
பா - கே
குப்பண்ணா வீட்டுக்கு சென்றிருந்தேன். நான்காம் வகுப்பு படிக்கும் அவரது பேத்தி, 'ஆன்லைன்' வகுப்பை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆசிரியை கேள்விகள் கேட்க, குப்பண்ணாவின் பேத்தி, 'டாண் டாண்' என்று பதில் கூறி, அசத்தினாள்.
வெளியே வந்த குப்பண்ணா, 'இந்த காலத்து குழந்தைகள், ரொம்பவே புத்திசாலிகளாக இருக்குதுங்க, மணி. என் பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியறதில்லை. இது, இங்க மட்டும் அல்ல, உலகம் முழுக்கவே இதே நிலை தான்...' என்றார்.
ஒரு வெளிநாட்டு பத்திரிகையை எடுத்துக் காட்டி, 'இதுல ஒரு கட்டுரை வந்திருக்கு... 'கடவுள் நேரில் வந்தால், என்ன கேள்வி கேட்பீர்கள்...' என்று, சில குழந்தைகளிடம் கேட்டுள்ளனர்.
'குழந்தைகள் கேட்ட கேள்விகள் என்ன தெரியுமா...' என, தொடர்ந்தார்:
* எல்லாமே பார்த்த மிருகங்களாகவே இருக்கே... நீ ஏன், புது மிருகங்களை படைக்கலே?
* நீங்க நிறைய பிறவிகளை எடுத்து, ஏகப்பட்ட அரக்கர்களை கொன்னிருக்கீங்க. அப்படிப்பட்ட அரக்கர்கள் இப்பவும் இருக்காங்களா... அப்படி இருந்தால், அவர்களை எப்ப அழிக்க வருவீங்க?
* நாடுகளை பிரிக்க, வரைபட, 'மேப்'களில் கோடுகள் உள்ளன. அந்த கோடுகளை போட்டது யார்?
* நீங்கதான் கடவுள்ன்னு, உங்களுக்கு எப்படி தெரியும்?
* எங்க வீட்டில் மொத்தமே நான்கு பேர் தான். அவங்களை என்னால் நேசிக்க முடியலே. உலகத்தில் உள்ள அவ்வளவு மக்களையும் நீங்க நேசிக்கிறீங்களே... எப்படி?
* படுத்துண்டா, அன்பா பேசிக்கிறாங்க. எழுந்தா, சண்டை போடுறாங்க... எல்லா அப்பா - அம்மாவுமே இப்படிதானா?
'கடவுளே பதில் கூற முடியாமல் திணறுவார் தானே. நாம் எந்த மூலைக்கு, மணி...' என்று அங்கலாய்தார், குப்பண்ணா.
இக்கால குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை எண்ணி, மலைத்துப் போனேன்.
பா
செண்பகா பதிப்பகம், எம்.ஏ.பழனியப்பன் எழுதிய, 'அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு' நுாலிலிருந்து:
கடந்த, 1938 - 40ம் ஆண்டுகளில், இரண்டாவது உலகப் போர் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.
அப்போது, அமெரிக்காவின், நியூயார்க் நகரில், உலக கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த பொருட்காட்சியை, 10 நாட்கள் வரை சுற்றிப் பார்த்தார், ஜி.டி.நாயுடு.
அங்குள்ள களியாட்டங்களை தவிர்த்து, அறிவுக்கும், தொழிற் பயிற்சிக்கும் அடிப்படையான இடங்களையும், பொருட்களையும் ஒன்று விடாமல் பார்த்து, ஆராய்ந்து அறிந்தார்.
ஜி.டி.நாயுடுவை, காந்தம் போல் கவர்ந்து இழுத்து ஆட்கொண்டு விட்டது, கண்காட்சி. அதன் காரணமாக, தொடர்ந்து ஆறு வாரங்கள், அமெரிக்காவில் தங்கியிருந்தார். அதனால், கையிலிருந்த பணம் கரைந்து பற்றாக்குறை ஏற்பட்டது.
அங்கு, தொழில் கல்லுாரியில் சேர்ந்து படித்தால், படிப்பதற்கு சம்பளமாக பணம் கொடுப்பதையும், பல தொழில் நுணுக்கங்களை கற்றுத் தருவதையும் கேள்விப்பட்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அங்குள்ள தொழில் கல்லுாரி ஒன்றில் சேர்ந்தார், ஜி.டி.நாயுடு.
