலே... ரொம்ப நாளைக்கு அப்புறம், ஒண்ணா, 'பீச்'க்கு வந்திருக்கோம். நடக்காத விஷயத்தை பேசி, 'மூடை' கெடுக்காதிலே... வேறு, 'சப்மிட்' பற்றி பேசும்ல...' என்று, குரல் கொடுத்தார், ராமசாமி அண்ணாச்சி.
'ஓய்.... அண்ணாச்சி, இங்கிலீஷில் பேசாதீரும் என, பலமுறை சொல்லிட்டேன்... நீர் கேட்கறதே இல்ல. அது, 'சப்மிட்' இல்ல ஓய்... 'சப்ஜெக்ட்!' அதாவது, 'வேறு தலைப்புல பேசுங்க'ன்னு, தமிழில் சொல்லலாம்ல... எதுக்கு இந்த வீண் பெருமை...' என்று, கடிந்து கொண்டார், மாமா.
'இவங்க நச்சரிப்பு தாங்கலே அந்து... எங்கயாவது தேர்தல் கூட்டம் போடுற இடத்துல, மக்கள் கூட்டத்தோட இவங்கள தள்ளி விட்டுடணும்...' என்றார், குப்பண்ணா.
'தேர்தல் கூட்டம் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது...' என்று கூற ஆரம்பித்தார், நாராயணன்.
ஜன., 14, 1962ல், மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில், முத்துராமலிங்க தேவர் பேசினார். அதில்:
சாலை போட்டோம், செப்பனிட்டோம், குளம் வெட்டினோம் என்றெல்லாம் பேசுகின்றனர். சர்க்கார் என்றால் இதெல்லாம் செய்வதில் அதிசயமென்ன... செய்வதற்காகதானே சர்க்கார்?
மக்களிடம், வரி வசூலித்து, அதை நெறியோடு நல்லவற்றை செய்யத்தானே இவர்களுக்கு அதிகாரமும், இதர வசதிகளும்... இவர்கள், அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்றால், வேறு எதைச் செய்யத்தான் ஆட்சியில் இருக்கின்றனர்.
அபிவிருத்தி இலாகா என்று, ஆங்காங்கு நிர்மாணித்திருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று, அதற்கு பெயர் வைத்திருக்கின்றனர். ஆனால், அந்த, 'டெவலப்மென்ட் ஆபீசர்'கள், தங்கள் கட்சியைத்தான், 'டெவலப்' செய்கின்றனரேயன்றி, மக்களையோ, கிராமங்களையோ அல்ல.
திட்டங்களின் பெயரால், நாட்டுக்கு கடன் சுமைதான் ஏறுகிறது. கோடி கோடியாக கொட்டி, அணை கட்டுகின்றனர். கட்டிய அணை, திறப்பு விழாவுக்குள் ஓட்டை கண்டுவிடுகிறது. கேட்டால், உடைப்பல்ல, கசிவு என்று சொல்கின்றனர்.
ஜனநாயகத்தை, கோட்டா - பர்மிட் நாயகமாக ஆக்கிவிட்டனர். கடமையுணர்ச்சி கொண்ட நல்லவன் பயப்படுகிறான். கேடுபுரியும் எவனோ சிக்கிக் கொள்கிறான். ஏன் வம்பு என்று ஒதுங்கி விடுகிறான், நல்லவன்.
இவர்களை எதிர்த்து போரிட, மக்களிடம் தெம்பில்லை. அந்த அளவுக்கு வாழ்க்கை பிரச்னை, ஒவ்வொருவரையும் அழுத்துகிறது. இப்படியே போனால், நாட்டின் கதி என்னவாகும்?
ஓட்டு போடுகிற வகையில், மக்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். அது மகா பாவம்.
சினிமாவுக்கு, ஐந்து ரூபாய் செலவிட்டு, போய் பார்த்து வருகிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மட்டும், யாராவது பணம் தருவர் என்று எதிர்பார்க்கலாமா?
காசுக்காக காத்திராமல், நம் சொந்த தேசிய திருவிழாவுக்கு என்று நினைத்து, அவரவர் வசதி, துாரத்துக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ, மூன்றோ எடுத்துப் போய் செலவிட்டு, ஓட்டு போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.
- இப்படி நாராயணன் கூறி முடித்ததும், 'அடடா... எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசிபா இந்த தேவரு. இப்ப நடப்பதை, அக்காலத்திலேயே எவ்வளவு துல்லியமா கணிச்சிருக்கார்...' என்று, சிலாகித்தபடி கலைந்து சென்றனர்.
நல்ல தகவல் கிடைத்த திருப்தியில், நானும் நடையை கட்டினேன்.
ப
நடைபாதையில் கடை விரித்திருக்கும் கைரேகை பார்ப்பவர்களிடம், கையைக் காட்டுவது பலருக்கு பழக்கம். அப்படிப்பட்ட ஒரு ஜோதிடரிடம், இளைஞர் ஒருவர் கையைக் காட்டி, 'இன்று நான் நினைப்பது நடக்குமா?' என்று கேட்டார்.
அவரும் இவர் கையைப் பார்த்து, 'எல்லாம் நன்றாக இருக்கிறது. நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்...' என்றார்.
'நிச்சயமாக நடக்குமா?'
'நடக்கும்...'
'பிரச்னை எதுவும் இருக்காதே?'
'இருக்காது...'
'என் எதிரி, சண்டைக்கு வர மாட்டானே?'
'மாட்டான்...'
'கையை பார்க்க கட்டணம் எவ்வளவு?'
'பத்து ரூபாய் தான்...'
'இதோ, 10 ரூபாயைப் பிடியுங்கள். இப்போது நான், உங்கள் மகளைத்தான் அழைத்துக் கொண்டு ஓடப் போகிறேன்...' என்றார், அந்த இளைஞர்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!