
நேர் கோடுகளாக ஆரவாரத்துடன் விண்ணையும், மண்ணையும் இணைத்து கொட்டிக் கொண்டிருந்த மழையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், கவுரி.
சிறு வயது முதலே, அனாதை விடுதி தான் இவளது வாசம். பொறுப்பில்லாத பெற்றோரால் சிறு வயதிலேயே அனாதையானவள். பணத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் தடம் மாறியவள், அம்மா.
அம்மாவின் குணத்தை சாக்காக வைத்து, தனக்கென இரண்டாம் குடும்பம் அமைத்துக் கொண்டார், அப்பா. கடைசியில், அனாதையாக நின்றவள், இவள் தான்.
ஏதோ நல்ல காலம். அத்தை மட்டும் ஆதரவு காட்டி, கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்த்து, மதிய உணவு திட்டத்திலும் சேர்த்து விட்டாள். இரவு உணவு, அத்தை வீட்டில் தான். துாக்கமும் அங்கே தான். அத்தையைத் தவிர வேறு யாருக்கும் அவளைப் பிடிக்கவில்லை.
'ஓடு காலி பெற்ற பெண். இது, எங்கே யாருடன் ஓடுமோ?' என்றாள், அத்தையின் மாமியார்.
அத்தையின் கடைசி மகன் கைலாஷ், கவுரியின் அலுமினிய சாப்பாட்டுத் தட்டில் தான், தெரு நாய்க்கே சாப்பாடு வைப்பான். அவளை அடிப்பான். கிள்ளுவான். ஓடும்போது காலால் தடுத்து, விழ வைப்பான். எல்லாவற்றையும் பார்த்து அமைதியாக இருப்பதை தவிர, அத்தையால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
கடைசியில், அவளாலேயே பொறுக்க முடியாமல், யார் யாரையோ பிடித்து, அனாதை விடுதியில் சேர்த்து விட்டாள். நல்ல மனம் படைத்தோரால் நடத்தப்படும் இல்லம்.
வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல், எப்போதாவது கொஞ்சம் பலகாரங்களுடன் வந்து பார்த்துப் போவாள், அத்தை. அவள் எடுத்து வரும் பலகாரங்களை விட, அத்தை கூறும் ஆறுதலான வார்த்தைகள் தான், மனதிற்கு தைரியம் தரும்; மயிலிறகால் வருடுவதைப் போல் இருக்கும்.
'நீ, எவ்வளவு கஷ்டப்படுகிறாயோ, அவ்வளவு சுகமாக இருப்பாய்... எவ்வளவு கஷ்டம், ஏமாற்றம் வந்தாலும், பொறுமையாக இருக்க வேண்டும். நல்ல புத்தகங்களே, நல்ல நண்பர்கள். படிப்பு மட்டுமே உன்னை காப்-பாற்றும்...' என்பாள். அத்தையின் வார்த்தைகளே, வேத வாக்கானது.
ஆழ்ந்த யோசனையில் இருந்த, கவுரியின் தோளின் மேல் யாரோ கை வைக்கவும், திரும்பிப் பார்த்தாள்.
''உன்னை பார்க்க, 'விசிட்டர்ஸ்' வந்திருக்கின்றனர்?'' என்றாள், அவளுடைய தோழி, லட்சுமி.
''எனக்கு யார் வரப்போகின்றனர்... அத்தை தான் வந்திருப்பார். நான் போய் பார்க்கிறேன்,'' என்றவாறு, 'விசிட்டர்ஸ்' அறைக்குள் நுழைந்தாள்.
இரண்டு ஆண்கள் நின்றிருந்தனர். யாரென்று தெரியவில்லை. விடுதிக்கு வந்து பல ஆண்டுகள் ஆனதால், வீட்டிற்கே போகாததாலும், அவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை.
''கவுரி, சீக்கிரம் கிளம்பு... அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. உன்னை பார்க்க வேண்டுமாம்,'' என்றான், ஒருவன்.
தயக்கத்துடன், ''எனக்கு, நீங்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை,'' என்றாள், கவுரி.