பட்டதாரிகளை தான் அதுபோன்ற பயிற்சிகளுக்கு ஏற்பது என்ற, விதியை தளர்த்தி, பள்ளிப் படிப்புப் பெறாத, நாயுடுவை, மாணவராக ஏற்றது, அக்கல்லுாரி.
அமெரிக்காவில், பண்புள்ள மனிதராகவும், ஆர்வம் கொண்ட தொழில் நிபுணராகவும் இருந்து, தொழிற் பயிற்சி பெற்ற நேரம் போக, சொற்பொழிவுகளும் செய்து வந்தார்.
கூட்டத்தில், சமுதாயம், சமத்துவம், வேதாந்தம், கலாசாரம் இவற்றைப் பற்றி பேசினார். இவருடைய பேச்சு, அமெரிக்கர்களின் சிந்தனையை கிளறி விட்டன.
'எல்லா நாடுகளுக்கும் அனேக எதிரிகள் இருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் புகை பிடிக்கும் வழக்கமே பெரிய எதிரியாகும். நாகரிக சிகையலங்காரமும், அழகிய ஆடைகளும், பவுடர் பூசிய முகமும், வர்ணம் தீட்டிய உதடும் ஒருபோதும் அழகு தராது...' என்றார்.
ஜி.டி.நாயுடுவின் பேச்சை, 'மனதிலே ஒழுங்காகவும், உண்மையாகவும், பெருந்தன்மையாகவும் இருப்பதாக எண்ணினால் போதும். அதுவே இயற்கையான அழகு' என்று, தலைப்பு செய்தியாக நாளிதழ்களில் வெளியிட்டனர்.
நாயுடுவின் பேச்சை வெளியிட்ட அந்த பத்திரிகைகள், அச்செய்திக்கு என்ன தலைப்பு கொடுத்திருந்தனர் தெரியுமா...
'அமெரிக்க அழகிகளின் நாகரிகப் போக்கை இந்தியர் கண்டிக்கிறார்!' என்பதே.
இந்த தலைப்பு, பெண்களிடையே பெரிய பரபரப்பைத் துாண்டி விட்டது.
பத்திரிகையில், ஜி.டி.நாயுடுவின் பேச்சை படித்தவர்கள், அவரை சந்திக்க ஆர்வம் கொண்டனர். வேறு சில பத்திரிகைகளும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு, பிரபலமாக்கின.
அன்று, புத்தாண்டு தினம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிக் கொண்டிருந்தன. சிகாகோ நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்நகரில், கவுரவமான ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார், ஜி.டி.நாயுடு.
நாயுடு தங்கியிருந்த ஓட்டலில் நடைபெற்ற புத்தாண்டு தின கொண்டாட்டங்கள், அவருக்கு மகிழ்ச்சியை ஊட்டவில்லை.
பார்வையாளராக சிறிது நேரம் இருந்து, தன் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டு, இருக்கையில் அமர்தார். அப்போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவை திறந்தார், நாயுடு.
குடிபோதையுடன் நான்கு பெண்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களை வெளியே தள்ளி கதவை சாத்தினார்.
ஆனால், அந்த பெண்கள், மீண்டும் வந்து கதவை பலமாக தட்டினர். வேறு வழியின்றி, கதவை மீண்டும் திறந்து விட்டார். அவருக்கோ, அந்த பெண்களின் செய்கைகள் ஆச்சரியமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. குடிபோதை தலைக்கேற, ஒவ்வொருவராக கீழே விழுந்தனர்.
அன்றிரவு, அந்த பெண்களுக்கு, குடிபோதையில் நல்ல துாக்கம்;
ஜி.டி.நாயுடுவுக்கோ, அன்றிரவு துாக்கமே இல்லை. பெண்களின் செய்கையை வேடிக்கை பார்த்தபடியே இரவை தள்ளினார்.
மறுநாள் காலை, தாங்கள் குடி வெறியால், முந்திய நாள் செய்த தவறை மன்னிக்கும்படி கேட்டு, அங்கிருந்து கிளம்பினர், அப்பெண்கள்.

