
பி. ராஜேஸ்வரி, மதுரை: ஒருவேளை, தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால், மதுவிலக்கை அமல்படுத்துமா?தேர்தல் அறிக்கையில் கூட, அதைக் கூற மாட்டார்கள் என நம்புகிறேன்; அரசுக்கு அதிக பண பலத்தை கொடுக்கக் கூடிய துறை, அது! அதுமட்டுமல்லாமல், மதுப் பிரியர்களின் ஓட்டுக்களை இழக்க விரும்பாது!- பொறுத்திருந்து பாருங்களேன்!
எஸ். சரவணன், மன்னார்குடி: 'நான் ரெடி... மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா?' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், இதேபோல முதல்வர், இ.பி.எஸ்.,சும் சவால் விட்டுள்ளனரே... இது நடக்குமா?நடக்கவே நடக்காது... இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... இதை எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றமே அடைவர்!
* ஆர். கர்ணன், நெய்வேலி:தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சை கேட்கலாமா?வரப் போகிறதே தேர்தல்; அதனால், புளுகத் தொடங்கி விடுகின்றனர்! இந்த நேரத்தில் அவர்கள் பேச்சைக் கேட்பது, நேரத்தை வீணடிக்கும் செயல்!
ஆர். ஷம் சுன்னிசா, சிதம்பரம்: கேரளாவில், 21 வயது பெண், மேயராகி, சாதனை படைத்துள்ளாரே...வாழ்த்துக்கள் அவருக்கு! பெண்கள் முடிவு செய்தால் சாதிக்க முடியும் என்பதை, நிரூபித்துக் காட்டியுள்ளார்.ஏன், ஷம் சுன்னிசா... நீங்களும் உங்கள் நகராட்சிக்கு அடுத்த முறை முயலலாமே!
லெ.நா. சிவக்குமார், சென்னை: நீங்கள் மும்முரமாக கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கும்போது, யாராவது, டீ - காபி கேட்டால், கோபம் வருமா?வராது! கேள்விக்கான பதிலை மனதில் நினைத்துக் கொண்டே, 'சர்வ்' செய்வேன்; பின்னர் பதிலை எழுதி விடுவேன்!
ஆர். கோபால், வேலுார்: சுற்றத்தாரும், நண்பர்களும் என்னை, 'கர்வி' என்கின்றனரே...நம் திறமையை வெளிப்படுத்தும்போது சிலர், 'கர்வி' என்கின்றனர். நமது தன்னம்பிக்கையை, நமக்கு வேண்டியவர் போல் காட்டிக் கொள்ளும் சிலர், பின்னால் பேசும் பேச்சு இது! இதனால், நீங்கள் துன்பம் கொள்ள வேண்டியதில்லை!
* எஸ். ராதா, மதுரை: ரஜினி, 'மாட்டேன்' என்று விட்டார். ஆனால், கமலுக்கு ஆதரவு தெரிவித்தால்...தான் கட்சி ஆரம்பித்தால், தமிழக அரசியலை மாற்ற முடியும் என்று கூறியவர், இப்போது மறுத்து விட்டார்... போகட்டும்...அவர், கமலுக்கு ஆதரவு தெரிவித்தால், ரஜினியின் விருப்பப்படியே, தமிழகத்தில் ஓரளவு மாற்றம் ஏற்படலாம்... ரஜினி ரசிகர்கள் ஓட்டு, கமல் கட்சிக்கு விழலாம்!