''நான் தான் சங்கரன். உன் அத்தையின், பெரிய மகன். இவர், உன் அப்பா. இப்போது அடையாளம் தெரிந்ததா... அம்மாவிற்கு உடம்பு முடியல. எங்களுக்கு கூட உன்னை அடையாளம் தெரியவில்லை. நன்றாக வளர்ந்திருக்கிறாய்,'' என்றான், லேசான புன்னகையுடன்.
அவள் அப்பா ஒன்றும் பேசவில்லை. சம்பந்தமேயில்லாத ஆள் போல் பார்த்துக் கொண்டிருந்தார்.
கவுரிக்கும் அவரிடம் ஏதும் பேசத் தோன்றவில்லை.
ஆசிரமத்துத் தலைவியிடம் அனுமதி பெற்று, ஒரு, 'செட்' துணியை எடுத்து கிளம்பினாள்.
''இப்போது என்ன படிக்கிறாய், கவுரி?'' என்றான், சங்கரன்.
''பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கிறேன் மாமா.''
அதற்கு மேல் யாரும் ஒன்றும் பேசவில்லை.
வீட்டை அடைந்ததும், ''அத்தை...'' என்றழைத்தபடியே வேகமாக உள்ளே போனாள். படுத்திருந்தவள், மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.
''கவுரி... எங்கே உன்னைப் பார்க்காமலே போய் விடுவேனோ என்று நினைத்தேன். நன்றாக இருக்கிறாயா அம்மா?'' என்று கேட்டவள், மிகுந்த ஆயாசத்--துடன் கண்களை மூடிக்கொண்டார்.
எல்லாரும் அருகில் இருக்கும்போது, போய் சேர்ந்து விட்டாள்.
கவுரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே ஒரு ரத்த பந்தமும் பிரிந்து விட்டது. யாரும் அவளிடம் பேசவில்லை. தன் அப்பாவைப் பார்த்தாள். அவர், தன் இரண்டாவது மனைவியுடனும், இரண்டு பெண் குழந்தைகளுடனும் நின்றிருந்தார்.
ஒரு பெண்ணிற்கு, 12 வயதும், மற்றொரு பெண்ணிற்கு, 10 வயதும் இருக்கும். எல்லாரையும் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, வீட்டை விட்டு வெளியேறினாள்.
சிறிது துாரம் சென்றவுடன், ''கவுரி...'' என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சங்கரன் மாமாவைப் போலவே இருந்தான். ஆனால், வாலிப வயது. நெற்றியைச் சுருக்கி, யாரிவன் என்று யோசித்தாள்.
''கவுரி, நான் கைலாஷ். அதற்குள் மறந்து விட்டாயா?'' என்றான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. 'ஷேர் ஆட்டோ' எதிரில் வர, அதில் ஏறி தன் ஆசிரமத்திற்கு சென்று விட்டாள்.
அத்தை மறைந்த பிறகு, அவள் உபதேசங்களே உயிராகின. ஏற்கனவே வகுப்பில் முதல் மாணவி. அந்த ஆசிரமத்து நிர்வாகி ஒருவர், அவள் மேற்படிப்பிற்கு உதவி செய்ய, நான்காண்டு தொழில் நுட்பக் கல்லுாரி படிப்பை முடித்தாள்.
தான் தேர்ந்தெடுத்த கணினி துறையில், முதல் மாணவியாகத் தேறி, ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலையிலும் சேர்ந்தாள். ஆனால், அவள் மனம் மட்டும் அக்கினிக் குஞ்சாக, அடிபட்ட பறவையாக எதையோ தேடி அலைந்தது.
'என் அம்மா செய்த தவறுக்கு, நான் வெறுக்கப்பட்டேன். சூர்ய புத்திரனான கர்ணன், தேரோட்டி மகன் ஆனாற்போல், என்னை ஒதுக்கிய எல்லாரும் வாழ்த்த வேண்டும். என் பெற்றோர் போன்றவர்கள், தண்டனை பெறவேண்டும்.
'என்னைப் போன்ற அனாதைகள், நல்ல கல்வியும், வாழ்க்கையும் பெறவேண்டும். அதற்கு அதிகாரம், என் கைக்கு வரவேண்டும். நான், ஐ.ஏ.எஸ்., அதிகாரியானால் தான் ஓரளவு என் கனவு நிறைவேறும்...' என்று முடிவு செய்தாள்.
ஒரு நாள் -
''கவுரி, இப்போது நீ நிறைய மாறிவிட்டாய். முன்பெல்லாம் ஓரளவு சிரிப்பாய், பேசுவாய். இப்போது உன்னிடம் இரண்டும் இல்லை. எப்போது பார்த்தாலும் படிப்பு; இல்லையெனில் சிந்தனை. ஒருமுறை தான் பிறக்கப் போகிறோம். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியேன்,'' என்றாள், தோழி லட்சுமி.
''வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டேன். பெற்றோரால் ஏமாற்றப்பட்டேன். அம்மா மோசமானவள் என்றால், அப்பாவும் அதே தவறு தானே செய்தார். இருவரும், தனித்தனியே என்னைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். இதுபோன்ற நிலைமை இனி உருவாகக் கூடாது. அதற்கு எனக்கு அதிகாரம் வேண்டும்.
''நம் ஆசிரமம் நடத்தும் நல்ல நிர்வாகிகள் துணை வேண்டும். அதற்குத்தான் இந்த, ஐ.ஏ.எஸ்., படிப்பு,'' என்று முடித்தாள்.
'மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்...' என்ற வாக்குப்படி, படித்து, ஐ.ஏ.எஸ்., தேறி, நிர்வாக அதிகாரியும் ஆகிவிட்டாள்.
அரசு கொடுத்த அதிகாரங்களை நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டாள். சுயநலத்திற்காக பிரிந்து போகும் பெற்றோரை சாடினாள். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு, தொண்டு நிறுவனங்களின் மூலமாக வசதி, வாய்ப்பு பெருகச் செய்தாள்.
ஒரு நாள், இவளைப் பார்க்க வந்தாள், லட்சுமி. கையில் ஒரு தமிழ் செய்தித் தாளை சுருட்டி வந்தவள், அதை கோபத்துடன் அங்கேயிருந்த சோபாவில் வீசி எறிந்தாள்.
லேசான சிரிப்புடன், 'ப்ரிஜ்'ஜைத் திறந்து, சமையல்காரம்மா அவளுக்காக புதிதாக தயாரித்து வைத்திருந்த பழ ரசத்தை, ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள்.
''இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். முதலில் இந்த பேப்பரைப் படி. நீ, அனாதையானதால் தான் உனக்கு இப்படி ஒரு அக்கறை என்று, 'கிரிட்டிசைஸ்' செய்து எழுதியிருக்கிறான் பார்...'' என்றாள், லட்சுமி.
''அது சரியான விளக்கம் தானே... அதற்கு ஏன் கோபித்துக் கொள்கிறாய்?''
''உன் அம்மா பிரிந்து போனது, அவர், இப்போது யாருடன் வாழ்கிறார்; உன் அப்பாவின் பெயர், அவர் குடும்பம். இருவருமே உன்னை ஒதுக்கி, ஆசிரமத்தில் சேர்த்தது எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் போட்டிருக்கிறான் பார்...'' என்றாள், லட்சுமி.
''நல்லது தான். அவர்கள், எனக்கு செய்தது துரோகம் இல்லையா?''
''பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று, பாரதி கோபப்படவில்லையா... என்னால், அன்று கேள்வி கேட்க முடியவில்லை. கோபப்பட முடியவில்லை. இன்று, பத்திரிகைக்காரன் கிழிக்கிறான். நல்ல விஷயம் தான்,'' என்று சிரித்தாள், கவுரி.
அவளையே வெறித்துப் பார்த்தாள், லட்சுமி.
''அம்மா, அப்பாவை பழி வாங்கு--கிறாயா?''
''நீ ஏன் கோபித்துக் கொள்கிறாய், லட்சுமி. என்னை அனாதையாக்கி, இவர்கள் வழி மாறிப் போனதால் தான், திருமணம் என்றாலே ஒரு வெறுப்பு. வாழ்க்கையில் எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு விலை தரவேண்டுமல்லவா... அதைத்தான் இப்போது கொடுத்திருக்கின்றனர்,'' என்று சிரித்தாள், கவுரி.
'கவுரி என்ன பாரதியாரின்
அக்கினிக் குஞ்சோ...' என்று நினைத்தாள், லட்சுமி.
பானுமதி பார்த்தசாரதி